கொழும்பு: இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைவதால் வடபகுதி கற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டு வரும் அவலங்களுக்கு நிரந்தர தீர்வு காணும் கடும் முயற்சியில் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டு வருவதாக ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் உயர் அரசியல் பீடம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,
மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல், நடந்து முடிந்த அழிவு யுத்தத்தில் வலிகளை சுமந்து நிற்கும் எமது கடற்றொழிலாளர்களை இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகை மேலும் வதைத்து வருகின்றது.
எமது மக்களின் கடல் வளங்களை முற்றாக அழிப்பதோடு மட்டுமன்றி எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார உழைப்பையும் இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறிய வருகை தடுத்து வருகிறது.
இந்த அவலங்களுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். எமது கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் அவலப்படுவதை நாம் சகித்துக் கொண்டிருக்க முடியாது.
எமது செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடபகுதி கடற்றொழிலாளர்களின் அவலங்களுக்கு தீர்வு காணும் எமது தொடர்ச்சியான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்.
இந்திய மீனவர்களை கடற்பரப்பில் வைத்து ஈ.பி.டி.பி யினரே தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்ற தமிழகத்தில் உள்ள சிலரின் பொய்யான பிரச்சாரங்களை சகலரும் அறிவார்கள்.
இது போன்ற பொய்யான பிரச்சாரங்களுக்கு காரணமாக இருப்பது ஈ.பி.டி.பியினராகிய நாம் எமது கடற்றொழிலாளர்களின் கடல் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் உறுதி கொண்டு உழைப்பதே ஆகும்.
யார் எம் மீது பழி சுமத்தினாலும், எமது கடற்றொழிலாளர்களின் அவலங்களுக்கு தீர்வு காணும் வன்முறைகள் அற்ற எமது செயற்பாடுகள் இனியும் தொடரும்.
செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இது எமது கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து இலங்கைக்கான இந்திய தூதுவர் வை. கே. சிங்கா அவர்களுடன் பேசியுள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான விஷேட பிரதிநிதி நவநீதம்பிள்ளை அவர்களுடனான பொதுவான சந்திப்பின் போதும் எடுத்து விளக்கியுள்ளார்.
இது தவிர ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களுடனான விசேட சந்திப்பின் போதும் இதை எடுத்து விளக்கியுள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றைய தினம் அமைச்சரவை கூட்டத்திலும் விஷேட பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார்.
இதன் பிரகாரம், இந்திய மீனவர்களுக்கும், எமது வட பகுதி கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் இணக்க பேச்சு வார்த்தையினை முதலில் நடத்துவது என்றும், இருபகுதி மக்களுக்கும் இடையிலான சுமுகமான இணக்கப்பாடுகளை வைத்து இலங்கை இந்திய அரசுகள் அதை நடைமுறைப்படுத்தும் நோக்கில் பேச்சு வார்த்தைகளை நடத்துவது என்றும் அமைச்சரவை கூட்டத்தில் இணக்கமான தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் உயர் அரசியல் பீடம் விடுத்துள்ள அந்த அறிக்கையில் எமது வடபகுதி கடற்றொழிலாளர்கள் இந்திய மீனவர்களுடனான இணக்க பேச்சுக்கு என்றும் தயாராகவே இருக்கின்றார்கள் என்றும், இதேவேளை இந்திய மீனவர்களை இவ் இணக்க பேச்சுக்கு கொண்டு வருமாறு இந்திய தூதுவர் வை. கே. சிங்கா அவர்களிடம் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment