மட்டக்களப்பு: மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புச்சாக்கேணி எனும் கிராமத்தில் பேய் பிடித்ததாக கூறப்பட்ட ஒரு குடும்பத்தினை குணப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நேற்று மாலை ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த கிராமத்தில் வசித்துவரும் 5 பேர் கொண்ட குடும்பத்தில் நீண்டகாலமாக நோயும், அவலச் சத்தமும், அடிக்கடி பேய் பிடித்து பயங்கரமான உணர்வு ஏற்பட்டால் போல் தங்களை மறந்த ஆடுதல் போன்ற செயற்பாடுகள் அடிக்கடி இடம்பெறுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இக்குடும்பத்தினருக்கு ஏற்பட்ட பரிதாப நிலையைக் கண்ட பிரதேச பூசகர்கள் மற்றும் மந்திரவாதிகளிடம் சென்று பூஜைகள் செய்தும் பலனில்லாமல் போயுள்ளது.
இந்நிலைமையினால் குடும்பத் தலைவன் தொழிலுக்கு செல்ல முடியாமலும் பிள்ளைகள் பாடசாலை சென்று கல்வி கற்றுக்கொள்ள முடியாத நிலைமையும் ஏற்பட்டிருந்தது.
மேற்படி குடும்பத்தின் சம்பவங்களை நேரில் கேட்டும் கண்டறிந்தும் கொண்ட இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து நோயினை குணப்படுத்தும் முகமாக பிரபல்யமிக்க பூசாரிகளான மாவத்தகம ஆனந்த ஹாமதுருவோ மற்றும் அளுத்கம பன்சாரோ ஹாமதுருவோ ஆகியோர்களை அழைத்து வந்து பூசை வழிபாட்டினை மேற்கொண்டனர்.
இச்செயற்பாட்டினை பிரதேச பொதுமக்கள் ஆச்சரியத்துடன், பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். பூசை நடவடிக்கையின் போது குடும்பத்தார் அனைவரும் பேய் பிடித்து ஆடியதுடன் அவர்களிடம் பிடித்திருந்த பேய்கள் ஓட்டப்பட்டுள்ளமையையும் உணரமுடிந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்த பிரதேச மக்கள் தெரிவித்தனர். TW
Leave a comment