கொழும்பு: ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மீட்டல் வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் டியூசன் வகுப்புக்கள் நடத்துவது இன்று நள்ளிரவு 12 மணியுடன் தடை செய்யப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இத்தடை அமுலில் இருக்குமென பரீட்சைகள் ஆணையாளர் புஷ்பகுமார தெரிவித்தார்.
இந்தக் காலப் பகுதியில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான மாதிரி வினாத் தாள்கள் அச்சிடல், விநியோகித்தல், பரீட்சை தொடர்பான விளம்பரங்கள், பனர்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடுவது முற்றாகத் தடைசெய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜூன் மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய இந்தத் தடை அமுல்படுத்தப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
மாணவர்களுக்கு மீட்டல் வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் டியூஷன் வகுப்புக்கள் நடத்துபவர்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற விசேட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இத்தடையை மீறுபவர்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் 0112784208, 0112784537, 0113188350, 0112785212 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்கு மாறும் பரீட்சைகள் ஆணையாளர் கேட் டுக்கொண்டுள்ளார்.
– தினகரன்
Leave a comment