மோப்ப நாய்கள் திருமண விவகாரம்: கலாசாரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பொலிஸ் திணைக்களம் ஆழ்ந்த கவலை!

dogகொழும்பு: நாய்களுக்கு கலாசார முறைப்படி திருமணம் செய்து வைத்ததன் மூலம் ஏதும் கலாசார மரபுரிமைகளுக்கு பாதிப்போ அபகீர்த்தியோ ஏற்பட்டிருந்தால் அது குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்தது. எந்த ஒரு கலா சார உரிமையையும் அவமதிக்கும் நோக்குடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டது.

மத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எச். என்.பீ. அம்பன்வலவின் யோசனைக்கமைய பொலிஸ் மோப்ப நாய்களுக்குத் திருமணம், கண்டி அஸ்கிரிய பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. குற்ற விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் மோப்ப நாய்கள் அதிக செலவில் வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்படுகின்றன.

2011 இல் நெதர்லாந்திலிருந்து மோப்ப நாய்களை இறக்குமதி செய்வதற்கு பொலிஸ் திணைக்களம் 700 இலட்சம் ரூபா செலவிட்டது. வெளிநாட்டுக்கு செலவிடும் பெரும் தொகைப் பணத்தை சேமித்து நாட்டின் காலநிலைக்கு உகந்த நாய்களை உருவாக்குவதே இந்த நாய் திருமணத்தின் நோக்கமாகும். பொலிஸ் திணைக்களத்தினால் முதற்தடவையாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டம் கால்நடை வைத்தியர்களின் சிபாரிசுடன் முன்னெடுக்கப்பட்டது.

dog

முதற்கட்டமாக 9 நாய் ஜோடிகள் தெரிவு செய்யப்பட்டன. இதற்காக மலர்களினால் அலங்கரித்த மணமேடை ஒன்று அமைக்கப்பட்டது. இது எமது கலாசாரத்தை சித்திரிக்கும் மணமேடையல்ல. புகைப்படம் பிடிப்பதற்காகவே இந்த மணமேடை அமைக்கப்பட்டது.

இந்த வைபவத்தின் சில அம்சங்கள் எமது கலாசாரத்திற்கு மாற்றமானதென சில தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். பொலிஸ் திணைக்களம் எப்பொழுதும் சகல மக்களினதும் கலாசார உரிமைகளை மேலாக மதித்து நடக்கிறது. ஏனைய கலாசார உரிமைகளை அவமதிக்கும் நோக்குடன் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்படவில்லை.

வருடாந்தம் வெளிநாட்டுக்கு செல்லும் பெருந்தொகைப் பணத்தை சேமிப்பதே இதன் நோக்கம்.

– தினகரன்

Published by

Leave a comment