கண்டி மாவட்ட முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கே வாக்களிக்க வேண்டும் -அமைச்சர் பஷீர் சேகுதாவூத்

bazeerஏறாவூர்: கண்டி மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கே வாக்களிக்க வேண்டும் என அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். கண்டி மாவட்ட முஸ்லிம் பிரமுகர்கள் சிலரை அமைச்சர் பசீர் ஷேகுதாவூத் சந்தித்து உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறினார். ஏறாவூரில் நடைபெற்ற இச்சந்திப்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

கண்டி மாவட்டமென்பது நமது கட்சியின் தலைவருடைய மாவட்டமாகும். இங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியடைந்து விடக்கூடாது. அதனால் இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு எமது கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு வாக்களிக்க வேண்டும் என விரும்பி ஐக்கிய தேசியக்கட்சி பிரசாரம் செய்கின்றது. சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலத்திலிருந்து அக் கட்சிக்கு முஸ்லிம்களை வாக்களிக்கும் இயந்திரங்களாகவே மதிப்பிட்டு செயற்பட்டு வந்துள்ளது.

அனைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்து நமது கட்சியை பலப்படுத்த வேண்டும். தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு மாத்திரம் தான் பாராளுமன்றத்தில் எட்டு பாராளுமன்ற உறுப்பினர் இருக்கின்றனர்.

வேறு எந்த முஸ்லிம் கட்சிகளுக்கும் இவ்வாறான கூடுதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அந்தஸ்து இல்லை.

எனவே இந்த அந்தஸ்த்தை பாதுகாப்பதற்கு கண்டி மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கே வாக்களிக்க வேண்டும்.

இந்த மாகாணசபை தேர்தல் சனிக்கிழமை நடைபெறுவதால் தேர்தல் தினத்தன்று 3 மணிக்குப்பின்னர் சென்று வாக்களிக்க முடியாத துரதிர்ஷ்டம் ஏற்படும்.

அனைத்து முஸ்லிம் தொழிலாளர்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்கச் செய்யுமாறு நான் இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் கூறினார்.

– வீரகேசரி

Published by

Leave a comment