இலட்சிய பயணத்தை மாகாண சபையிலிருந்து ஆரம்பிப்போம்-ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியின் முதன்மை வேட்பாளர் சி. தவராசா

upfa– பழுளுல்லாஹ் பர்ஹான்

ஊர்காவற்றுறை: தமிழ் மக்கள் அகிம்சை வழியிலும், ஆயுத வழியிலும் போராடியவர்கள், அதனால் அதிகம் இடிந்தவர்கள்.  வலிகளோடும், வடுக்களோடும் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். உரிமைகளுக்காக போராடி இருந்த உரிமைகளையும், உணர்வுகளையும் இழந்திருக்கின்றோம்.

யார் எதைத் தந்தாலும் அவை நமது இழப்புக்களை ஒருபோதும் ஈடுசெய்யாது என்பதை நான் அறிவேன். இவ்வாறு நேற்றைய தினம் (29.08.2013) ஊர்காவற்றுறையில் நடைபெற்ற கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளர் தவராசா கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்;

பொருட்களாக இழந்திருந்தால் அதை எங்களால் ஈடுசெய்திருக்க முடியும். நாம் இழந்ததோ பெறுமதி மிகுந்த உயிர்கள், அவற்றை யாராலும் மீட்டுத்தர முடியாது.

எங்கள் பாசமிகு மக்களே, நாம் போராட்டத்தின் பெயரால் இழந்தவற்றை இன்று இவர் மறந்து விட்டார்கள். போராடிய அந்தக் கரங்கள் இரத்தக் கரை படித்தது என்று கூறுகின்றார்கள்.

தாமே புனிதமானவர்கள் என்றும் தாமே தலைவர்கள் என்றும் பதவிகளுக்காக பந்தல் விரிக்கின்றார்கள்.

மீண்டுமொரு போராட்டம், மீண்டுமொரு அழிவு யுத்தம், மீண்டுமொரு முள்ளி வாய்க்கால் அவலத்தை முன்னின்று நடத்தப் போவதாக கூறுகின்றனர்.

தமிழ் மக்கள் தொகையாக அவலச்சாவு சாவதும், அளவில்லாத துயரங்களை அனுபவிப்பதும்தான், தமது அரசியலுக்கு வலிமை சேர்க்கும் என்று வீரம் பேசுகின்றனர்.

இதுவரை நாம் அழிந்ததற்கும், இழந்ததர்கும் அர்த்தமற்றுப்போன வாழ்க்கையே நமக்கு பரிசாக கிடைத்துள்ளது என்றால், அதை நமக்கு பரிசளித்தவர்கள் இவர்கள்தான்.

ஆகவே நாம் மீண்டும் அழிவுப் பாதையில் பயணிக்கத் தயாரில்லை. போராட்டத்தில் தமது வாழ்வை தொலைத்து, வடுக்கள் சுமந்து வாழும் எமது உறவுகளை, இளைஞர், யுவதிகளை, கரை படித்த கரங்கள் என்று புறக்கணிக்க முடியாது.

நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். அதில் தவறுகள் இருக்கின்றன. தவறானவர்களின் வழிகாட்டல் இருந்துள்ளது. அவற்றை நாம் மீண்டும், மீண்டும் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

பழியாகிப் போன நமது உறவுகளுக்கு நாம் செய்யும் மரியாதை எதுவாக இருக்கும் என்றால், நமது மண்ணைப் பாதுகாத்து நமது மக்களின் வாழ்வை பாதுகாப்பானதாக மாற்றுவதில்தான் என்பதை கூறி வைக்க விரும்புகின்றேன்.

இந்த நாட்டில் வாழும் ஏனைய இனங்கள் பொருளாதாரத்திலும், தொழில் துறையிலும், கல்வியிலும் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளனர். நாமோ பல தசாப்தங்களாக அழிவு யுத்தத்திற்குள் சிக்குண்டு வாழ்வை சீர்குழைத்து வரும் பின்னடைவு கண்டுள்ளோம். நாம் பொருளாதார வளர்ச்சிக்காகவும், நிலையான மீட்சிக்காகவும், கடுமையான முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கின்றது.

அதுவே நமது இலட்சியமுமாகும். நாமும், நமது நாளைய தலைமுறையும் உலகக் போக்குக்கு ஈடு கொடுத்து வாழ வேண்டுமாக இருந்தால், சாதூரியமாகவும், சாணக்கியமாகவும் முன்னேறிச்செல்ல வேண்டும். வடக்கு மாகாண சபை நமது இலட்சியத்துக்கான பாதையின் நல்ல ஆரம்பமாக அமையும் என்பதில் எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

நாங்களும் நீங்களும் ஓரணி திரண்டு நாமாக இணைந்து வடக்கு மாகாண சபையை வெற்றி கொண்டு பயனத்தை ஆரம்பிப்போம். 

Published by

Leave a comment