எகிப்து கலவரமும் அரபிகளும் உலக மக்களும்..

-MJ

abdullahimagesCAJXDBFPஎகிப்து கலவரம்:

முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்கு எதிரான செயற்பாடுகளை எகிப்து இடைக்கால அரசாங்கம் மேற்கொண்டுவந்த வேளையில், இடைக்கால அரசாங்கத்துக்கும், முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் ஆதரவாளர்களுக்குமிடையே குறிப்பாக கெய்ரோவில் உச்சக்கட்ட கலவரம், குறைந்தது கடந்த ஒருவாரமாக இடம்பெற்று வருகின்றது.

இக்கலவரத்தின் காரணமாக இதுவரைக்கும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். எனினும் உலக செய்தி ஊடகங்கள் 800க்கும் இடைப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்து வருகின்றன.

முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் போராட்டக்கார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கானவர்களுள், நேற்று தப்பிக்க முயன்ற வேளையில் 36 பேர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

எகிப்தில் ஹொஸ்னி முபாறக் பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் இரத்தக்கலரியில் எகிப்து மூழ்கி வருகின்றது.

1954ம் ஆண்டு முஸ்லிம் சகோதரத்துவக்கட்சி எகிப்தில் இராணுவ ஆட்சியின்போது தடைசெய்யப்பட்டிருந்தது. கடந்த தேர்தலில் அரச சார்பற்ற நிறுவனமாக இக்கட்சி பதிவுசெய்யப்பட்டது.

அகமட் மொர்ஸி வெற்றி பெற்றபோது, ஹொஸ்னி முபாரக்கின் ஆதரவாளர்கள் மொர்ஸியை தூற்றி வந்தனர். இதைவிட குறுகிய மனப்பான்மை கொண்ட சுயலாபம் கொண்ட முஸ்லிம்கள், மொர்ஸியை ஓர் ஷியா என கூறி, விமர்சித்தும் வந்தனர்.

காலம் கடந்ததும், இன்று மொர்ஸியை தூற்றிய மக்கள், அவரது ஆதரவாளர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

ஓர் நாட்டில் நூறு வீதமான மக்கள் எக்கட்சிக்கும் ஆதரவு வழங்குவதில்லை. முஸ்லிம்களுக்குள்ள மார்க்க முரண்பாடுகள், வெளிநாட்டுக் கொள்கைகள் என்பவற்றால் முஸ்லிம் நாடாக இருப்பினும், மக்களின் மனநிலை வேறுபட்டதாகவே அமைந்து வருகின்றன.

இதனால், மொர்ஸியின் ஆதரவாளர்கள், நடப்பு அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இப்போராட்டம், முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினரின் பெரும்பான்மை பிரதேசங்களிலேயே இடம்பெற்று வருகின்றன.
இதே போல் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்கு எதிரான மக்கள் அங்கு இடைக்கால அரசாங்கத்தையும், இராணுவத்தையும் ஆதரித்து வருகின்றனர்.

எனவே அங்கு இரு பிரிவினர்களாக பொதுமக்கள் நோக்கப்படுகின்றனர்.

இவற்றுக்கிடையில் கொல்லப்படுவது மாத்திரம் முஸ்லிம்கள் என்பதை அந்நாட்டு மக்கள் மறந்துவிடுகின்றனர் என்பது கசப்பான உண்மை!

அரபு உலகம்:

அரபிகளுக்குள்ள தற்பெருமை, மொழி வேறுபாடுகள், கௌரவம் என்பவற்றால், அரபு உலகம் எகிப்தை மதிப்பதில்லை!

எகிப்தியர்களை தங்கள் நாடுகளில் வேலைக்கமர்த்துவதில் மாத்திரம் கவனம் செலுத்தும் அரபுலகம், எகிப்தியர்களை இரண்டாம் நிலைக்கு மதித்து வருகின்றனர்.

எகிப்தியர்களின் அரபி பாஷை சவூதியர்களுக்கும், ஏனைய அரபு உலகத்துக்கும் கேலியாகவும் இருப்பதை அரபிகள் விமர்சிக்கும் நிலை இருக்கின்றது.

