கொழும்பு: புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ள வேளை ஹஜ் கட்டணம் தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. முகவர்களின் ஏகபோக உரிமையால் கட்டணம் நிர்ணயிப்பதில் சங்கடங்கள், சேகரித்துவைத்த பணத்திற்கு ஹஜ் செய்ய முடியாத நிலையில் ஹாஜிகளின் திண்டாட்டம். இப்படி தொடர் கதையாக இது மாறியுள்ளது.
ஹஜ் பயணத்திற்காக தமது பெயர்களை பதிவுசெய்தவர்கள் வரிசைக்கிரம அடிப்படையில் கிடைத்துள்ள கோட்டாவின் தொகைக்கேற்ப ஹாஜிகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் கடந்த முறையைப் போன்று இம்முறையும் முகவர்கள் தமது இலாபத்திற்கு வரையறை யில்லாமல் ஐந்து இலட்சம் முதல் 8 இலட்சம் வரை ரூபா விலைகளை நிர்ணயித்துள்ளதினால் ஹஜ் செய்வதற்காக பணத்தை சேகரித்து பல வருடங்கள் காத்திருந்தவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தும் அதிக கட்டணம் கொடுக்க முடியாதனால் பயணத்தை இடைநிறுத்தும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்டவர்களில் சுமார் 1500 பேர் வரை தாம் ஹஜ் பயணத்தை மேற்கொள்வதில்லையென திணைக்களத்திற்கு அறிவித்துள்ளமை இதற்கு சான்றாகும். பொதுவாக ஒரு கணவர் தனது மனைவியையும் அழைத்துக் கொண்டே புனித பயணத்தை மேற்கொள்ள ஆயத்தமாவது வழக்கம். பெண்கள் மஹரமில்லாமல் தனிமையில் செல்ல முடியாது எனவே ஒருமித்த இருவருமாக செல்வதற்கே விரும்புகின்றனர்.
இந்த விலையேற்றத்தினால் இவர்கள் இரட்டிப்பான பணத்தை தேட வேண்டியுள்ளது. ஹஜ் குழுவின் இணைத்தலைவர் அமைச்சர் பெளசி ஹஜ் கட்டணம் 4 இலட்சம் ரூபா என நிர்ணயித்துள்ளார்.
இது ஒரு நல்ல அறிவிப்புதான். நான்கு லட்சம் என நிர்ணயிக்கப்பட்டாலும் அதற்கு மேல் கொடுப்பவர்கள் முகவர்களுடன் அவர்கள் வழங்கும் சேவைகளை குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். ஒப்பந்தங்களை ஹாஜிகள் செய்வதைவிட முகவர்கள் எடுக்கும் பணத்திற்கு கொடுக்கும் சேவைகளை குறிப்பிட்டு ஹஜ் குழுவினருடன் ஒப்பந்தம் செய்தாலேயே நடைமுறைச் சாத்தியமாக அமையும். முகவர்கள் தவறு செய்தாலும் தட்டிக்கேட்க முடியும்.
கடந்த காலங்களில் ஹஜ் பயணம் செய்தவர்கள் தமக்கு நடந்த அநியாயங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் செய்தார்கள். அதில் எத்தனை முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளன என்பது கேள்விக்குறியே. கடமை முடிந்த பின்னர் அவர்கள் முகவர்களுக்கு ஹாஜி ஒருவர் ஹஜ் கடமை முடிந்த பின்னர் முறைப்பாடுகளைச் செய்வார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. காரணம் தாம் செய்த நன்மைகள் இல்லாமல் போய்விடும் என்ற எண்ணம்.
4 லட்சத்தில் ஹாஜிகளை அழைத்துச் சென்றாலும் முகவர்கள் இலாபத்தை பெற்றுக் கொள்ளமுடியும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆனால் முகவர்கள் தமது ஏகபோக உரிமையை வைத்து கொண்டு கட்டணத்தை எழுந்தமானமாக அதிகரிக்கின்றனர் 5, 5 1/2, 6 1/2, 7, 8 இலட்ச ரூபாய்கள் என ஒவ்வொரு முகவர்களும் தமது இஷ்டப்படி கட்டணத்தை நிர்ணயிக்கின்றனர்.
ஹஜ் குழு கடுமையாக செயல்பட்டு குறித்த கட்டணத்திற்குத் தான் அழைத்துச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் கோட்டாக்களை இரத்துச் செய்வோம்என உறுதியான முடிவுகளை எடுத்தாலே இந்த ஏகபோக உரிமைகளை தகர்த்தெறிய முடியும்.
ஹஜ் பயணிகளை முகவர்கள் இரண்டு முறையில் அழைத்துச் செல்லுகின்றனர். அவ்வல் மதீனா, ஆகிர் மதீனா, என்பதுவே இரு முறைகள். அதாவது ஹஜ் கடமையை நிறைவேற்ற முன்பு மதீனா செல்லுதல் ஆகும், ஹஜ் கடமையை முடித்த பின்னர் மதீனா செல்லுதல் தமது ஹஜ் கடமையை முடித்த பின்னர் மதீனா செல்வதற்கே பெரும்பாலான ஹாஜிகள் விரும்புவது உண்டு. ஆனால் முகவர்கள் மக்காவில் தங்குமிடங்களை ஒதுக்கிக்கொள்வதிலும் இலாபமீட்டுவதற்கும் முயற்சிக்கின்றனர்.
ஹஜ்ஜுடைய காலப்பகுதியில் அதாவது ஆகிர் மதீனா செல்பவர்களுக்காக மக்காவில் தங்குமிடங்களை ஒதுக்கிக் கொள்ளும் போது கூடுதலான கட்டணங்களை செலுத்த வேண்டி ஏற்படுகின்றது. கேள்வி கூடுதலாக இருப்பதனால் விலையும் அதிகரிக்கின்றது. இவ்வாறான அசெளகரியங்கள் ஹாஜிக்கு ஏற்படும் போது கட்டணத்திலும் குறைவுகள் ஏற்பட்டால் ஹாஜிகள் இந்த அசெளகரியங்களை தாங்கிக் கொள்ள முடியும்.
ஹஜ் குழு கட்டணத்தை 4 லட்சம் என நிர்ணயித்த போது ஒரு முகவர் சங்கம் தாம் 3 1/2 இலட்சத்திற்கு அழைத்துச் செல்வதாக அறிவித்துள்ளது. இது உண்மையிலேயே நல்ல நோக்கத்தில் செய்த அறிவிப்பா? அல்லது உள்நோக்கம் கொண்டதோ என்பது அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.
அவ்வல் மதீனா, ஆகிர் மதீனா, பயணங்களை கருத்திகொண்டும் தங்குமிடங்களையும் வழங்கும்வசதிகளையும் சிந்தித்து முகவர்கள் ஹஜ் கட்டணங்களை நிர்ணயிக்க முன்வர வேண்டும்.
ஹஜ் ஒரு விற்பனையாக கருதாமல் இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாக அல்லாஹ்வுக்காக நிறைவேற்றச் செல்பவர்களுக்கு உதவி செய்யும் நன் நோக்கில் ஹாஜிகளை அழைத்துச் செல்ல வேண்டும். கொள்ளை இலாபம் அடிக்கும நோக்கம் அறவே இருக்கக் கூடாது இதுவே சிறப்பானது.
– தினகரன்
Leave a comment