மட்டக்களப்பு: மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படவுள்ள காணிக் கச்சேரியினை மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராம மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே. றம்ழான் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்களின் காணிப் பிரச்சினைகள் மிக நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்து வந்தது. அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் கிராம சேவகர் பிரிவுகள் தோறும் காணிக் கச்சேரிகளை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மிக நீண்ட காலத்தின் பின்னர் நடாத்தப்படும் இக்காணிக் கச்சேரியினை மக்கள் தவற விடாமல் முழுமையாக பயண்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் அதிகமானவர்கள் மிக நீண்ட காலமாக காணி அனுமதிப் பத்திரங்கள் இன்றியும் சிலர் காணி அனுமதிப் பத்திரம் இருந்தும் அதனை தனது பிள்ளைகளுக்கு பங்கிட்டு கொடுத்து புதிய காணி அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்ள முடியாமலும் சிலர் மரணித்த தங்களது உறவினர்களின் பெயரிலுள்ள காணி அனுமதிப் பத்திரங்களை பெயர் மாற்றம் செய்ய முடியாமலும் வசித்து வருகின்றனர்.
தங்களது பெயர்களில் காணி அனுமதிப் பத்திரம் வழங்கப்படாமையினால் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள தங்களது அமைவிடங்களுக்கு மின்சார இணைப்புக்களை பெற்றுக் கொள்ள முடியாமலும் மட்டக்களப்பு மாநகர சபையில் சோலைவரி இலக்கங்களை பெற்றுக் கொள்ள முடியாமலும் காணி அனுமதிப் பத்திரம் மற்றும் சோலைவரி இலக்கங்கள் இன்றி தங்களது காணிகளில் ஒரு நிரந்தரக் கட்டித்தினையோ அல்லது அபிவிருத்தி வேலைகளையோ மேற்கொள்ள முடியாமலும் மிகவும் கஸ்டத்தை அனுபவித்து வருகின்றனர்.
இவ்வனைத்திற்கும் நடாத்தப்படவுள்ள காணிக் கச்சேரி மூலம் நிரந்தரத் தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அதனை சரிவர மக்கள் பயண்படுத்த வேண்டும். அந்த அடிப்படையில் எதிர் வரும் 22.08.2013 வியாழக்கிழமை காலை மஞ்சந்தொடுவாய் தெற்கு கிராம சேவகர் பிரிவுக்கான காணிக் கச்சேரி அக்கிராம சேவகர் பிரிவுக் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.
இச்சந்தர்ப்பத்தை புதிய காணி அனுமதிப் பத்திரம் கோரி விண்ணப்பித்தவர்களும் அனுமதிப்பத்திரத்தின் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பித்தவர்களும் மரணித்தவர்களின் பெயர்களை மாற்றம் செய்யக் கோரி விண்ணப்பித்தவர்களும் தவற விடாமல் முழுமையாக பயப்படுத்தி பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a comment