சென்னை: பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) சென்னையில் இன்று மரணமடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்த பெரியார்தாசன், சிகிச்சை பலனில்லாமல் மரணத்தைத் தழுவினார். கடந்த 2010ம் ஆண்டுதான் பெரியார்தாசன், இஸ்லாத்தைத் தழுவி தனது பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்டார்.
பெரியார்தாசனாக அவர் வலம் வந்தபோது தீவிர நாத்திகனாக திகழ்ந்தார். மூடத்தனம், அறியாமை உள்ளிட்டவற்றுக்கு எதிராக தீவிரமாக பேசி வந்தார். பகுத்தறிவை வளர்க்கப் பாடுபட்டவர்
ஆனால் கடந்த 2010ம் ஆண்டு அவர் திடீரென இஸ்லாம் மதத்தைத் தழுவினார். இதுகுறித்து அவர் விளக்கம் தருகையில், மதம் ஒன்றுதான் மனித உள்ஙங்களை உலகத்துடன் இணைக்கும் ஒரே வழி என்பதை உணர்ந்ததால்தான் இஸ்லாமுக்கு மாறினேன். இஸ்லாம் மட்டுமே கடவுளால் அளிக்கப்பட்ட நூலை முறையாக பின்பற்றுகிறது என்று கூறியிருந்தார்
மாணவராக இருந்தபோதே தீவிர பகுத்தறிவாளராக திகழ்ந்தவர் பெரியார்தாசன். பல்வேறு மதங்களின் கோட்பாடுகளையும் படித்துக் கரைத்தவர்.
பெண் சிசுக் கொலைக்கு எதிரான கருத்தம்மா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமாவிலும் அறிமுகமானார் பெரியார்தாசன். மேலும் சில படங்களிலும் பெரியார்தாசன் நடித்துள்ளார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் பெரியார்தாசன். கடைசியாக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
மறைந்த பெரியார் தாசன் தனது கண்கள் மற்றும் உடலைத் தானமாக தருவதாக ஏற்கனவே உறுதியளித்திருந்தார்.
அதன்படி அவரது மரணச் செய்தி அறிந்ததும் சங்கர நேத்ராலயா மருத்துவர்கள் வந்து கண்களைப் பெற்றுச் சென்றனர். அதேபோல அவரது உடல் சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக அளிக்கப்படும்.
63 வயதான பெரியார்தாசனுக்கு வசந்தா என்ற மனைவியும், வளவன், சுரதா என இரு மகன்களும் உள்ளனர்.



Leave a comment