தங்கள் நாடுகளுக்குள் வந்து எகிப்தியர்கள் (ஏனைய நாட்டவர்களும்) தங்களது பெண்களை திருமனம் செய்வதற்கு மறுக்கும் அரபிகள், எகிப்துக்குச் சென்று ஒப்பந்த திருமணங்களை செய்து தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றனர்.

அரபிப் பெண்களுக்கான மருத்துவம், சிகிச்சை மற்றும் கல்வி நோக்கத்துக்காக அரபி பாஷை என்பதற்காக மாத்திரம் வேலைக்கு  எகிப்தியர்களை அமர்த்தினாலும், நாடு முரண்பாடு அரபுலகத்துக்கு இருந்து வருகின்றது.

இந்நிலையில், எகிப்து மக்கள் கொல்லப்படுவதை எந்த அரபு நாடுகளும் இதுவரை முன்வந்து கண்டிக்கவில்லை. ஏனெனில் அரபிகளுக்கு அகமட் மொர்ஸியைப் பிடிக்காது.

எகிப்தில் கொல்லப்படும் மொர்ஸியின் ஆதரவாளர்கள் கலகக் காரர்கள் எனவும், மொர்ஸிக்கு எதிரானவர்கள் பொது மக்கள் எனவும் இத்தகைய அரபு நாடுகள் கருதி வருகின்றன. ஏனெனில் இங்கு முஸ்லிம் என்ற இனம் மறக்கப்பட்டு, தங்களுக்கு அடிபணியும், அல்லது தங்களது நாட்டுக் கொள்கைகளை மதிக்கும் தலைவர்களையும் மக்களையுமே அரபுலகம் தேடிவருகிறது.

அண்மைய காஸா-இஸ்ரேல் போராட்டத்தில், அரபுத்தலைவர்களை கெய்ரோவுக்கு வரும்படி அவசரமான வேண்டுகோளை அகமட் மொர்ஸி விடுத்திருந்தார். இந்த வேண்டுகோள் அமெரிக்காவின் கைக்குழந்தையான இஸ்ரேலுக்கு எதிரான ஓர் கூட்டமாக அமைந்து விட்டால், அமெரிக்கா தங்களை பகைத்துக்கொள்ளும் என அஞ்சி, காஸா மக்களை மதிக்காது, அமெரிக்காவுக்காக, கெய்ரோ செல்வதை அரபுத் தலைவர்கள் தவிரத்துக் கொண்டனர்.

எனவே, எகிப்திலோ அல்லது பாரசீகத்திலோ, அல்லது ஏனைய நாடுகளிலோ முஸ்லிம்கள் தாக்கப்படும்போது அரபுலகம் குரல் கொடுக்கும் என்பதை முஸ்லிம்கள் மறந்துவிட வேண்டும்.

நாங்கள் இலங்கையில் இருந்துகொண்டு எகிப்து மக்களுக்கு வடிக்கும் கண்ணீர், எங்களது பள்ளிவாயல்கள் தாக்கப்படும்போது, எகிப்து மக்களோ, அரபுத் தலைவர்களோ எங்களுக்குச் சிந்தவில்லை.

எனவே முஸ்லிம்கள் என்ற வகையில் நாங்கள்தான் பெருமைப்பட வேண்டும். ஏனெனில் எங்களது பிரார்த்தனை அப்பாவி முஸ்லிம்கள் எங்கும் கொல்லப்படக்கூடாது என்பதே!

போராட்டக் குழுக்கள்:

முஸ்லிம்களின் போராட்டக் குழுக்களாகச் சித்தரித்து, உலகளவில் பெயர்வாங்கிக் கொண்ட போராட்டக் குழுக்கள் எகிப்து விடயத்தில் மூக்கை நுழைக்கவில்லை.

குறிப்பாக அல்-கைதா, வாயைத் திறக்கவே இல்லை. ஏனெனில் இவர்களின் எதிர்பார்ப்புப்படி அல்கய்தா கொள்கைக்கு முரணாணவர்களே கொல்லப்படுகிறார்களே தவிர, முஸ்லிம்கள் அல்லர்!

