திருகோணமலை: இன்று குச்சவெளி பிரதேசத்தில் பல வகையான காரணங்களைக் கூறி இந்த பிரதேசத்திலுள்ள மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இந்த காணிகளுக்குள்ள அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரக் காணிகள் மற்றும் உறுதியுடைய காணிகளென பல வகையான அது மட்டுமல்ல கடந்த 30 வருடமாக காணிக் கச்சேரி நடத்தி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படாததனால் இன்று வரைக்கும் அந்த மக்கள் காணிக்கு எந்தவித ஆதாரமற்றவர்களாக இருந்து வருகின்றார்கள். இதனைக் காரணமாகக் கூறிக்கொண்டு இந்த பிரதேசத்திலுள்ள படைகளும் புத்த பிக்குக்களும் இணைந்து இந்த பிரதேசத்தில் உள்ள மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதுசம்மந்தமாக பிரதேச செயலாளரைத் தொடர்பு கொண்டால் பிரதேச செயலாளர் மேலதிகாரிகளின் பணிப்பில் செயற்படுகிறேன் எனக்கூறுகிறார். அதே சமயத்தில் இப்பிரதேச மக்களினால் பிரதேச செயலாளரிடம் பல்வேறு சந்தர்ப்பத்தில் தமது காணிகளுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்குமாறு கூறியபோது எடுக்காத ஒரு சிரத்தை தற்போது இக்காணிகளை பிறருக்கு வழங்குவதற்கு கொண்டு வருகின்றார். உதாரணமாக இப்பிரதேசத்திலுள்ள காணிகள் தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்திற்கு சொந்தமான காணிகள் என்றும் அதே போன்று வனவிலங்கு பகுதிகளுக்கு சொந்தமான காணிகள் என்றும் பறவைகள் சரணாலயத்திற்கு சொந்தமான காணிகள் என்றும் மற்றும் புனித பிரதேசத்திற்கு உள்ளடங்குகின்ற காணிகள் என்றும் கரையோரப் பாதுகாப்புக்கு சொந்தமான காணிகள் என்றும் படைகளின் தேவைக்கென்று உள்ள காணிகள் என்றும் இவ்வாறு பல்வேறு விதத்தில் இந்தக் காணிகளை தற்போது எடுத்து வருகின்றார்கள்.
புல்மோட்டைப் பிரதேசத்தில் அரிசிமலை என்ற பகுதியில் உள்ள விகாரைக்காக 500 ஏக்கர் காணிகள் தற்போது அளந்து எல்லைக்கல்லிடப்பட்டு வருகின்றது. இந்தப் பிரதேசத்திலுள்ள இந்தப் பகுதி மக்களுக்கு சொந்தமான அனுமதிப் பத்திரக்காணிகள் மற்றும் நீண்டகாலமாக அதாவது பிரிட்டிஸ் காலத்துக்குறிய உறுதிக்காணிகளும் அடங்குகின்றன. அதுமட்டுமல்ல அந்தப் பிரதேசத்தினுள் மிக நீண்ட காலமாக வீடுகள் அமைத்து குடியிருந்தவர்களின் காணிகளும் உள்ளடங்கப்பட்டு அந்தக் காணிகள் அளவீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளரிடம் முறையிடப்பட்ட போது, பிரதேச செயலாளர் மேலதிகாரிகள், அரசாங்க அதிகாரிகளுடன் உடனடியாக இப்பிரதேசத்திற்கு வருகைதந்து அந்தக் காணிகளை எல்லை காட்டி அளக்கின்ற நடடிக்கையை துரிதப்படுத்திச் சென்றிருக்கின்றார். ஆனால் இப்பிரதேச மக்களின் காணிகளுக்குரிய ஆதாரங்கள் இருக்கின்ற காணிகளையாவது விட்டு வையுங்கள் எனக்கேட்ட போது கூட அதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதே போன்று நாகவிகாரை