செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்: ஜி 20 நாடுகளின் கூட்டத்தின் முதன்மையான அடிப்படை நோக்கம் என்பது உலகின் பொருளாதார ரீதியில் முன்னேறிய மற்றும் வேகமாக முன்னேறிவரும் நாடுகளின் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக உலகின் பொருளாதாரம் தேக்க நிலையில் இருக்கும் நிலைமையை எப்படி மாற்றுவது என்பதும், மீண்டும் உலக பொருளாதார வளர்ச்சியை எப்படி ஊக்கப்படுத்துவது என்பதும் தான் இந்த ஜி 20 அமைப்பின் அடிப்படை கொள்கை கோட்பாடு எல்லாம்.
ஆனால் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் நடந்து முடிந்திருக்கும் இந்த ஜி 20 மாநாட்டில் பொருளாதாரம் பின்னுக்குத்தள்ளப்பட்டு, போர் முக்கிய இடம் பிடித்தது. சிரியாவில் நடந்த ரசாயனத் தாக்குதலில் சுமார் 1500 பேர் கொல்லப்பட்டதற்கு சிரிய அரசே காரணம் என்று கூறும் அமெரிக்க அதிபர் ஒபாமா, அதற்காக சிரியா மீது கடுமையான ராணுவ நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளப் போவதாக அறிவித்தும் விட்டார். தனது இந்த நிலைப்பாட்டுக்கு, ஜி 20 நாடுகளின் ஆதரவு திரட்டுவது என்பதே அவரது பிரதான நோக்கமாக இருந்தது. அதை அவரும் அவரது அதிகாரிகளும் முழுமூச்சாக மேற்கொண்டனர்.
சிரிய அரசின் மோசமான ராணுவ நடவடிக்கைகள் குறித்தும், அதனால் சிரிய மக்கள் படும் பேரவலங்கள் குறித்தும் ஒபாமாவும் அவரது அமெரிக்க அரசுத்துறை அதிகாரிகளும் ஜி 20 நாடுகளின் தலைவர்களுக்கும் அவர்களுடன் வந்திருந்த அதிகாரிகளுக்கும் பெரிய பெரிய விளக்கங்களை கொடுத்தார்கள். சிரிய மக்களின் அவலங்களை தடுக்கவேண்டுமானால் சிரிய அரச ராணுவபடையணி மீது ராணுவ தாக்குதலை மேற்கொள்வது மிகவும் அவசியம் என்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.
ஆனால், இவர்களின் இந்த பிரச்சாரம் உரிய பலனைத்தந்ததா என்கிற கேள்விக்கு ஆம் என்கிற உறுதியான பதிலை அமெரிக்க அதிகாரிகளாலேயே கூட கொடுக்கமுடியவில்லை. காரணம் இந்த ஜி 20 மாநாட்டை முன்னின்று நடத்திய ரஷ்யா, ஒபாமாவுக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்தது.
சிரியாவில் நடந்த ரசாயனத்தாக்குதலுக்கு சிரிய அரசு தான் காரணம் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று வாதாடிய ரஷ்ய அரசு, உறுதியற்ற ஆதாரங்களின் அடிப்படையில் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதை தன்னால் ஆதரிக்க முடியாது என்று தனது முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. அது மட்டுமல்ல, சிரியா மீது சர்வதேச ராணுவ நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் சிரிய அரச எதிர்ப்பு கிளர்ச்சிக்காரர்கள் இந்த ரசாயனத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் ரஷ்யா குற்றம் சுமத்தியது.
இரண்டுநாள் நடந்த இந்த மாநாட்டின் முடிவில் பேசிய ரஷ்ய அதிபர் புடின், சிரியாமீதான ராணுவ நடவடிக்கைக்கு பெரும்பான்மையான ஜி 20 நாடுகள் எதிராக இருக்கின்றன என்று அறிவித்தார்.
“சிரியா தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெள்ளிக்கிழமை விடிகாலை ஒரு மணிவரை நீடித்தாலும், இவற்றின் முடிவில் ஐநா மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் சிரியாமீது ராணுவ நடவடிக்கை எடுக்க பெரும்பாலான நாடுகள் ஒப்புக்கொள்ளவில்லை. அமெரிக்கா, பிரான்ஸ், கேனடா, சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே ஐநா ஒப்புதல் இல்லாமலே கூட ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தன. மற்றநாடுகள் இதற்கு உடன்படவில்லை”, என்றார் புடின்.
ஒபாமாவுடன் தான் பிரத்யேக பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக தெரிவித்த புடின், இருவருக்கும் இடையில் கடுத்து ஒற்றுமை ஏற்படவில்லை என்றும் கூறினார். சர்வதேச ஒப்புதல் இல்லாமல் சிரியாமீது நடத்தப்படும் ராணுவ நடவடிக்கை என்பது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்றும் புடின் குற்றம் சாட்டினார்.
அதெசமயம் சிரியா தொடர்பான ரஷ்ய நிலைப்பாட்டை தாம் ஏற்கவில்லை என்று அறிவித்த ஒபாமா, தனது நிலைப்பாட்டை ஆதரித்த பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி தெரிவித்தார்.
“எனது சகாக்களுடனான பேச்சுவார்த்தைகளின் முடிவில் நான் ஊக்கமடைந்திருக்கிறேன். உலக நாடுகள் வெறுமனே வேடிக்கைபார்க்க முடியாது என்கிற நிலைப்பாட்டை மேலதிகமானவர்கள் புரிந்துகொள்ளத் துவங்கியிருக்கிறார்கள். ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிரான சர்வதேச சட்டங்கள் காப்பாற்றப்படவேண்டும் என்பதை ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் இங்கே பீட்டர்ஸ்பெர்கில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அசாத் ஆட்சி தனது மக்கள் மீதே இந்த ரசாயனத்தாக்குதல்களை மேற்கொண்டன என்பது தான் உண்மை,” என்றார் ஒபாமா.
அமெரிக்க அதிபரின் ராணுவ நடவடிக்கை அவசியம் என்கிற நிலைப்பாட்டுக்கு ரஷ்யா மட்டுமல்ல, இந்தியாவும் உடன்படவில்லை. ஐநாவின் ஒப்புதல் இல்லாமல் சிரியா மீது ராணுவநடவடிக்கை மேற்கொள்வதற்கு இந்தியா உடன்படவில்லை என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஜி 20 மாநாட்டில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சிரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமெரிக்காவுக்கு ஜி 20 மாநாட்டில் புதிய கூட்டாளிகளோ, ஏகோபித்த ஆதரவோ கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல, ஐநாவின் அங்கீகாரமும் கிட்டவில்லை. ஐநாவின் செயலாளர் நாயகம் பான்கி மூன் அவர்களும் சிரிய பிரச்சனைக்கு ராணுவ தாக்குதல் தீர்வல்ல என்று பகிரங்கமாக அறிவித்தார்.
“இந்த (சிரிய) பிரச்சனைக்கு ராணுவரீதியிலான தீர்வு என்று ஒன்று கிடையாது. அரசியல் தீர்வு மட்டுமே இந்த பிரச்சனையில் அமைதியை ஏற்படுத்தி ரத்தக்களறியை தடுக்க முடியும்”, என்றார் பான்கி மூன். ஐநாவின் சார்பில் மூன் தெரிவித்த இந்த யோசனையானது அமெரிக்க அதிபரின் மனதை மாற்றுமா என்கிற கேள்விக்கு இன்றைய நிலையில் யாரிடமும் விடையில்லை.
மூலம்- BBC

Leave a comment