சென்னை: இலங்கையில் நடைபெறும் ”கொமன்வெல்த்” நாடுகளின் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று நான் வெளியிட்ட அறிக்கையில் தேசக் கண்ணேட்டத்தில் நம்பகத்தன்மையை முழுவதுமாய் இழந்து நிற்கிறது இலங்கை என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அதுகுறித்த வரலாற்று ரீதியான நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறேன்.
1920ம் ஆண்டு முதல் இந்தியாவிலிருந்து மலையாளிகள் கொழும்புக்குச் செல்லத் தலைப்பட்டு, முதலில் 1000 பேரில் ஆரம்பித்து பத்தாண்டில் 30 ஆயிரம் என்ற அளவிற்குப் பெருகினர்.
1935ல் மலையாளிகளுக்கு எதிராகச் சிங்களவர்கள் குரல் கொடுத்தனர். இவற்றின் விளைவாக, 1940களில் மலையாளிகள் கொழும்பை விட்டு வெளியேறத் தொடங்கினர்.
அதே 1939ல் 15ஆயிரம் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப இலங்கை சட்டசபை தீர்மானமாக்கியது. அரசுப் பணிகளில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்களை நீக்குமாறு டி.எஸ். சேனநாயகா முன்மொழிந்ததை, தமிழ் உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சட்டசபை தீர்மானமாக்கியது.
அதே ஆண்டில் கொழும்பில் நேரு பொதுக் கூட்டத்தில் குழப்பத்தின் விளைவாக அவரால் தொடர்ந்து பேச இயலாமல் போய்விட்டது.
1987ல் ராஜீவ் ஜெயவர்த்தனா உடன்பாட்டில் கையொப்பமிட்ட ராஜீவ் காந்தி புறப்படுமுன், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த அணிவகுப்பில், கடற்படை சிப்பாய் துப்பாக்கிக் கட்டையால் அவரை தாக்கினான். காயங்களின்றி ராஜீவ் காந்தி தப்பினார்.
அந்தக் கடற்படைச் சிப்பாய் சமீபத்தில் ஒரு பேட்டியில், தான் ராஜீவ் காந்தியைத் தாக்கியதற்காக வருத்தப்படவில்லை என்று பெருமையாகக் கூறினான் என்றால், எந்த அளவிற்குச் சிங்களவர் உள்ளத்தில் இந்தியர்கள் மீது வெறுப்புணர்வு வேரூன்றிப் பரவி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?
2000ம் ஆண்டு முதலாக நார்வே நாடு முயற்சி எடுத்து, 2002ம் ஆண்டு இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே போர் நிறுத்த உடன்பாடும் ஏற்பட்டன.
2008 ஜனவரி 8ம் தேதி இலங்கை அரசு இந்த உடன்பாட்டை ஒருதலைப்பட்சமாக முறித்தது.
1925ம் ஆண்டு ஜூன் 28ல் இலங்கைத் தமிழர் மகாசன சபை சார்பாக வைத்திலிங்கம் துரைசாமியும், இலங்கைத் தேசிய காங்கிரசின் ஆட்சிக்குழு சார்பாக சி.ஈ. கொரியாவும் யாழ்ப்பாணத்தில் கையெழுத்திட்ட ”மகேந்திரா உடன்பாட்டை” சிங்களவர் ஒருதலைப்பட்சமாக முறித்தனர்.
பிரிட்டிஷார் வழங்கிய அரசியலமைப்பில் உள்ள சிறுபான்மையினர் பாதுகாப்புக்குரிய 29ம் பிரிவுக்கு முரணாக, 1948 இலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1949 இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் இரண்டையும் இயற்றி, மலையகத் தமிழர் 10லட்சம் பேரின் குடியுரிமையை சிங்களவர் பறித்தனர்
1930களில் இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்களமும் தமிழும் ஆட்சிமொழியாக வேண்டும் என போட்டனர்; ஆனால், ”சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி” எனும் சட்டத்தை 1956 ஜூன் 5ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியவர், இலங்கைச் சுதந்திரக் கட்சியைச் சார்ந்த பிரதமர் பண்டார நாயகா.
ஜூலை 26ம் தேதி செல்வநாயகத்துடன் பண்டாரநாயகா ஏற்படுத்திய பிரதேச சபைகள் அமைக்கும் உடன்பாட்டை, 1958 மே மாதத்தில் சிங்களத் தீவிரத் தேசியவாதிகளின் தொல்லை தாங்காமல் ரத்து செய்தவர் அதே பிரதமர் பண்டாரநாயகா.
ஐந்து லட்சம் மலையகத் தமிழரின் விருப்பத்தைக் கேட்காமலேயே, 1964ன் சிறீமாவோ சாஸ்திரி உடன்பாட்டை மதிக்காமல், மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தியவர் பிரதமர் சிறீமாவோ பண்டார நாயகா.
1965 மார்ச் 25ம் தேதி செல்வநாயகத்துடன் எட்டிய அதிகாரப் பகிர்வு உடன்பாட்டைஇ சிங்களத் தீவிரத் தேசியவாதிகளின் எதிர்ப்பு ஊர்வலங்களுக்குப் பயந்து (அதில் 8.1.1966 அன்று புத்தபிக்கு ஒருவர் கொல்லப்பட்டார்) ரத்து செய்தவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த பிரதமர் டட்லி சேனநாயகா.
சிங்கள அரசுக்கு நெருக்கமானவர்கள்தான் 1981ல் அறிவுக் களஞ்சியமான யாழ்ப்பாண நூலகத்தைக் கொளுத்தினர். 1983ல் இனக் கலவரத்தை அரசே திட்டமிட்டு நடத்தியதால் தமிழர் பல்லாயிரக்கணக்கில் நாட்டை விட்டு ஓடினர்.
1987 ஜூலையில் ராஜீவ் ஜெயவர்த்தனா உடன்பாடு கொழும்பில் கையெழுத்தானது. வடகிழக்கு மாகாணங்கள் ஒரே ஆட்சி அலகாக இணைந்து, ஒரே மாகாண சபையின்கீழ், ஒரே ஆளுநர், ஒரே முதல்வர், ஒரே அமைச்சரவையின்கீழ் இயங்கும் என உடன்பாடு ஏற்றுக் கொண்டது. ராஜீவ் ஜெயவர்த்தனா உடன்பாட்டின் விளைவாக மாகாண சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கும் இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தம் தற்போது நீர்த்துப் போக முயற்சிகள் நடக்கின்றன.
சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பி என்று அழைக்கப்பட்ட லீ குவான் யூ அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து ஒரு பேட்டியில் ”இலங்கையில் சிங்களவர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ, அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர். இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்று தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசு இப்போதாவது உணர்ந்து கொண்டு; எவ்வித தயவு தாட்சண்யமுமின்றி இலங்கை அரசைத் தட்டிக் கேட்கவும், இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு உறுதியான அழுத்தத்தைத் தரவும் முன்வரவேண்டும். இந்தியாவின் தரப்பில் மேற்கொள்ளப்படும் சமரச முயற்சி எத்தகையதாயினும், அதை முறியடிப்பதை தனது சாகசச் சாதனையாகவே இலங்கை அரசு எடுத்துக் கொள்ளும் என்பதைப் புரிந்து கொள்ளாவிட்டால் இந்தியா பின்னர் வருந்த நேரிடும் என்று கூறியுள்ளார்.
Leave a comment