எனச் சொல்லப்படுகின்ற ஒரு பகுதி அந்தப் பகுதியிலும் 250 ஏக்கர் காணி அளவீடு செய்வதற்காக திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஏதிர்வரும் காலங்களில் அதை அளவிடுவதாகவும் நில அளவைத் திணைக்களத்தில் தெரிவிக்கின்றார்கள். அவ்வாறு அந்தப் பிரதேசத்திலும் 250 ஏக்கர் அளவீடு செய்யும் போது தமிழ் முஸ்லிம் மக்களது அனுமதிப்பத்திரக் காணிகள் பாரிய அளவு செல்வதற்கு இருக்கின்றன. அங்கேயுள்ள ஒவ்வொரு அங்குலக் காணிகளும் இப்பிரதேச மக்களுக்கு சொந்தமானது. அதே போன்று ஆண்டாக்குளப் பகுதியில் அமைத்திருக்கின்ற விகாரைகளையும் 250 ஏக்கர் அளவீடு செய்ய இருப்பதற்காக நிலஅளவைத் திணைக்களமும் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கின்றவர்களும் தெரிவிக்கின்றனர். அவ்வாறு அமைக்கப்படும் போது கூட அங்குள்ள எமது மக்களின் விவசாயக்காணிகள் கூட பெருவாரியாக பறிமுதல் செய்ய இருக்கின்றது கவலைக்குரிய விடயமாகும்.
அதே போன்று இராணுவத்தினர் கடற்படைக்குத் தேவையென்று கூறி பொன்மலைக்குடா பகுதி பல அனுமதிப்பத்திரக் காணிகள் தற்போது வேலியிடப்பட்டு மக்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. அதே போன்று மண்கின்டி மலை என்று சொல்லப்படுகின்ற புல்மோட்டை 4ம்வ்ட்டாரப் பகுதியில் உள்ள காணிகள் இவ்வாறு கடற்படைக்கு சொந்தமானது எனக் கூறி அதன் எல்லைகள் நாளாந்தம் விஷ்தரிக்கப்பட்டு வருகின்றது. முகாமில் முன்னாலுள்ள பகுதிகள் என்று கூறினார்கள். தற்போது முகாமில் நாலாபக்கமும் காணிகள் எல்லையிடப்பட்டு வேலியிடப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்ல இவ்வாறு எல்லையிடப்பட்டு குறிக்கப்படுகின்ற காணிகளின் ஒவ்வொரு இடத்திலும் அங்கு புத்த பெருமான் சிலைகள் வைக்கப்படுகின்றன. இதனை அகற்ற செல்லும் போது அங்கு இனரீதியான முறுகல் ஏற்படுகின்றது.
பயத்தின் காரணமாகவும் அச்சத்தின் காரணமாகவும் இந்த பிரதேச மக்கள் எதையுமே செய்வதறியாது திகைத்துப் போய் இருக்கின்றார்கள். இது விடயமாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பல முறை பேசப்பட்டிருந்தும் கௌரவ சுசந்த புஞ்சிநிலம அமைச்சர் அவர்கள் இது சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த பிரதேச செயலாளருக்கு வலியுறுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கின்றது. அது மட்டுமல்ல புல்மோட்டை 13வது பிரதான வீதியில் 3ம் கட்டைப் பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களின் காணிகளை துப்பரவு செய்யும் போது அங்குள்ள படையினர் இராணுவத்தினர் தடுக்கின்றார்கள். ஆனால் அதே பகுதியில் பெரும்பான்மையினருக்கு சொந்தமான காணிகளை துப்பரவு செய்யும் போது அவர்களுக்கு எந்தவித கேள்வியுமின்றி அவர்களுக்கு எவ்வளவு காணிகளையும் துப்பரவு செய்யலாம் எவ்வளவு காணிகளையும் நெருப்பு வைக்கலாம் என்ற நிலை இருக்கின்றது.
