லண்டன்: எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் இடம்பெற இருக்கின்ற ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் (வலது குறைந்தோர்களுக்கானது) ஆகிய போட்டிகளை நடாத்தும் நகரமாக ஜப்பானின் தலைநகரம் டோக்கியோ பின்னர் தெரிவாகி இருக்கின்றது.
ஸ்பெய்ன் நாட்டின் தலைநகரம் மெட்ரிட், துருக்கி நாட்டின் தலைநகரம் ஸ்தன்புல் மற்றும் ஜப்பான் நாட்டின் தலைநகரம் டோக்கியோ ஆகிய மூன்று நகரங்களும் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகி இருந்தன.
இவற்றுள், மெட்ரிட் முதலில் தோல்வியைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறியது. இதனையடுத்து ஸ்தன்புல் மற்றும் டோக்கியோவுக்கான இறுதிச் சுற்றில் ஒலிம்பிக் சபையின் அங்கத்தவர்களுக்கிடையே தெரிவுப்போட்டிகள் மீண்டும் இடம்பெற்றன.
இறுதியாக அளிக்கப்பட்ட வாக்களிப்பின்படி டோக்கியோ நகரம் 2020 ம் ஆண்டில் ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் போட்டிகளை நடாத்துவதற்கு ஒலிம்பிக் சபையால் தெரிவானது. 60:30 என்ற பெரும் வித்தியாசத்தில் டோக்கியோ நகரம் வெற்றிபெற்றது.
இதனையடுத்து, ஜப்பான் முழுவதும் மக்கள் மகிழ்ச்சி ஆராவாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சர்வதேச ஒலிம்பிக் சபையின் கடந்த 12 வருடங்களாக தலைவராக இருந்த ஜக்ஸ் ரொஜி, சர்வதேச ஒலிம்பிக் சபையிலிருந்து ஓய்வு பெறுகின்றவேளையில் 2020 ஒலிம்பிக் போட்டிகளை நடாத்த வெற்றி பெற்றிருக்கும் நகரம் டோக்யோ என்பதை நேற்றைய தினம் அறிவித்து விடைபெற்றார்.
அணுகுண்டு அணர்த்தங்கள், சுனாமி, நிலநடுக்கம் என பல தடங்கல்களைச் சந்தித்து தொடர்ந்து முன்னேறிவரும் ஜப்பான் இந்த சந்தர்ப்பத்தைப் பெற்றதில் மகிழ்ச்சியடைவதாக ஜப்பான் பிரமுகர்கள் தெரிவித்தனர்.
டோக்யோ முதன்முதலில் 1964 இல் ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தி இருந்தது. இதற்குப் பின்னர் 2020 இல் நடாத்த இருக்கின்றது. இதனடிப்படையில் ஆசிய நாடொன்றில் இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டி இடம்பெறவிருக்கும் பெருமையை ஜப்பான் தனதாக்கிக்கொண்டுள்ளது.




Leave a comment