லண்டன்: அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்று கைப்பற்றியது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஷஸ் கிண்ணம் வென்ற உற்சாகத்தில், இங்கிலாந்து அணியின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உற்சாக மிகுதியில் பீட்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன் ஆகியோர் ஓவல் மைதானத்தின் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்தனர். அப்போது, அவுஸ்திரேலிய வீரர்கள் மற்றும் ஊடகத்தினர் மைதானத்தில் தான் இருந்தனர்.
இதனால், இவ்விடயம் வெளிப்பட்டு விட்டது. கிரிக்கெட் வீரர்களின் புனித இடமான ஆடுகளத்தை அசிங்கப்படுத்திய வீரர்களின் செயல் குறித்து, விசாரணை நடக்கிறது.
இது குறித்து அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் கூறுகையில், வீரர்களின் கொண்டாட்டம் என்பது டிரசிங் ரூமிற்குள் இருப்பது தான் சிறந்தது என்றும் மிகவும் பழமை வாய்ந்த ஓவல் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்தது, இங்கிலாந்து வீரர்களில் மிதமிஞ்சிய முட்டாள்தனமான, திமிர் பிடித்த செயல் எனவும் கூறினார்.
இங்கிலாந்து வீரர்கள் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்தது குறித்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (E.C.B) விசாரணை துவக்கியது. தவிர, தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஓவல் மைதானத்துக்கு உரிமையான சர்ரே கவுன்டி கிளப் தெரிவித்துள்ளது.
இது குறித்து சர்ரே தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட் கூறுகையில், வீரர்களின் செயல் மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. மிகுந்த பாரம்பரியமிக்க ஆடுகளத்தில் இப்படி நடந்தது அற்பத்தனமானது என்றார்.
ஆஷஸ் சரித்திரம் உருவானதே இந்த ஓவல் மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment