மொஸ்கோ: சிரியா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையை தவிர்க்க ரஷ்யா முன்வைத்திருக்கும் புதிய திட்டத்திற்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இதில் சிரியாவிடமுள்ள இரசாயன ஆயுதங்களை சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷ்யா பரிந்துரைத்துள்ளது.
இதனையொட்டி சிரிய இரசாயன ஆயுதங்களை கட்டுப்படுத்த பிரான்ஸ¤ம் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தீர்மானம் ஒன்றை கொண்டுவரவுள்ளது. ஐ.நா. சாசனத்தில் 7 ஆவது அத்தியாயத்தின் கீழ் புதிய தீர்மானம் கொண்டுவரப்படும் என பிரான்ஸ் நேற்று அறிவித்தது. 7 ஆவது அத்தியாயத்தின் கீழ் இராணுவத்தை பயன்படுத்தவும் அனுமதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்மானத்தில் சிரிய இரசாயன ஆயுதங்களை செயலிழக்கச் செய்யும் முன்னர் அவை அனைத்தும் சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருப் பதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லவ்ரொவ் பபியஸ் குறிப்பிட்டார்.
இந்த தீர்மானம் 5 விடயங்களை அடிப்படையாக கொண்டு முன்வைக்கப்படவுள்ளது. அதில் சிரியா தனது இரசாயன ஆயுத திட்டத்தை முழுமையாக விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் பட வுள்ளதோடு, இது தொடர்பில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அமைக்கப்பட்டு அனைத்து திட்டங்களும் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்படும். இந்த உடன்பாடு மீறப்படும் பட்சத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள் ளப்படும்.
ஏற்கனவே சிரியாவின் இரசாயன ஆயுதங்களை சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ரஷ்யாவின் பரிந்துரையை சிரியா வரவேற் றுள்ளது. அதே போன்று ரஷ்யாவின் திட்டம் தற்போ தைய பிரச்சினைக்கு தீர்வாக அமைய சாத்தியமிருப்பதாக குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இது பற்றி தொடர்ந்து சந்தேகம் இருப்பதாகவும் கூறினார். எனினும் கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி நூற்றுக்கணக்கானோரை பலிகொண்ட இரசாயன தாக்குதலுக்கு சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என ஒபாமா வாதாடுகிறார்.
இந்நிலையில் ரஷ்யா முன்வைத் திருக்கும் முயற்சி சாதகமாக உள்ளது என ஒபாமா விபரித்திருக்கிறார். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் இராணுவ தாக்குதலை நிறுத்தி வைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் ஒபாமா கூறினார்.
ரஷ்யாவின் திட்டத்தை சிரிய நட்பு நாடுகளான சீனாவும் ஈரானும் ஆதரித் துள்ளன. “இந்த திட்டம் சிரியாவின் தற்போதைய பதற்றத்தை தணிக்க உதவும். அதேபோன்று சிரியா மற்றும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலை நிறுத்தவும், அரசியல் தீர்வொன்றை எட்டவும் உதவும்” என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹொய் லீ குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த திட்டம் குறித்து இஸ்ரேல் சந்தேகம் வெளியிட்டுள்ளது. சிரியாவை நம்ப முடியாத நிலையில் இந்த பேச்சுவார்த்தை சவாலாக இருக்கும் என்று இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமொன் பெரஸ் எச்சரித்தார்.
இராணுவ நடவடிக்கையை தவிர்க்க சிரியா இந்த திட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் என்று இஸ்ரேல் பாராளுமன்ற வெளியுறவு மற்றும் பாதுகாப்பு குழுவின் தலைவர் அவிக்டோர் லிவர்மன் குறிப்பிட்டுள்ளார்.
– தினகரன்
Leave a comment