அமைச்சர்கள் ரவூப் ஹகீம், ரிஷாட் பதியுத்தீன் ஆகியோர்களுக்கு ஓர் திறந்த மடல்!

haஅஸ்ஸலாமு அலைக்கும்

இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு இருந்து வரும் பேரினவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், சமூகத்தை துச்சமென மதித்து, அரசாங்கத்தின் ஆசனத்தில் அங்கத்துவம் பெற்றுவரும் அமைச்சர் ரவூப் ஹகீம், மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் ஆகியோர்களுக்கு இந்த திறந்த மடலை எழுதுகிறேன்.

தம்புள்ளை பள்ளிவாயல் விடயம் எங்கள் கண்களை விட்டு மறைக்கப்பட்டு, வருடம் ஒன்றானாலும், இன்று அப்பள்ளிவாயலை அகற்றி, அங்கு ஓர் தேவையில்லாத நெடுஞ்சாலையினை அமைப்பதற்கான பாரிய முயற்சிகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது.

இப்பள்ளிவாயல் விடயமாக ஆரோக்கியமான சில கருத்துக்களை அரசாங்க சார்பானவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தாலும், குறிப்பாக உங்கள் கண்களில் மண்தூவிவிட்டு, உங்கள் முதுகுகளைத் தடவிவிட்டு வரும் இந்த அரசாங்கத்தின் மற்றுமொரு விசப் பல்லை உங்களால் கண்டுகொள்ள முடியாமல் இருக்கின்றது.

குறித்த தம்புள்ளைப் பள்ளிவாயலை அகற்றி, அதே இடத்தில் ஓர் நெடுஞ்சாலை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்வது என்பது இலேசுபட்ட காரியமல்ல!

ஓர் சாதாரண அரசாங்க உத்தியோகத்தரிலிருந்து ஜனாதிபதிவரை இவ்விடயம் எடுத்துச் செல்லப்பட்டிருக்கவேண்டும்.

இதுவரைக்கும் இந்த விடயத்தை தட்டிக்கேட்க முடியாமலிருக்கும் நீங்களும், உங்களைப்போன்ற ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும் ஓர் தேர்தலுக்காக சண்டைபிடித்து முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக்கொடுத்து வருகின்றீர்கள்.

குறிப்பாக வடமாகாணத்தில் நீங்கள் இருவரும் ஓர் கதிரைக்காக போடும் சமூக விரோத கூச்சல்களுக்கு அளவே இல்லாமல் போய்விடுகிறது.

அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை எதிர்க்கும் அமைச்சர் ஹக்கீமின் செயற்பாடு வினோதமானதே! தேர்தல் காலங்களில் மாத்திரம் அரசாங்கத்தை விமர்சித்தாலும், ஏனைய காலங்களில் அரசாங்கத்தின் ஓர் உயர் விருந்தினராக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் அரசாங்கத்தின் ஓர் கௌரவ உறுப்பினர் என்பதில் அமைச்சர் ஹகீமுக்கு எந்தக் குறைச்சலுமில்லை!

அரசாங்கத்தில் இருந்துகொண்டு, ஜனாதிபதிக்கு ஜால்ரா போடும் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனுக்கும் அரசாங்கத்தில் ஓர் தனிமரியாதை, வட கிழக்கின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களைவிடவும் இருக்கின்றது.

வடக்குத் தேர்தலை இவர்கள் நினைத்தால், அரசாங்கத்தை பேரம் பேசுதல் மூலம் சமூகத்தின் எத்தனையோ விடயங்களை வென்றெடுக்க முடியும்.

இவற்றைச் செய்யாது, ஜனாதிபதியைப் புகழ்வதிலும், அல்லாஹ்வைவிடவும் ஜனாதிபதியையும், அவரது அரசாங்கத்தையும் உயர்த்தி தேர்தல் மேடைகளில் பேசிவருவதையும் காண முடிகிறது.

தேர்தல் முடிந்தால் அரசாங்கத்துக்குத் தேவை ஓர் வடக்கு வெற்றியே! அதன் பின்னர் அங்கு என்ன நடக்கும் என்பதும் தென்னிலங்கையில் முஸ்லிம்களுக்கு என்ன நடக்கும் என்பதும் தெரிந்த விடயம்.

எனவே, இலங்கையில் முஸ்லிம்களுக்கு பல அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தூற்றி விமர்சிக்க முனைவது, அன்னிய சமூகத்துக்கு முஸ்லிம் சமூகத்தை தாரை வார்த்துக்கொள்வதாக நினைக்க முடிகிறது.

எனவே தயவு செய்து, இலங்கை முஸ்லிம்களுக்கு  இருக்கும் அச்சுறுத்தல்களை ஜனாதிபதியிடம் வலியுறுத்தி அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள நீங்கள் இருவரும் முயற்சிக்க வேண்டும். அதன் மூலமே முஸ்லிம்களின் வாக்குப்பலத்தை திரட்ட வேண்டுமே தவிர, தங்களது பதவிகளைத் தக்க வைத்துக்கொள்ள அல்ல என்பதை நீங்கள் இருவரும் தெளிவாக உணர வேண்டும்.

நன்றி

ஹூஸைன் ஏ. காதர்
தம்புள்ளை

Published by

Leave a comment