வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கே அதிகளவிலான சலுகைகளை அரசு வழங்கி வருகின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Daklas பழுலுல்லாஹ் பர்ஹான்

யாழ்ப்பாணம்: வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கே அதிகளவிலான சலுகைகளை அரசு வழங்கி வருகின்றது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இன்றைய தினம் (8) இடம்பெற்ற வடமாகாண முன்பள்ளி கல்வி டிப்ளோமா பட்;டம் பெற்ற ஆசிரியர்களுக்கு பட்டமளித்து சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றும் போது, உங்களுடைய தொழில் சேவையென்பது மகத்துவமானதும் மதிக்கத்தக்கதுமாகும். கடந்த காலங்களில் பல தடவைகள் நான் உங்களைச் சந்தித்துள்ளேன். அப்போதெல்லாம் நீங்கள் உங்களது பிரச்சினைகள் தேவைகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தீர்கள்.

அவ்வப்போது நான் உங்களுக்கு உங்களது நியமனங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதிமொழி வழங்கியிருந்தேன். அதன்பிரகாரம் உங்களுக்கான நியமனங்களை நிச்சயமாக நாம் பெற்றுத் தருவோம். இந்நிலையில், நாட்டின் 9 மாகாணங்களிலும் முன்பள்ளி கல்விசெயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட வருகின்ற போதிலும் வடமாகாணத்தில் தான் முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் முன்பள்ளி கல்வி செயற்திட்டங்களுக்கும் அதிகளவிலான சலுகைகளும் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வடமாகாண சபை எமக்குக் கிடைக்கும் பட்சத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நிரந்தர நியமனம் மற்றும் சேவைக்கான ஊதியம் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இதுதொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி அவர்கள் உரையாற்றும் போது 2009 மே19 ற்கு முன்னர் முன்பள்ளி கல்வித்துறை பெரும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் தற்போது பெரும் வளர்ச்சி கண்டு வருகின்றது. அந்த வகையில்தான் முன்பள்ளி கல்விசெயற்திட்டத்தை மேம்படுத்தும் வகையில் 2010 ஆம் ஆண்டு வடமாகாண முன்பள்ளிகளை ஒன்றிணைத்து கொள்கைப் பிரகடனமொன்றை தயாரித்தோம்.

அதன்பிரகாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக முன்பள்ளி கல்வி செயற்திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்தும், கிழக்கு மாகாணத்திலிருந்தும் 41 சிங்கள மொழி மூல ஆசிரியர்கள் உள்ளிட்ட 652 முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றைய நிகழ்வில் பட்டமளித்தும் சான்றிதழ் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வு ஆறுதல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் நிபுணத்துவ ஆலோசகர் மாதவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, வடமாகாண முன்பள்ளி பருவ கல்வி பணிப்பாளர் செல்வி ஜெயாதம்பையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Published by

Leave a comment