இஸ்லாமியவாதிகளாக தங்களைச் சித்தரித்துக்  கொண்டு, முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாக உலகுக்கு அறிமுகப்படுத்திய அல்கொய்தா, தாங்கள் இஸ்லாத்தைப் பினபற்றுகிறமோ இல்லையோ, தங்களது கொள்கைக்கு எதிரானவர்களை போட்டுத் தள்ளுவதில் மாத்திரம் சரித்திரம் படைத்து வருகின்றனர்.

இஸ்லாம் காட்டித்தராத யுத்தங்களையும், வழிமுறைகளையும் கையிலெடுத்து, பாடசாலைச் சிறுவர்களையும், பஸ்வண்டிகளையும் இலக்கு வைத்து தாக்கிவிட்டு, குகைக்குள் ஒழிந்து மறைவதால், இஸ்லாமிய ஆட்சியை இவர்களால் உலகுக்குக்  கொண்டுவர முடியாது!

இதேபோல் காஸா-பலஸ்தீன் தாக்கப்படும்போது கண்ணீர் வடித்த எகிப்து மக்களின் இன்றைய நிலை அறிந்து, கண்ணீர் சிந்துவதற்கு ஹமாஸிற்கும் முடியாமல் போய்விட்டது.

நபி (ஸல்) அவர்களின் சொற்படி எழுபதுக்கும் மேற்பட்ட கூட்டத்தினராக முஸ்லிம்கள் இன்று பிரிந்துவிட்டனர். அவற்றுள் இஸ்லாமியக் கொள்கை வாதிகளாகவும், இஸ்லாத்தின பேரிலான அரசியல் வாதிகளாகவும், இஸ்லாத்தின் பேரிலான ஆயுதக் குழுக்களாகவும் உலகில் பிரிந்து விட்டனர்.

இஸ்லாமியக் கொள்கை ரீதியில் பிரிந்தவர்களுக்கிடையில் ஒற்றுமையில்லை!

ஆயுத ரீதியில் பிரிந்தவர்களிடத்தில் ஒற்றுமையில்லை!!

அரசியல் ரீதியாக பிரிந்தவர்களிடத்தில் ஒற்றுமையில்லை!!!

பிரிவதால்-பிரிந்துவிட்டனரே தவிர ஒன்று சேர அவகாசமில்லை!

இதனால்தான், யஹூதியும் நஸாராவும் எங்கள் முதுகில் குத்துகிறார்கள், நாங்கள் சுமக்கிறோம்.

யதார்த்தம்:

ஈராக் தாக்கப்படும்போது, சுன்னிகள் தாக்கப்படுகிறார்கள் என்றது அரபுலகமும் ஈராக்குக்கு எதிரான முஸ்லிம்களும்.

ஈராக்கில் அமெரிக்காவுக்கு கால் பதிக்கவே முடியாது. ஏனென்றால் அங்கு அவ்லியாக்களின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் அடக்கப்பட்டிருக்கறார் அவர் வந்து காப்பாற்றவார் என்றனர் இன்னொரு கூட்டம்.

பாவம், முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்களே என்று வருந்தியது முஸ்லிம் சமூகம்.

லிப்யா புரட்சியல் கடாபி கொல்லப்பட்டார். அங்கும் இரத்த ஆறுகள் ஓடின.

கடாபியை எதிர்த்தது பெருங்கூட்டம்.

இவன் கொல்லப்படவே வேண்டும்,அநியாயக் காரன் என்றும் சொன்னார்கள்.

இல்லை. எங்கள் வாழ்க்கையில் ஒளிவீசச் செய்த ஓர் மகான். அமெரிக்காவுக்கு சவாலாகவும், அமெரிக்கர்களைவிடவும் வசதியாகவும் எங்களை வாழ்வதற்கு உதவி செய்தவர் கொல்லாதீர்கள் என்றனர் கடாபியின் ஆதரவாளர்கள்.