உண்மையிலே இதை தெரியப்படுத்தும் போதும் இது சம்மந்தமாக கதைக்கும் போதும் நாங்கள் இனவாதிகளாகவும் அல்லது மக்களிடத்தில் குரோதத்தை ஏற்படுத்துவர்களாகவும் காட்டப்படுகின்றோம். ஆளுங்கட்சி அங்கத்தவர்கள் ஆளுங்கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் இவ்வாறு அரசாங்கத்திற்கெதிராக கருத்து தெரிவிக்கின்றார்கள் என்ற கருத்துக் கூட முன் வைக்கப்படுகின்றது. ஆனால் இந்த ஆளுங்கட்சி பிரதேச சபையை உருவாக்கியவர்கள் இந்த பிரதேச மக்கள் என்பதை மறந்துவிடுகின்றார்கள். ஆளுங்கட்சி பிரதேச சபையை உருவாக்குவதற்காக இந்த பிரதேச முஸ்லிம் தமிழ் மக்களே வாக்களித்தார்கள். அவர்கள் வாக்குக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாகிய நாங்கள் பேச முடியாமல் இருக்க முடியவில்லை. இந்த நிலையை நாங்கள் தொடர்ந்து அனுமதிப்பவர்களாக இருந்தால் இந்த பிரதேசத்தில் எதிர்காலத்தில் எமது மக்கள் குடியிருப்பதற்கு காணிகளற்ற நிலை ஏற்படுவதற்கு வாய்;ப்பிருக்கிறது.
இது மட்டுமல்ல இந்தக் புல்மோட்டைப் பிரதேசத்தில் மட்டுமல்ல குச்சவெளியில் இலந்தைக் குளப் பகுதி என்ற ஒரு பிரதான பகுதி அந்தக் குச்சவெளிப் பகுதியில் பூர்வீகம் அங்குதான் ஆரம்பிக்கப்பட்டது. அந்தக் குச்சவெளிப் பிரதேசத்தில் உள்ள இலந்தைக்குளப் பகுதி கூட தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்திற்கு சொந்தமான காணிகள் என்றும் கூறி கற்கள் இடப்பட்டு எல்லையிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல திரியாய் பிரதேசத்தில் திரியாய் கிரி கண்டு சாய என்று சொல்லப்படுகின்ற விகாரையைச் சுற்றியுள்ள 3000 ஏக்கர் காணி அளவீடு செய்து எல்லையிடப்பட்டிருக்கிறது. அந்த கிரிக்கண்டுசாய் விகாரைக்கு சொந்தமானது என்று கூறி இவ்வாறு எடுக்கப்படுகின்ற 3000 ஏக்கர் காணி அந்தப் பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியாகும். இவ்வாறு தமிழ் முஸ்லிம் மக்களது காணிகள் பல்வேறு காரணங்களையும் கூறி எடுக்கப்படுவதானது இப்பிரதேச மக்களிடையே பாரிய நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துகின்றது.
கடந்த காலங்களில் தேர்தலின் போதும் இந்த பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட எமக்கு வாக்களித்து எமது பிரதேச சபையினால் ஆளுங்கட்சி பிரதேச சபையாகவும் எமது அரசாங்கத்தினது பிரதேச சபையாகவும் ஆக்கியமைக்கு மூல காரணகர்த்தாவாகவும் இருந்தார்கள். அதுமட்டுமல்ல கடந்த மாகாணசபை தேர்தலில் கூட இந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் எமக்கு வாக்களித்தார்கள். பெரும்பான்மையாக எமக்கு வாக்களித்து இருக்கின்றார்கள். அது மட்டுமல்ல அரசாங்கம் சம்மந்தமான நம்பிக்கையுடனே இந்த மக்கள் இந்தப் பகுதிகளுக்கு வருகின்ற அமைச்சர்களுக்கு ஏனைய அரசாங்க அதிகாரிகளுக்கும் ஆதரவு வழங்கி வரும் இந்த காலகட்டத்தில் இவ்வாறான நடவடிக்கை மேலும் விரிசலையும் மக்களுக்கு அவநம்பிக்கையும் ஏற்படுத்துவதற்குரிய வாயப்புக்கள் இருக்கின்றது.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது சம்மந்தமாக நடவடிக்கை எடுத்து மக்களுக்குரிய காணிகளை உரியவர்களிடத்தில் வழங்கவதற்கும் இதுவரை காலமும் செய்த தவறுக்கு பிராய்ச்சித்தமாகவேனும் இந்தப் பிரதேசத்தில் உள்ள காணிகளை ஒப்படைக்க வேண்டும். கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் காணிக்கச்சேரி நடத்தப்பட்டு அவர்களுக்கான எந்த முடிவுகளும் மக்களுக்கு கிடைக்கப்பெறாத நிலையிலேயே இன்று இவ்வாறான விசித்திரமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது.
