டமஸ்கஸ்: சிரியா மீது இன்று 2 பேலிஸ்டிக் வகை ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், ஆனால் அவை இரண்டுமே மத்திய தரைக் கடல் பகுதியில் விழுந்துவிட்டதாகவும், சிரியாவைத் தாக்கவில்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரையடுத்து அங்கு பொது மக்கள் மீது ராணுவம் ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து சிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. ஆனால், சிரியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு தந்து வருகிறது. சிரிய அதிபர் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ஆதரவாக நிற்கிறது ரஷ்யா. இதனால், ஐ.நா. சபையில் சிரியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தால் அதை ரஷ்யா தனது வீடோ அதிகாரம் மூலம் முறியடிக்கும் நிலை உள்ளது.
இதைத் தவிர்க்க, ஐ.நா. சபையிடம் கேட்காமலேயே நேரடியாக சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. இந்த விவகாரத்தில் தனது நாடாளுமன்றத்தில் அனுமதி பெற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முயற்சித்து வருகிறார். இந்த அனுமதி கிடைக்குமா என்பதே சந்தேகத்திற்கிடமாக உள்ளது.
இந் நிலையில் சிரியாவை நோக்கி இரு நீண்ட தூரம் சென்று தாக்கும் பேலிஸ்டிக் வகை ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இதை தெற்கு ரஷ்யாவின் அர்மவீர் பகுதியில் உள்ள ஏவுகணை எதிர்ப்பு ரேடார்கள் கண்டுபிடித்துள்ளன. இன்று காலை 10.16 மணியளவில் சிரியாவை நோக்கி வந்த இந்த இரு ஏவுகணைகளும் மத்திய தரைக் கடல் பகுதியில் விழுந்துவிட்டதாகவும், அவை சிரியாவைத் தாக்கவில்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது.
மேலும் இது குறித்து அதிபர் விளாடிமீர் புடினிடம் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் சொய்கு விவாதித்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில் தங்களது நாட்டை இதுவரை ஏவுகணை ஏதும் தாக்கவில்லை என்று சிரியாவும், இந்த விவகாரம் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று இஸ்ரேலும் கூறியுள்ளன. கடந்த வாரம் அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை சிரியாவுக்கு நெருக்கமாக அனுப்பியது. இதை கடுமையாக கண்டித்த ரஷ்யா, போட்டிக்கு தனது உளவு பார்க்கும் போர்க் கப்பல்களை சிரியாவுக்கு உதவியாக அனுப்பி வைத்தது.
அதே போல அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலான USS Nimitz கப்பலும் ரெட் சீ பகுதியை நோக்கி சென்று கொண்டுள்ளன. இந்தக் கப்பல்களில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டனவா அல்லது வேறு எங்கிருந்தாவது ஏவுகணைகள் வந்தனவா என்பது தெரியவில்லை.

Leave a comment