மலையகக் கட்சிகள் மோதல்: ஒருவருக்கு கத்திக்குத்து, வாகனங்கள் சேதம்

accidentகொட்டகலை: இலங்கையில் மலையகத்தில் அரசாங்க கூட்டணியில் போட்டியிடுகின்ற தமிழ்க் கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தினருக்கும் இடையே கொட்டகலை நகரில் மோதல் ஏற்பட்டுள்ளது.

அங்கு 14 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பின்னர் ஹட்டன் நகரில் வைத்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொட்டகலை ஏற்பாட்டாளர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் கண்காணிப்புக் குழுவான கஃபே அறிவித்துள்ளது.

பின்னர், ஹட்டனில் உள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் அலுவலகமும் அக்கட்சியின் கொட்டகலை வேட்பாளர் ஒருவரின் வீடும் இன்றிரவு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

முன்னதாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் பி. ராஜதுரையும், அவர் பிரதித் தலைவராக இணைந்துகொண்டுள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரமும் பயணித்த வாகனத் தொடர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கபே அமைப்பு கூறுகிறது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களே தம்மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜதுரை முறைப்பாடு செய்துள்ளார்.

ஆனால் தங்கள் வேட்பாளர்கள் மீதே சிலர் தாக்குதல் நடத்தியதாகவும் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாகவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் கூறியுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்குள் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்றும் கட்சியினர் தன்னை ஓரங்கட்டுவதாகவும் கூறியே ராஜதுரை எம்.பி கட்சியிலிருந்து வெளியேறினார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளியாக உள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆறுமுகன் தொண்டமான், வீ. ராதாக்கிருஷ்ணன், பி. ராஜதுரை ஆகிய 3 பேர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்றனர். அக்கட்சியின் தலைவர் முத்து சிவசிவலிங்கம் தேசியப் பட்டயல் நியமனம் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

ஆனால் பின்னர், வீ. ராதாகிருஷ்ணன் கட்சியிலிருந்து விலகி மலையக மக்கள் முன்னணியின் அரசியல் தலைவராக இணைந்துகொண்டார்.

தற்போது ராஜதுரையும் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொண்டுள்ளதை அடுத்து, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் மூத்த தலைவர்களான தொண்டமானும் முத்து சிவலிங்கமும் மட்டுமே நாடாளுமன்றத்தில் எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி. திகாம்பரம், பின்னர் மகிந்த அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆளுந்தரப்புக்கு மாறிவிட்டார்.

accident

-BBc

Published by

Leave a comment