பாவம்.. என்ன இருந்தாலும் கொல்லப்படுவது முஸ்லிம்களே என்று வருத்தப்பட்டு பிரார்த்தித்து கண்ணீர் விட்டனர் முஸ்லிம்கள்

இந்த அநீக்கு எதிராக குரல் கொடுக்க எந்த அரபு நாடு வந்தது?

இறுதியில் அமெரிக்காவின் காலடியில் சுருண்டு கிடக்கும் அரபுத்தலைவர்களுக்கு மாறாக, தங்களை ஓர் சிங்கம் என அடையாளப்படுத்தி, அமெரிக்காவை பகிரங்கமாக எதிர்த்து, சவால்விட்டு வந்த  இரு முஸ்லிம் தலைவர்கள் அமெரிக்காவின் சூழ்ச்சியில் வீழ்த்தப்பட்டனர்.
தோற்றது யார்? சதாமா? அல்லது கடாபியா??
இல்லை. முதுகெழும்பில்லாத முஸ்லிம் சமூகம் தோற்றுப்போனது.

நாளை….

இதே போல்தான் நாளை ஈரான் தாக்கப்பட்டால்…(அல்லாஹ் பாதுகாப்பானாக)

ஷியாக்கள் அழியனும் என்பார்கள் ஒரு கூட்டம்.

அமெரிக்காவுக்கு அழிவே-அலி பரம்பரையில்தான் காத்திருக்கிறது-பொருத்திருங்கள் என்பார்கள் இன்னொரு கூட்டம்!

இதற்கிடையில்.. பாவம் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்களே என பிரார்த்திக்கும் முஸ்லிம் சமூகம்.

இப்படித்தான் எங்களது முஸ்லிம் சமூகத்தின் நிலை இருக்கின்றது.

சிறுபான்மையாக 8 வீதத்துக்கும் குறைவான சமூகமாக இலங்கையில் வாழும் எங்களுக்குள்ளேயே 70 கூட்டம் என்றால், பரந்த அரபுலகத்தில் எத்தனை கூட்டங்களும், கருத்து முரண்பாடுகளும் இருக்கும் என்பதை முகத்திரையை நீக்கிவிட்டு உலகத்தை எட்டிப்பார்க்க வேண்டும்!

இந்த உலகில் தற்போதைக்கு எந்தவொரு தலைவராளும் முஸ்லிம்களை ஓரணியில் திரட்ட முடியாது என்பதால்தான், நபி (ஸல்) அவர்கள், இந்த சமூகத்தை ஒன்றிணைத்து வழிநடாத்த முடியுமான இமாம் மஹ்தி (அலை) அவர்களையும், ஈஸா (அலை) அவர்களையும் எதிர்வு கூறிச் சென்றிருக்கின்றனர்.

இலங்கையில் இதுவரை தாக்கப்பட்ட பள்ளிவாயல் விடயத்தில் எந்த அரபு நாடு கண்டணங்களை இலங்கை அரசாங்கத்துக்குத் தெரிவித்திருந்தது என்பதை நாங்கள் எங்களை நோக்கிக் கேட்க வேண்டும். எனினும், அரபு நாடுகளில் இருந்து வரும் உதவிகள் தங்கு தடையின்றி இலங்கைக்கு வந்து கொண்டே இருக்கின்றன என்பது அந்நாடுகளின் கொள்கை என்பதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

ஓர் முஸ்லிமாக இருக்கட்டும், முஸ்லிம் இயக்கமாக இருக்கட்டும் அல்லது முஸ்லிம் நாடாக இருக்கட்டும் அனைவரும் நினைத்துக்கொண்டிருப்பது, தங்களது கொள்கை மாத்திரமே சரியானதென்பதே!

எனவே, எகிப்து விடயத்தில் சவூதி வாய்திறக்கும், அல்லது எதிர்த்துவிட்டார்கள் என்று ஒப்பாரி வைப்பதைவிட்டுவிட்டு, அம்மக்களுக்காக பிரார்த்தணையில் நாம் ஈடுபடவேண்டும். 

எகிப்தில் அநியாயமாகக் கொல்லப்படும் மக்களை யா அல்லாஹ் நீ மன்னித்து அருள்புரி!

Published by

Leave a comment