கடமையான குளிப்பை நிறைவேற்றுவது எப்படி?

ntj– NTJ

அல்லாஹ் கூறுகிறான் ‘குளிப்புக் கடைமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்!’ (அல்குர்ஆன் 05:06). குளிப்புக் கடமையானால் அதை நிறைவேற்றுவது பருவ வயதை அடைந்த ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் மீதும் கட்டாயக் கடமையாகும். பலர், குளிப்புக் கடமையை நிறைவேற்றுவது எப்படி? என்பதை அறியாமலேயே வாழ்கின்றனர்.

ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் அறிய வேண்டிய சட்டங்களில் குளிப்புக் கடமைச் சட்டமும் ஒன்றாகும். குளிப்பு எதனால் கடமையாகும்? கடமையான குளிப்பை நிறைவேற்றுவது எப்படி? போன்ற விபரங்களை ஆதாரங்களுடன் அலசுவோம்.   

    உடலுறவு குளிப்பைக் கடமையாக்கும்

‘ஒரு ஆண் தனது மனைவியின் கால்களுக்கிடையே அமர்ந்து பின்னர் முயற்சி செய்தால் குளிப்பு கடமையாகி விடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ 291, முஸ்லிம் 578

முஸ்லிமின் 578 அறிவிப்பில் ‘விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பது கடமை’ என்ற வாக்கியம் மேலதிகமாக இடம் பெற்றுள்ளது.

இந்த இடத்தில் நாம் இன்னுமொரு விடயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது தூக்கத்தில் சிலருக்கு விந்து வெளிப்பதுவதுண்டு. அதற்கு ‘இஹ்திலாம்’ எனச் சொல்லப்படும். பெரும்பாலும் ஆண்களுக்கும், மிகச் சில பெண்களுக்கும் தூக்கத்தின் போது விந்து வெளிப்படும். தூக்கத்திலிருந்து விழித்துப் பார்த்தால் விந்து வெளிப்பட்டதற்கான எந்த அடையாளமும் ஆடையில் இருக்காது. விந்து வெளிப்பட்டது உறுதியாகத் தெரிந்தால், ஆடையில் அதற்கான அடையாளம் இருந்தால் குளிப்பது கடமையாகி விடும். விந்து வெளிப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டு அதற்கான எந்த அடையாளமும் ஆடையில் தெரியாவிட்டால் குளிப்பது கடமையில்லை.  

உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஆண்கள் உறக்கத்தில் (கனவில்) காண்பதைப் போன்று பெண்ணும் கண்டு, ஆண்கள் தம்மிடம் காண்பதைப் போன்றே பெண்ணும் தம்மிடம் (நீரைக்) கண்டாள். (இந்நிலையில் அவள்மீது குளியல் கடமையாகுமா?) என்று கேட்டார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களும் அங்கு இருந்தார்கள். அவர்கள், உம்மு சுலைம்! (இவ்வாறு வெட்கமின்றி கேட்டதன் மூலம்) பெண்ணினத்தையே கேவலப்படுத்திவிட்டாயே! உன் வலக் கை மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், இல்லை! நீதான் (பெண்ணினத்தைக் கேவலப்படுத்திவிட்டாய்!) உனது வலக் கை மண்ணைக் கவ்வட்டும்! என்று கூறிவிட்டு, ஆம்; அவ்வாறு அவள் கண்டால் அவள் குளித்துக் கொள்ள வேண்டும் என்று (உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), ஆதாரம்: முஸ்லிம் 520

    மாதவிடாய் நின்றதும் குளிப்பது அவசியமாகும்.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழவோ, நோன்பு நோற்கவோ கூடாது என்பதை நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். மாதவிடாய் நின்றவுடன் அவர்கள் தொழுவதாக இருந்தால் தொழுவதற்கு முன் குளித்து விட்டுத்தான் தொழ வேண்டும்.

