கொழும்பு: பொலிஸ் திணைக்களம் புதிய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னர் செய்த முதலாவது கடமை நாய்களுக்கு திருமணம் செய்துவைத்தமையாகும். என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு இது நல்லதொரு உதாரணமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
உயர்ந்து செல்லும் வாழ்க்கை செலவினால் எங்களுடைய இளைஞர்கள் கூட தேன்நிலவுக்காக நுவரெலியாவுக்கு செல்லமுடியாதுள்ளபோது புதிய அமைச்சின் கீழ்வந்த பொலிஸ் திணைக்களம் முதல் வேலையாக, நாய்களுக்கு திருமணம் செய்து அவற்றை தேனிலவுக்காக நுவரெலியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இதுதான் ஆசியாவின் அதிசயம். பொலிஸ் திணைக்களம் ஓர் இளைப்பாரிய இராணுவ அதிகாரியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது இராணுவத்தின் பிரிவாக இருக்குமென நாம் ஒரு போதும் எதிர்ப்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.
நவீபிள்ளை இங்கு வந்தமைக்கு ஐக்கிய தேசியக்கட்சி அல்லது அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க காரணமில்லை. இலங்கையில் மனித உரிமை மீறல்களை ஆராய சர்வதேச சமுதாயத்துக்கு வாய்ப்புக்கொடுத்தவர் மஹிந்த ராஜபக்ஷதான் என்றும் அவர் சொன்னார்.
1988, 89 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன எனக்கூறிக்கொண்டு ஜெனிவாவுக்கு சென்று இலங்கையில் விசாரணை நடத்தவேண்டுமென கேட்டது மட்டுமன்றி ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு ஓர் உதவி செய்யக்கூடாதென மஹிந்த ராஜபக்ஷவே கேட்டார்.
இதன் பின்னர்தான் சர்வதேச சமுதாயம் எமது நாட்டில் மனித உரிமை மீறல்களை விசாரிக்க தொடங்கியது என்றுமு; அவர் தெரிவித்தார்.
Leave a comment