சென்னை: கடல் வழியாக தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்கக்கூடும் என்று வந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை மாநகர் முழுவதும் காவல்துறையினர் விடியவிடிய வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் வழியே ஊடுருவி, தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்களை தாக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பயிற்சி முடித்த தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரபி கடல் வழியாக இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் இலங்கையை எளிதில் வந்தடைய முடியும் என்று அந்த புலனாய்வு எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து கடல்வழியே வந்து, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் முக்கிய பகுதிகளை தாக்க அவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை அல்லது மயிலாடுதுறையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பிரிவு இணை இயக்குநர் இந்த எச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சில மாதங்களில் இத்தாக்குதல் நடைபெறலாம் என்றும், இதற்காக 8 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றுள்ளதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை அடுத்து தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்க மூன்றடுக்கு ரோந்துபணிக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
சென்னையில் மெரினா கடற்கரை, காமராஜர் சாலை, அண்ணாசாலை, கிழக்கு கடற்கரை சாலை என 50க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனத் தணிக்கை நடைபெற்றது. சந்தேகத்திற்குறிய வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு முழுமையான விசாரணைக்கு பிறகே அனுப்பப்பட்டன. வாகனச் சோதனை மூன்று நாட்களுக்கு தொடரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த அச்சுறுத்தலையடுத்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் மயிலாடுதுறையில் பொலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


Leave a comment