இதில் ஆச்சரியத்திற்குரிய விடயம் என்னவென்றால் ஒரு மதகுரு அதற்கு பின்னால் பல படையினர் செல்வதனால் சொந்தப் பிரதேச மக்கள் அச்சமுறுகின்றார்கள். ஒரு மதகுருவும் அதற்கு பின்னால் விஷேட அதிரடிப் பிரிவினைச் சேர்ந்த உத்தியோகத்தவர்களும் இலங்கை காவல் துறையைச் சேர்ந்த உத்தியோகத்தவர்களும் அதே போன்று கடற்படையைச் சேர்ந்தவர்களும் அணிவகுத்துச் செல்கின்றார்கள். இவ்வாறு செல்லும் போது அவர் தனது கைங்கரியத்தை செயற்படுத்துகின்றார். மக்களைக் கண்டவுடன் ‘ இது எங்களது காணி நீங்கள் வெளியேற வேண்டும் ‘ ‘ இது பன்சலைக்குரிய காணி நீங்கள் வெளியேற வேண்டும் ‘ ‘ இது இராணுத்திற்குரிய காணி நீங்கள் வெளியேற வேண்டும் ‘ எனப் பல்வேறு காரணங்களைக் கூறி இந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
ஏதிர்வரும் காலம் விவசாய காலமாகும். இந்த விவசாயம் செய்வதற்காக காடுகளை அவர்களது வயல் நிலங்களை துப்பரவு செய்வதற்கோ வரம்புகளிடுவதற்கோ முடியாத நிலை ஏற்படுவதற்குரிய நிலை தென்படுகிறது. எனவே முன்கூட்டியே இது சம்மந்தமான நடவடிக்கைகளை எடுக்கும் போதுதான் இந்தப் பிரதேச மக்கள் நிம்மதியாக விவசாயம் செய்வதற்கும் ஏதுவாக அமையும் என்று நினைக்கின்றேன். எனவே இது போன்ற நடவடிக்கை தொடர்வதற்கு பங்காளியாக இருக்கின்ற நாங்களோ அல்லது ஏனையவர்களோ இடமளிப்பவர்களாக இருந்தால் எதிர் காலத்தில் இப்பிரதேசத்திலுள்ள மக்கள் நிலமின்றி வாழக்கூடிய நிலையே ஏற்படவுள்ளது. எனவே பிரதேச செயலாளர் மாகாணக் காணி ஆணையாளர் மற்றும் இந்தக் காணி விடயங்களுடன் சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் துரித கதியில் செயற்பட்டு இந்த மக்களுக்கு காணிகளைப் பெற்றுத்தர வேண்டும்.
அதே போன்று இந்த மாவட்டத்திலுள்ள அரசியல் தலைமைத்துவங்களிடமும் நான் உருக்கமாக பொதுவான வேண்டுகோளை விடுக்கின்றேன். இவ்வாறான காலகட்டத்தில் இந்தப் பிரதேச மக்கள் முகங் கொடுக்கவுள்ள பிரச்சினைகளை கட்சிபேதங்களை மறந்து சமூக ரீதியாக சிந்தித்து இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் நாங்கள் எதிர்காலத்தில் எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எந்தக் கொள்கையையுடையவர்களாக இருந்தாலும் மக்களது வீடுகளுக்கு சென்று வாக்குகளைக் கேட்கக் கூடிய அருகதையுடையவர்களாக இருப்போம் என்ற செய்தியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

Leave a comment