அப்பாவி தமிழ் மக்களை அச்சத்துக்குள்ளாக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு – எம்.எஸ்.சுபைர்

subairஇர்ஷாத் றஹ்மத்துல்லா 

மன்னார்: மீண்டும் ஒர் நான்காம் ஈழப்போர் முழப்போவதாக அப்பாவி தமிழ் மக்களை அச்சத்துக்குள்ளாக்கும் நிலையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு தோற்றுவிப்பதாக தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளரும் உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் கிழக்கில் 50 ஆயிரம் விதவைகள் உருவாகுவதற்கான காரணமானவர்கள் இவர்கள் என்றும் கூறினார். வடமாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியிலில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து நானாட்டான் இலந்தைமோட்டையில் இடம் பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கில் வாழும் மக்கள் நிம்மதியாகவும், அபிவிருத்திகளையும் அனுபவிக்க கூடிய நிலையினை இன்று காணுகின்றோம். இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்னால் இவ்வாறு தமிழரும், இஸ்லாமியரும் ஒன்றாக அமர்ந்திருக்க முடியுமான சூழல் இருந்ததா? என்றால் அதற்கு பதில் இல்லை என்றே வரும். இந்த நிலையினை தோற்றுவித்தவர்கள் எமது மக்களுக்கு வழங்கிச் சென்ற சன்மானம் தான் இந்த அழிவுகள் என்பதை எல்லோரும் இன்று ஏற்றுக் கொண்டுள்ளனர். அதில் இருந்து மீளுவதற்கு மக்கள் தெரிவு செய்துள்ள வழி முறைதான் அபிவிருத்தியினை தமது பகுதிகளுக்கு கொண்டுவருவதில் ஆர்வமாக இருக்கின்றனர்.

நான் பிரதி நிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தி்ல் சகல சமூகங்களும் மிகவும் அந்நியோன்யமாக வாழுகின்றனர். அங்கு இரு சமூகங்கள் ஒற்றுமையாக புரிந்துணர்வுடன் வாழ முடியும் என்றால் ஏன் இந்த மன்னார் மாவட்டத்தில் வாழ முடியாது. அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருக்கும் எமது கட்சியின் தலைவரும் உங்களது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் இம்மாவட்ட மக்களுக்கு ஆற்றும் பணிகளை் பெருமதியானது. இன்று இந்த மாவட்டத்தில் இருக்கும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் ஒரு அங்குல வீதியையோ, ஒரு மின்சாரக் கம்பத்தையோ அல்லது இந்த வறிய மக்களது வாழ்வாதாரத்துக்கான உதவிகளையோ செய்ய முடியுமா என்றால் முடியாது.

மாகாண சபையின் ஆட்சியை தந்தால் மக்களை வாழ வைப்போம் என்று கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, நகர சபைகளினதும், பிரதேச சபைகளினதும் தலைமைப் பதவிகளை பெற்று 3 வருடங்கள் கழிந்த நிலையிலும் அவர்கள் செய்து அபிவிருத்திகள் என்ன என்பதை மக்கள் நன்கு அறிந்து கொண்டுள்ளனர். தேர்தல் காலங்கள் வந்துவிட்டால் இங்கு வந்து இல்லாத பொல்லாதவைகளை எல்லாம் சொல்லி மக்களது வாக்குகளை கொள்ளையடிக்கும் சதிகளில் சிலர் ஈடுபடுகின்றனர். அவர்கள் பொட்டணி வியாபாரிகள் போன்று புழுகு மூட்டைகளை சுமந்து வருகின்றனர். இவர்களின் இந்து பொய்கைகளை நீங்கள் நம்பி ஏமாந்துவிட வேண்டாம்.

இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றியில் தான் மாவட்ட மக்களது எதிர்காலமும், அபிவிருத்திகளும் தங்கியிருக்கின்றது என்பதை மீண்டும் நினைவுபடுத்தி வெற்றிலை சின்னத்தை வடக்கில் வெற்றி பெறச் செய்வதன் மூலம் எமது மக்கள் இன்னும் நிறைய அபிவிருத்திகளை பெற்றுக் கொள்வது திண்ணம் என்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் இங்கு கூறினார்.

Published by

Leave a comment