கொழும்பு: தரம் 5 மாணவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்படாத இரண்டு வினாக்கள் நடந்து முடிந்த புலமைப் பரிசில் பரீட்சையில் கேட்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம். என். ஜே. புஸ்பகுமார மறுத்துள்ளார்.
பரீட்சை வினாத்தாள் 2 இல் காணப்படும் வினா எண் 21 மற்றும் 23 ஆகியனவே கணித பாடத்திட்டத்திற்குள் உள்ளடக்கப்படாதவையென சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்தத் தகவல் உண்மைக்கு புறம்பானதென மறுத்துள்ள பரீட்சைகள் ஆணையாளர், அதற்கான தகுந்த ஆதாரங்களையும் நிரூபித்துள்ளார்.
21 வது வினாவில் 2/3 + 1/4 = …… ஆகியவற்றைக் கூட்டுக என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே கேள்வி தரம் 05 கணித பாடப் புத்தகத்தில் 1 வது பாடத்தில் கீழ் 08 வது வினாவாக 2/3 + 1/4 = …. என அச்சிடப்பட்டிருப்பதனை அவர் சுட்டிக்காட்டினார். இதேபோன்று 23 வது வினாவில் 7 8/10 மற்றும் 25/100 ஆகியவற்றை தசம தானங்களில் எழுதுமாறு கேட்கப்பட்டிருந்தது.
இவையும் தரம் 5 கணித பாடப் புத்தகத்தின் 106 வது பக்கத்திலுள்ள தசம பாடத்தில் 7 8/10 = 7.8 எனவும் 2 25/100 = 2.25 எனவும் உதாரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அவர் விளக்கமளித்தார். ஆகையால் வெளியாகியிருக்கும் செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையெனவும் அனைத்தும் பாடத் திட்டத்துக்குட்பட்டவை எனவும் ஆணையாளர் நாயகம் கூறினார்.
– தினகரன்
Leave a comment