அபுஹுபைஷ் என்பாரின் மகள் ஃபாத்திமா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர் இரத்தப் போக்கிலிருந்து சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(தொழுகையை விடக்) கூடாது. அது ஒரு நோய் தானே தவிர மாதவிடாய் அல்ல! எனவே மாதவிடாய் வரும் போது (மட்டும்) தொழுகையை விட்டு விடு! மாதவிடாய் நின்றதும் குளித்து விட்டுத் தொழு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ 32

    குளிக்கும் முறை

01. மர்மஸ்தானத்தையும், உடலில் பட்ட அசுத்தத்தையும் கழுவுதல்

நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது (முதலில்) தங்கள் மர்மஸ்தானத்தைக் கையினால் கழுவினார்கள். பின்னர் கையைச் சுவற்றில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். குளித்து முடித்து, இரு கால்களையும் கழுவினார்கள். அறிவிப்பவர்: மைமூனா (ரலி) நூல்கள்: புகாரீ 260

வலது கையால் இடது கையில் தண்ணீர் ஊற்றி, இடது கையால் மர்மஸ்தானத்தைக் கழுவுவார்கள் என்று புகாரீ 259 வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

02. உளுச் செய்தல்

கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது, அதற்கு முன்னர் உளுச் செய்வது நபிவழியாகும். அவ்வாறு உளுச் செய்யும் போது, கால்களை மட்டும் கடைசியாக (குளித்து முடிக்கும் போது) கழுவுவதும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தமது கைகளைக் கழுவிக் கொண்டு, தொழுகைக்குச் செய்வது போல் உளுச் செய்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரீ 248

குளித்து முடித்ததும் தாம் நின்ற இடத்தை விட்டு சற்று விலகி, இரு கால்களையும் நபி (ஸல்) அவர்கள் கழுவுவார்கள். அறிவிப்பவர்: மைமூனா (ரலி) நூல்கள்: புகாரீ 249

03.தலையைக் கோதி விட்டுப் பின்னர் குளித்தல்

நபி (ஸல்) அவர்கள் கைகளைத் தண்ணீரில் நனைத்து, ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தைக் கோதி விட்டுப் பின்னர் மூன்று தடவை தலையில் தண்ணீரை ஊற்றுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரீ 248

பின்னர் தமது கையால் தலை முடியைக் கோதுவார்கள். முடியின் அடிப்பாகம் நனைந்து விட்டது என்று அவர்கள் நினைக்கும் போது மூன்று தடவை தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரீ 272

நமது முடிகளில் ஒன்றிரண்டு நனையாமல் இருக்குமோ என்று சில பேர் எண்ணிக் கொண்டு பல வாளிகளை தலையில் இறைக்கின்றனர். இவ்வாறு அதிகம் அலட்டிக் கொள்வது தேவையில்லை. நபி (ஸல்) அவர்கள் செய்தது போல் ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தில் தடவிக் கோதிய பின் மூன்று தடவை தலையின் மீது தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் குளிக்கும் முறை பற்றி சிலர் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சிலர், ‘நான் என் தலையை இப்படி, இப்படியெல்லாம் (தேய்த்துக்) கழுவுவேன்’ என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘நான் மூன்று கை தண்ணீர் எடுத்து என் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி’ என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி) நூல்: முஸ்லிம் 545

‘நானோ இரண்டு கைகளாலும் தண்ணீர் எடுத்துத் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி’ என்று நபி (ஸல்) கூறியதாக புகாரீ 254 அறிவிப்பில் உள்ளது. கடமையான குளிப்பு அல்லாத சாதாரண குளிப்பைப் பற்றியதாக இது இருக்குமோ என்று சிலர் நினைக்கக் கூடும். முஸ்லிமில் இடம் பெற்ற (546வது) ஹதீஸில் கடமையான குளிப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.

பெண்கள் சடைகளை அவிழ்க்க வேண்டுமா?

‘அல்லாஹ்வின் தூதரே! நான் தலையில் சடை போட்டிருக்கிறேன். கடமையான குளிப்புக்காக நான் சடையை அவிழ்க்க வேண்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘வேண்டியதில்லை; உன் தலையில் மூன்று தடவை தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும்; பின்னர் உன் மீது தண்ணீரை ஊற்றிக் கொள்; நீ தூய்மையாகி விடுவாய்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி) நூல்: முஸ்லிம் 549

எனவே தலையின் அடிப்பாகம் நனைவது தான் கட்டாயமானது. மேலே உள்ள முடிகள் நனையாமல் இருப்பதால் குளிப்புக்கு எந்தக் குறைவும் ஏற்படாது. சடையை அவிழ்க்காமல் குளிக்கும் போது, பாதிக்கு மேற்பட்ட முடிகள் நனைவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தும் சடையை அவிழ்க்கத் தேவையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேற்குறித்த விபரங்களின் சாராம்சம்:

கடமையான குளிப்பை நிறைவேற்றும் ஆணோ, பெண்னோ முதலில் தமது மர்மஸ்தானத்திற்குத் தண்ணீர் ஊற்றி இடது கையால் தேய்த்துக் கழுவி விட வேன்டும். பின்னர் தொழுகைக்கு உழு செய்வது போன்று உழு செய்ய வேண்டும். ஆனால் கால்களை மாத்திரம் கழுவக் கூடாது. பின்னர் கைகளை தண்ணீரில் நனைத்து ஈரக் கையால் தலையின் அடிப்பாகத்தைக் கோதி விட்டு தலையில் மூன்று முறை தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் குளிக்க வேண்டும். குளித்து முடித்த பின் குளித்த இடத்திலிருந்து சற்று நகர்ந்து இரு கால்களையும் கழுவிக் கொள்ள வேண்டும். இது தான் நபி (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றிய முறையாகும். இந்நடைமுறைகளைக் கடைபிடிக்காமல் வெறுமனே குளித்தால் கடமையான குளிப்பு நிறைவேறாது என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

கடமையான குளிப்புச் சட்டமும் ஆலிம்கள் அறியாமையும்!

ஆலிம்களைப் பொருத்தமட்டில் மார்க்க விடயங்களில் அவர்களில் பலர் சோம்பேரிகளாகவே இருந்து வருகின்றனர். பள்ளிவாயல்களில் மக்களுக்கு ஐவேளை தொழுகை நடாத்தினால் நமது கடமை முடிந்து விடுகின்றது எனும் எண்ணத்தில் பல ஆலிம்கள் உலா வருவதை கண்கூடாகக் காணுகிறோம்.

மக்களுக்குத் தேவையான சட்ட திட்டங்களை உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் விளக்குவதில் இந்த ஆலிம்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. பரம்பரை பரம்பரையாக மக்கள் எதை மார்க்கமென நம்புகிறார்களோ அவற்றை அப்படியே சரி கண்டு அமுல்படுத்தும் போக்கு அதிகமான மத்ஹபு ஆலிம்களிடம் காணப்படுகிறது. மார்க்க விடயத்தில் பொதுமக்களின் அலட்சியப் போக்கும், ஆலிம்களின் சுய நலமும்தான் நமது பின்னடைவிற்கு மூல காரணம் என்றால் மிகையில்லை.

ஆலிம்களால் கவனமெடுத்துச் சொல்லப்படாத சட்டங்களில் இந்தக் கடமையான குளிப்புச் சட்டமும் ஒன்றாகும். தமக்குப் பின்னால் தொழும் தொழுகையாளிகளுக்கு ‘கடமையான குளிப்பின் சட்ட திட்டங்களை’ விளக்கும்  பொருப்பு ஒவ்வொரு ஆலிமுக்கும் உண்டு. ஆலிம்கள் உணர்வார்களா?

வெளியீடு: தேசிய தவ்ஹீத் ஜமாஅத், மீன்பிடி இலாகா வீதி, புதிய காத்தான்குடி-03

Published by

One response to “கடமையான குளிப்பை நிறைவேற்றுவது எப்படி?”

  1. Jazakallahu hairan

Leave a comment