‘ஃபொண்டெர்ரா இலங்கையில் தமது நடவடிக்கைகளை இடைநிறுத்துகிறது’

searchகொழும்பு: இலங்கையில் ஃபொண்டெர்ரா பால் உற்பத்தி நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. நியுஸிலாந்தின் ஃபோண்டெர்ரா நிறுவனத்துடைய பால் உற்பத்திப் பொருட்கள் அனைத்துக்கும் இரண்டு வார காலத்துக்கு விற்பனை, விநியோக விளம்பரத் தடைவிதிப்பதாக இலங்கையிலுள்ள நீதிமன்றம் ஒன்று முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

தேசிய சுகாதார சேவைகள் தொழிற்சங்கத்தினர் தொடுத்திருந்த மனு ஒன்றின் அடிப்படையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வந்திருந்தது. ஆனாலும், அந்த உத்தரவை நீதிமன்றம் இன்று நீக்கிவிட்டது.

இருந்தபோதிலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள ஒரு ஸ்திரமற்ற நிலையை அடுத்து தமது வாடிக்கையாளர்களுக்கான நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான தியோ ஸ்பியரிங் நியூசிலாந்து வானொலி ஒன்றுக்கான செவ்வியில் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள தமது 755 பணியாளர்களுக்கும், சொத்துக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு இது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.

நீதிமன்ற வழக்கை தொடர்ந்து சந்திக்கப்போவதாக அறிவித்த அவர், அங்கு நடக்கும் ஆர்ப்பாட்டங்களும் ஏனைய நிகழ்வுகளும் தமக்கு ஒருவிதமான ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சில நேரடி அச்சுறுத்தல் தமது பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகத்தில் மத்தியில் இருந்து அவை வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சுமார் 50 வருடங்களாக இலங்கையில் தாம் வணிகத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறிய ஸ்பியரிங் அவர்கள், அங்கு உள்ளூர் பால் உற்பத்திக்கும் தாம் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

தமது விவசாய பங்குதாரர்களின் முதலீடுகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் தாம் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

-BBc

Published by

Leave a comment