கொழும்பு: ரயில்வே திணைக்களம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் 1864ம் ஆண்டில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இலங்கையின் காசுப்பயிர்களான தேயிலையையும், கோப்பியையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெருமளவு செல்வத்தை சம்பாதிக்கும் எண்ணத்துடன் மலைநாட்டில் இருந்து அவற்றை காலதாமதமின்றி கொழும்புக்கு தருவிப்பதற்காக அவ்வாண்டில் கொழும்பு மாநகரையும், அம்பேபுஸ்ஸவையும் இணைக்கும் 54 கிலோமீற்றர் நீளமான ரயில் பாதையை அமைத்து ரயில் சேவையை முதன் முதலில் ஆரம்பித்தார்கள்.
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் முதலாவது பிரதம பொறியியலாளராக இருந்த சேர்.கில்போர்ட் லின்சே மோல்ஸ்வர்த் பின்னர் இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றார். அன்று இலங்கை மக்கள் ரயில் வண்டிகளைப் பார்த்து நிலக்கரியை உண்டு ‘அங்குரு கக்காக வத்துற பிபி துவன யக்கட யக்கா’ அதாவது நிலக்கரியை உண்டு தண்ணீரைக் குடித்து ரயில் பாதையில் ஓடும் இரும்பு பேய் என்று அதனை பார்த்து பயபக்தியுடன் அழைத்தார்கள்.
ரயில் சேவை பின்னர் 1867ல் கண்டி வரையிலும் 1874ல் நாவலப்பிட்டி வரையிலும் 1885ல் நானுஓயா வரையிலும் 1894ல் பண்டாரவளை வரையிலும் 1924ல் பதுளை வரையிலும் நீடிக்கப்பட்டது. 1880ல் மாத்தளை வரையிலும் 1895ல் கரையோர ரயில் பாதையும் 1905ல் காங்கேசன்துறை வரையிலும் 1914ல் மன்னார் வரையிலும் நீடிக்கப் பட்டது.
1919ம் ஆண்டில் களனிவெளிக்கு சிறிய ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1926ல் புத்தளம் வரையில் ரயில் பாதை ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு, திருகோணமலைக்கு 1928ல் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
அன்று இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஒரு சின்னமாக விளங்கிய ரயில் சேவை இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்ட அவல நிலையை அடைந்துள்ளது. ரயில் சேவை இவ்விதம் சீர்குலைந்திருப்பதற்கு பிரதான காரணம் பொதுமக்களின் தேசப் பற்றற்ற சுயநலப் போக்கும், ரயில்வே திணைக்கள ஊழியர்களின் அசமந்தப் போக்குமே பிரதான காரணமாகும்.
1960ம் ஆண்டு தசாப்தம் ஆரம்பிக்கும் வரை ரயில் சேவை சிறந்து விளங்கியது. ஓரிடத்தில் ரயில் சேவை முடிவடைந்தவுடன் ரயில் பெட்டிகளை சுத்தமாக்கி கழிவறைகளை கழுவி சுத்தம் செய்து தூசு தட்டி சுத்தமாக அன்று ரயில்வே ஊழியர்கள் வைத்திருந்தார்கள். காலப்போக்கில் ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டிகளை சுத்தமாக வைத்திருப்பது தங்கள் கடமை என்பதை மறந்து மாற்றாந்தாய் மனப்பாங்குடன் நடந்து கொள்வதும் ரயில் திணைக்களத்தின் இன்றைய அவல நிலைக்கும் ஒரு காரணமாகும்.
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொற்காலம் என்று கூறுமளவுக்கு சிறப்புற்று விளங்கிய காலம் 1955ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலமாகும். அப்போது ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளராக இருந்தவர் பீ.டி. ரம்பால என்ற திறமைமிக்க பொறியியலாளராவார். இவரது காலத்திலேயே நிலக் கரியைப் பயன்படுத்தும் நீராவி என்ஜின்களுக்கு பதிலாக டீசல் மூலம் ஓடும் என்ஜின்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இவ்விதம் சிறப்புற்று விளங்கிய ரயில்சேவை 1980ம் ஆண்டில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தினால் சீர்குலைந்து போனது. அன்று ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜயவர்தன தனது அடக்குமுறை கொள்கையின் மூலம் பொது வேலை நிறுத்தத்தை சீர்குலைத்து அதில் சம்பந்தப்பட்ட ஆயிரக்கணக்கானோரை பதவி நீக்கம் செய்தார்.
இதனால், ரயில்வே திணைக்களமே மிகவும் பாதிப்புக்குள்ளானது. ரயில்வே திணைக்களத்தில் இருந்து நூற்றுக்கணக்கான திறமைமிக்க ரயில்வே நடத்துனர்கள், புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள், என்ஜின் சாரதிகள் மற்றும் பொறியியலாளர்கள் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டு வீசியெறியப்பட்டனர். அப்போது ரயில்வே சேவைக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் பொரளை வனாத்த முல்லையில் இருந்த படிப்பற்றவர்களை நூற்றுக்கணக்கில் ரயில்வே ஊழியர்களாக சேர்த்துக் கொண்டார்.
ரயில் சேவையில் இருந்துவந்த நல் ஒழுக்கம் இந்த புதிய ஊழியர்கள் சேவையில் சேர்க்கப்பட்டதையடுத்து சீர்குலைந்து போயிற்று. இதனால், எதற்கெடுத்தாலும் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம், அடையாள வேலைநிறுத்தம் போன்றவற்றில் ஈடுபட்டார்களே ஒழிய ரயில் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்கும் எண்ணம் இருக்கவில்லை.
ரயில்வே திணைக்களத்திற்கு பயணடிக்கட் மூலமான வருமானமும் வீழ்ச்சியடைந்தது. டிக்கட் எடுக்காமலேயே பலரும் பயணித்தார்கள். குறுகிய தூரத்திற்கு டிக்கட்டை வாங்கி நீண்ட தூரத்திற்கு பயணம் செய்யும் மோசடியில் ஈடுபடுவோரும் இருக்கிறார்கள். இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை மாதம் 31ம் திகதி வரை டிக்கட் இல்லாமல் பயணித்த 1,329 பேர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 23 இலட்சம் ரூபா அபராதம் அறவிடப்பட்டுள்ளது.
இவ்விதம் டிக்கட் இல்லாமல் பயணிப்பவர்கள் நாட்டின் நாலா பக்கங்களுக்கு செல்லும் ரயில் சேவைகளில் நஷ்டத்தை ஏற்படுத்தினார்கள். அன்று இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு வடபகுதிக்கான ரயில் சேவை மூலமே கூடுதலான வருமானம் கிடைத்தது. 1987ம் ஆண்டிலிருந்து வடபகுதிக்கான ரயில் சேவை எல்.ரி.ரி.ஈ.க்கு எதிரான யுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டதனால் ரயில்வே திணைக் களத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
ரயில் ஊழியர்கள் தங்கள் சுயநலத்தைப் பார்க்காமல் ரயில்வே திணைக்களத்தின் மேம்பாட்டுக்காக கடுமையாக உழைத்தால் மாத்திரமே ரயில்வே சேவையை இயற்கை மரணத்தில் இருந்து எங்களால் காப்பாற்ற முடியும்.
-தினகரன்
Leave a comment