டமஸ்கஸ்: சிரியாவில் சிறை பிடிக்கப்பட்ட ராணுவத்தினரை புரட்சிப்படையினர் வெற்று உடலுடன் முழங்காலிட வைத்து தலையில் சுட்டுக் கொன்ற காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடூரமான கொலைகளுக்கு உலகெங்கும் ஒரே மொழிதான் என்பதை இந்த வீடியோ காட்சி உணர்த்துகிறது.
இந்த வீடியோ படத்தில் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு விசுவாசமான 7 ராணுவத்தினர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து வீரர்களும் உடைகளை அகற்றிய நிலையில் கைகளைக் கட்டி, தரையில் கீழே தள்ளி விடப்படுகின்றனர். பின்னர் அவர்களுக்குப் பின்னால் நின்று கொள்ளும் புரட்சிப் படையினர், துப்பாக்கிகளால் அவர்களை சுட்டுத் தள்ளுகின்றனர்.
இந்தத் தண்டனைக்கு முன்பாக புரட்சிப் படையினரால் மாமா என்று அழைக்கப்படும் அப்துல் சமத் இஸ்ஸா – இவர்தான் இந்தக் குழுவின் தலைவர் . ஒரு கவிதையை வாசிக்கிறார். பின்னர் அவரே துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்து வைக்கிறார். அதாவது முதல் குண்டை அவர் சுடுகிறார்.
இஸ்ஸா பேசுகையில், கடந்த ஐம்பது ஆண்டுகளாக இவர்கள் ஊழல்வாதிக்கும், ஊழலுக்கும் துணை போயிருக்கிறார்கள். இறைவனின் பெயரால் நாம் உறுதி எடுக்கிறோம்.. நாம் பழி தீர்ப்போம் என்று அவர் கூறுகிறார்.

இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் நடந்துள்ளது. அதை வீடியோவில் புரட்சிப்படையினரே படமாக்கியுள்ளனர். இப்போது அந்தப் படையைச் சேர்ந்த ஒருவரே கசிய விட்டுள்ளார். புரட்சிப் படையினரின் செயலால் மனம் அதிர்ந்து போய் அதிலிருந்து இவர் விலகி விட்டாராம். இந்த வீடியோவை அவர் நியூயோர்க் டைம்ஸ் நாளிதழுக்கு கொடுத்துள்ளார். அவர்கள் இதை வெளியிட்டுள்ளனர்.
இஸ்ஸாவுக்கு 37 வயதாகிறது. இவர் ஒரு வர்த்தகர். கால்நடைகளை மேய்ப்பவராகவும் இருந்த சாமானியர்.
அஸ்ஸாத்துக்கு எதிரான புரட்சியைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து குழுவாக இயங்கத் தொடங்கினார். தனது சொந்தப் பணத்தைக் கொண்டு ஆயுதங்களை இவர் வாங்கி செயல்பட ஆரம்பித்தாராம். மேலும், தன்னிடம் உள்ளவர்களுக்கும் இவரே சம்பளம் கொடுக்கிறாராம்.
மேலதிக தகவல்கள் குறித்த நபரால் மென்மேலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a comment