மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அண்மைக்காலமாக சிங்கள இன உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வருவதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பேசும் படித்த இளைஞர், யுவதிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்கள், அரச, மற்றும் தனியார் வங்கிகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு சிங்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் அரச, தனியார் வங்கிகளில் கடமையாற்றக் கூடிய தகுதியான இளைஞர், யுவதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த போதிலும் அதிகமான தனியார் வங்கிகள் சிங்கள இன உத்தியோகத்தர்களையே நியமித்து வருகின்றது இதனால் மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள படித்த இளைஞர், யுவதிகள் தனியார் வங்கிகளில் கூட நியமணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளது
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான பட்டதாரிகளும் அதற்கு நிகரான பட்டப்படிப்புகள், மற்றும் உயர்தரம் வரையும் படித்து முடித்த இளைஞர், யுவதிகள் அரச மற்றும் தனியார் தொழில் வாய்ப்புக்காக மிக நீண்ட நாட்களாக எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு சிங்கள இனத்தவர்கள் நியமிக்கப்படுவது கவளைக்குறிய விடயமாகும்
இன்று எத்தனையா இளைஞர், யுவதிகள் படித்து முடித்து விட்டு அரச நியமனத்தினை பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தால் பருவ வயதைத்தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் இன்னும் வீட்டுக்கு பாராமாக மிகக் கவளையோடு வாழ்ந்து வருவதை அவதானிக்க முடிகின்றது அது மாத்திரமின்றி தாங்கள் படித்த படிப்பிற்கு வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் வாழ்க்கையில் விரக்தியுற்று எத்தனையோ இளைஞர், யுவதிகள் வாழ வழியின்றி தற்கொலைக்கு கூட முயன்று வருகின்றனர்.
அத்தோடு இன்று எத்தனையோ இளைஞர்கள் தங்கள் மேற்கொண்ட பட்டப்படிப்பிற்கு உள்நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தால் சொந்த உறவுகளை பிரிந்து வெளிநாடுகளுக்குச் சென்று அங்கும் தங்களது படித்த படிப்பிற்கு எதிர் பார்த்த வேலை கிடைக்காத காரணத்தால் நாட்டுக்கு கூட திரும்ப முடியாமலும் அவதிப்படுகின்றார்கள். சிலர் வெளிநாடு செல்வதற்காக கட்டுக் கட்டாக வட்டிக்குப் பணத்தை வாங்கி வெளிநாட்டு முகவர்களிலிடம் கொடுத்து விட்டு வெளிநாட்டு முகவர்களால் ஏமாற்றப்பட்டு கொடுத்த பணத்தை மீளப்பெற்றுக் கொள்ள முடியாது நடைப்பிணமாக மதுவுக்கும் புகைத்தலுக்கும் அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து விட்டு அர்த்தவமில்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
அது மாத்திரமின்றி தொழில் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அதிகமான இளைஞர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து சட்டவிரோதமாக படகுகளில் அவுஸ்தரலேயாவுக்கு தப்பிச் செல்வதை அறிய முடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சிங்கள இன உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இடமாற்றம் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றுவதில் தவறில்லை ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள படித்த இளைஞர், யுவதிகள் நியமிக்கப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரும், பிரதியமைச்சர் இருவரும், பாராளமன்ற உறுப்பினர்கள் மூவரும், மாகாண அமைச்சர் ஒருவரும், மாகாண சபை உறுப்பினர் பத்துப்பேர்கள் இருந்தும் அவர்களை மீறி குறித்த நியமணங்கள் இடம்பெறுவது எமது மாவட்ட அரசியல் பிரமுகர்களின் இயலாமையை காட்டுகிறது வேறு மாவட்டதிலுள்ள ஒரு அரசியல் பிரமுகர் மட்டக்களப்பு மாவட்டதில் நியமணம் வழங்க முடியுமாக இருந்தால் ஏன் எமது மாவட்ட மக்களின் ஆணையை பெற்ற இவர்களால் நியமணங்களை பெற்றுக் கொடுக்க முடியாது?
தேர்தல் காலங்களில் மட்டும் மேடை மேடையாக மூலை முடுக்குகள் எல்லாம் உரிமை பற்றி உரத்து குரல் கொடுக்கும் எமது மாவட்ட அரசியல் பிரமுகர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்திள்ள தமிழ் பேசும் படித்த இளைஞர், யுவதிகளின் அரச நியமணங்களை பெற்றுக் கொடுக்கும் விடயத்தில் ஏன்? உரத்து குரல் கொடுக்க முடியாதுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர், யுவதிகளின் அரச நியமணங்கள் விடயத்தில் எமது மாவட்ட அரசியல் பிரமுகர்கள் காட்டும் மௌனமே இன்று பிற மாவட்டத்திலுள்ள சிங்கள இனத்தவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களில் நியமணம் பெறுவதற்கு ஏதுவாகவுள்ளாதகவும் தெரிவித்தார்.

Leave a comment