நவநீதம்பிள்ளையைச் சந்திக்காமல் தலைமறைவாகும் முஸ்லிம் தலைமைகள்!

Escape%20Logo[1]ஏ. இனாமுல்லாஹ், கொழும்பு

கொழும்பு: ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தற்பொழுது இலங்கையில் வருகை தந்திருக்கின்றார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட-கிழக்கு மக்களை நேரில் சென்று சந்தித்து, தங்களது பிரச்சினைகளையும், தேவைகளையும் அறிந்து, அதற்கான ஆவனத்தையும் அறிக்கையையும் விரைவில் ஐ.நா மனித உரிமை அமைப்பிடம் சமர்ப்பிப்பார்.

இந்நாட்டில் 30 வருட கால கொடிய யுத்தத்தில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருந்தமை வரலாற்றுச் சான்றுகள். இந்ந விடயத்தை நவநீதம் பிள்ளைக்கு தெரிவிப்பது யார்?

நவநீதம்பிள்ளை தமிழ் மக்களை மாத்திரம் சந்திக்க வந்திருப்பது போலவே முஸ்லிம் தலைவர்கள் இன்று விலகிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

யுத்தப்பாதிப்புக்கும் அப்பால் சிங்கள பேரினவாதத்தின் அச்சுறுத்தல்கள், கடந்த இரு வருடங்களாக இலங்கை முஸ்லிம்களுக்கு இருந்து வருகின்றன. பள்ளிவாயல்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் மத்ரஸாக்கள் தாக்கப்பட்டதற்கான சான்றுகளும், ஆவனங்களும் எங்களிடத்தில் இருக்கும் போது, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்பதாக முஸ்லிம் தலைவர்கள் ஒழிந்து விட்டனர்.

இவர்கள் எல்லாம், முஸ்லிம்களிடத்திலுள்ள பிரச்சினைகளை மென்மேலும் வளரத்துக் கொள்ளவும், குழுக்களை குழுக்கள் விமர்சிக்கவுமே முயல்கிறார்களே தவிர, இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல்களுக்கு எவ்வித வழிமுறைகளையும் இதுவரை ஏற்படுத்த முடியாமல் இருக்கின்றனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவாக இருக்கட்டும், முஸ்லிம் காங்கிரஸாக இருக்கட்டும், தௌஹீத், தரீக்கா அமைகப்புக்களாக இருக்கட்டும் அல்லது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கட்டும், எவருமே நவநீதம் பிள்ளையிடம் முஸ்லிம்களின் இக்கட்டான நிலையினை சொல்வதற்கு வெட்கப்படுகின்றனர்.

ஏனெனில் அவர் ஒரு பெண். நாங்கள் ஆண்கள். எப்படி எங்களது மறைவான (அவ்றத்) விடயத்தைச் சொல்வது என்று நினைக்கிறார்கள் போலும் ( சிரிக்க வேண்டாம்).

ஏனெனில் இவர்களைப் பொருத்தமட்டில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினை அவ்றத் போன்றது. (மறைக்கவே வேண்டும்). இதனால்தான் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகளை இவர்கள் எவரும் முன்வந்து சுட்டிக்காட்ட தயங்கி வருகின்றனர். ஓர் அரசியல் பின் புலத்தால் இயக்கப்படும் இவர்களை முஸ்லிம்கள் தெளிவாக இனங்கான வேண்டும்.

நாளை நவனீதம் பிள்ளை ஐ.நா. இல் சமர்ப்பிக்கும் அறிக்கை, முஸ்லிம் சமூகம் இல்லாத இலங்கை போலவே அமையப் பெறும். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, சொந்தங்களை இழந்த தமிழ் மக்கள், இராணுவ அழுத்தங்களையும் துச்சமென மதித்து, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் தங்களது பிரச்சினைகளை தெரிவித்து வரும் இந்நிலையில், கண்முன்னால் தொடர்ந்து நசுக்கப்பட்டு வரும் எமது முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை முன்மொழிய எங்களுக்கு யாருமில்லை!

பொன்னாடை போர்த்தி, தரமான விருந்தும் கொடுப்பதற்கே இலங்கை முஸ்லிம் தலைமைகள் லாயிக்கானவர்களே தவிர, பிரச்சினைகளை முன் மொழிய அவர்களுக்கு அரசாங்கத்தின் ‘தூது’ வரவேண்டும்.

அதுவரை நாங்கள் காத்திருப்போம்….?

Published by

Leave a comment