மக்கள் ஆட்சிக்கான இணக்கப்பாட்டு மக்கள் ஒப்பந்தத்தில் PMGG மற்றும் FJP ஆகியன கைச்சாத்திட்டன

– PMGG ஊடகப்பிரிவு

PMGG-LOGO[1]கொழும்பு: ‘மக்கள் ஆட்சிக்கான இணக்கப்பாட்டு மக்கள் ஒப்பந்தம்’ எனும் வேலைத்திட்டம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (22.08.2013) கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இலங்கையின் 9 பிரதான அரசியற் கட்சிகளும் 50க்கும் மேற்பட்ட சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டு நிறுவனங்களும் இணைந்து முன்னெடுக்கவுள்ள மேற்படி வேலைத்திட்டத்தில் பிரதான 10 இணக்கப்பாடுகள் முன்னிறுத்தப்பட்டுள்ளன.

இந்த மக்கள் ஆட்சிக்கான இணக்கப்பாட்டு மக்கள் ஒப்பந்தம் எனும் வேலைத்திட்டத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் (PMGG) சார்பில் அதன் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் (நளீமி) மற்றும் சூறாசபை உறுப்பினர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் ஆகியோரும், நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணி (FJP) சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் நஜா முஹம்மத் மற்றும் அதன் உறுப்பினர் அஷ்ஷெய்க் ஐயூப் அஸ்மின் (நளீமி) ஆகியோரும் கலந்துகொண்டு கையொப்பமிட்டனர்.

மேற்படி நிகழ்வில் கைச்சாத்திடப்பட்ட 10 பிரதான இணக்கப்பாடுகளும் பின்வருமாறு…

1.நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழித்து பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறும் பிரதமரையும் அமைச்சரவையையும் உருவாக்குதல்.

2.18வது திருத்தத்தை ஒழித்து 17வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை மீண்டும் நிறைவேற்றுவதன் மூலம் அரச நிறுவனங்களில் சுயாதீனத் தன்மையைப் பலப்படுத்தல்.

3.இலங்கையைத் தாய்நாடாகக் கொண்ட சகல இன சமூகங்களினதும் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களது தனித் தன்மையைப் பேணுதல்.

4.விருப்பு வாக்கு முறையை ஒழித்து பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பலப்படுத்தல்.

5.தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்தல் மற்றும் பேச்சுரிமை, கருத்துக்களை வெளியிடும் உரிமையைப் பாதுகாத்தல்.

6.சட்டம் மற்றும் நீதிமன்றங்களின் சுயாதீனத்தை மீண்டும் நிலை நிறுத்தல்.

7.வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தல் மற்றும் ஊழலுக்கு எதிரான சட்டங்களைப் பலப்படுத்தல் மற்றும் செயற்படுத்தல்.

8.இலவசக் கல்வி,  இலவச சுகாதாரம் உட்பட்ட நலன்புரி சமூகமுறையைப் பாதுகாத்தல் மற்றும் பலப்படுத்தல்.

9.ஆட்சியாளர்களின் இலாபத்துக்கல்லாத உண்மையான மக்களுக்கான அபிவிருத்தித்திட்டங்களை அறிமுகப்படுத்தல்.

10.முறையான நிருவாகத்தை மீள நிலைநிறுத்துவதற்கு ஆரம்ப நடவடிக்கையாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதன் மூலம் சகல மக்களினதும் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்துவதன் மூலம் நாட்டின் சுயாதீனத் தன்மையைப் பாதுகாத்தல்.

என்ற மேற்கொண்ட 10 இணக்கங்களை அடிப்படையாகக் கொண்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக முழு சக்தியுடனும்,  அர்ப்பணிப்புடனும் செயற்படுவதாக இத்தால் உறுதி பூணுகிறோம்.

Published by

Leave a comment