டெல்லி: ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட இந்திய அணியின் முன்னாள் தலைவரும், சிறந்த துடுப்பாட்ட வீரருமான அசாருதீன் ஒப்புக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கும் மத்திய அமைச்சர் பாரூக் அப்துல்லாஹ், முகமது அசாருதீனை ஜம்மு காஷ்மீர் அணிக்கான பயிற்சியாளராக வருமாறு தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தார்.
அசாருதீனும் பாரூக் அப்துல்லாஹ்வுடன் இது தொடர்பாக கடந்த சில மாதங்களாக ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் அசாருதீன், பயிற்சியாளராக செயல்பட ஒப்புக் கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் தற்போது லோக்சபா எம்.பியாக இருக்கும் அசாருதீன் முழு நேரப் பணியாக, பயிற்சியாளராக செயற்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கிடையில், முன்னாள் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் வினோத் கம்ப்ளி ‘இவர் லஞ்சம் ஊழல்கள் மூலம் எவ்வாறு அதிகமாக சம்பாதிக்கலாம் என்பது பற்றியே வீரர்களைப் பயிற்றுவிப்பார்’ என அசாருதீனை கேள்வி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment