தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும்: ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 383 பேர் வாக்களிக்க தகுதி

ELECTION-non-colour[1]கொழும்பு: வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் (09) நாளையும் (10) நடைபெறவுள் ளது. மேற்படி மூன்று மாகாண சபைகளையும் சேர்ந்த அர சாங்க உத்தியோகத்தர்களின் வசதிகருதி நாடுமுழுவதும் தபால் மூல வாக்களிப்பினை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் திணைக்களம் பூர்த்தி செய்திருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்தார்.

இதேவேளை தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ள அனைத்து அரச அலு வலகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டிருப்பதாகவும் தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.

மேலும் ஏற்கனவே வன்முறைகள் பதிவாகியுள்ள பிரதேசங்களிலுள்ள அலுவலகங்களில் நேற்று முதல் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மூன்று மாகாணங்களுக்குமான மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மூன்று மாகாணத்தையும் சேர்ந்த அரசாங்க உத்தியோகத்தர்களின் வசதி கருதி இன்றும், நாளையும் தபால் மூல வாக்களிப்பு நடத்தப்படுகிறது.

இதற்கிணங்க மாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ள பத்து தேர்தல் மாவட்டங்கள் உட்பட நாடுமுழுவதும் அரச அலுவலகங்களில் தபால் மூல வாக்கெடுப் புகளை நடத்துவதற் கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட் டுள்ளன.

தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மாகாணத்தையும் சேர்ந்த ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 383 பேர் இம்முறை தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இவர்கள் சேவையாற்றும் அரசாங்க அலு வலகத்திற்கு தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் ஏற்கனவே காப்புறுதி அஞ்சலூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதனால் வாக்களிக்க தகுதி பெற்றோர் நீதியானதும் சுதந்திரமானதும் இரகசியமானது மான முறையில் வாக்களிக்க முடியு மெனவும் பிரதி தேர்தல்கள் ஆணை யாளர் எம். மொஹமட் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை தபால் மூல வாக் களிப்பு நடைபெறவுள்ள அரச அலு வலகங்களுக்குள்ளோ அல்லது வெளி யிலோ தனிநபரோ அல்லது குழுவோ தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு தேர்தல்கள் திணைக்களம் முற்றாக தடைவிதித்துள்ள அதேவேளை குறிப்பிட்ட நபருக்கோ அல்லது கட்சிக்கோ வாக்களிக்குமாறு வற்புறுத்துவது தண்டிக்கத்தக்க குற்றமாகுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வாக்களிப்பு நடைபெறும் சமயம் நிறுவனத் தலைவர், வாக்காளர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோர் மாத்திரமே இருக்க அனுமதிக்கப்படுவர். அதிக வாக்காளர்கள் வாக்களிக்கும் அலுவலகங்களில் மாத்திரம் தேர்தல்கள் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்படும் விசேட கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையினை முன்னெடுப்பர்.

பொலிஸ் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட வேண்டிய அலுவலகங்களில் அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஒத்துழைப்புடன் ஆசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்க தேர்தல்கள் திணைக்களம் நிறுவனத் தலைவருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், வாக்காளர் சுதந்திரமான முறையில் வாக்களிக்க அனுமதிக் கப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

வாக்களிப்பின் பின்னர் குறித்த நபருடைய வாக்குச் சீட்டில் வாக்களிக்கப்பட்டுள்ள கட்சி, சுயேட்சை, விருப்பு வாக்கு என்பன பிறர் அறியும்படி செய்வது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய செயன் முறையாகையினால் அவ்வாறான குற்றமிழைப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் படுமெனவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.

வாக்கிடப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் மிகவும் நுட்பமான முறையில் பொதி செய்து திருப்பியனுப்பப்படும் முறை கையாளப்படுவதனால் வாக்களாளர் அச்சம் மற்றும் சந்தேகமின்றி வாக்களிக்க முடியுமெனவும் அவர் கூறினார்.

இன்னும் நாளையும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை தவறவிடுபவர்கள் 11, 12, 13 ஆகிய திகதிகளில் தமது மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு நேரில் சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்த பின்னர் வாக்களிக்க முடியும்.

தேர்தல்கள் திணைக்களம் தபால் மூல வாக்களிப்பினை புகைப்படம் எடுப்பதற்கோ ஒளிப்பதிவு செய்வதற்கோ தடை விதித்துள்ளது. சட்டவிரோதமாக எடுக்கப்படும் புகைப்படங்கள் அல்லது காட்சிகளை வெளியிடவோ ஒளிபரப்பு செய்யவோ வேண்டாமெனவும் ஊடகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

– தினகரன்

Published by

Leave a comment