மேலதிக கட்டணம் அறவிடும் முகவருக்கெதிராக நடவடிக்கை!

Fawzy[1]கொழும்பு: புனித ஹஜ்ஜுக்காக இம்முறை சவூதி அரேபியா செல்லும் ஹாஜிகளிடமிருந்து ஒருவருக்கு நான்கு இலட்சம் ரூபா மாத்திரமே அறவிடவேண்டுமென முகவர்களுக்கு சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி உத்தரவிட்டுள்ளார். இத்தொகைக்கு மேலாக அறவிடும் முகவர்கள் குறித்து முஸ்லிம் சமய திணைக்களத்தில் ஹாஜிகள் முறையிட முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அவரது அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தே மேற்கண்ட தகவலை அமைச்சர் பெளஸி தெரிவித்தார். 

மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்:

வழமையைவிட  இம்முறை ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் புனித மக்கா மற்றும் மதீனாவில் செலவுகள் குறைவென எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலான கட்டணத்தை அறவிடும் முகவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இம்முறை 91 முகவர்களுக்கு 2240 ஹஜ் கோட்டாக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை 30 முகவர்கள் கொண்ட ஹஜ் சங்கமொன்று ஒரு யாத்திரிகரிடமிருந்து 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அறவிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இவ்வாறான ஹஜ் முகவர்களை நாங்கள் சந்தோசமாக வரவேற்கின்றோம். இம்முறை இலங்கையில் இருந்து 2240 பேருக்கு மட்டுமே ஹஜ் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களைத் தெரிவு செய்வதற்காக முதலில் 2800 பேருக்கு நேர்முகத் தேர்வு நடாத்தப்பட்டது.

இம்முறை முதலாவது ஹஜ் குழு எதிர்வரும் செப்டம்பர் இரண்டாம் வாரம் அனுப்பி வைக்கப்படும்.கடந்த வருடம் புனித மக்காவில் 30 இலட்சம் பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள். தற்போது புனித கஃபத்துல்லாவில் நிர்மாண வேலைகள் நடைபெறுவதனால் இந்த வருடம் ஹஜ் யாத்திரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி சவூதி அரேபியாவில் உள்ள யாத்திரிகர்களின் எண்ணிக்கை 50 வீதத்தினாலும் வெளிநாட்டு யாத்திரிகர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தினாலும் அந்நாட்டு அரசாங்கம் குறைத்துள்ளது.இதனால் இம்முறை 15 இலட்சம் பேர்களே ஹஜ் கடமைக்காக வருவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.

குறைந்த யாத்திரிகள் ஹஜ் கடமைக்காக வரும் காரணத்தினால் மக்கா மற்றும் மதீனாவில் போட்டித் தன்மை குறைந்து செலவுகள் குறைவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.  இதனாலேயே ரூபா 4 இலட்சம் அறவிட தீர்மானித்துள்ளோம் எனவும் அமைச்சர் பெளஸி தெரிவித்தார். GA

Published by

Leave a comment