கொழும்பு: டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் முதன் முறையாக இடம்பெற இருந்த பகலிரவு டெஸ்ட் கிரிக்கட் போட்டி, இலங்கை கிரிக்கட் சபையின் அனுமதி மறுப்பால், கைவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (U.A.E.) இடம்பெற இருக்கும் இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டியை பகலிரவு ஆட்டமாக ஆடுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கட் சபை விருப்பம் தெரிவித்து, இலங்கை கிரிக்கட் சபையிடம் தங்களது அபிப்பிராயத்தைக் கோரியிருந்தது.
எனினும், தங்களது சிரேஷ்ட வீரர்களுடனும், அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்ததற்கிணங்க, பகலிரவு போட்டியாக இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கு எமக்கு ஆர்வமில்லை என இலங்கை கிரிக்கட் சபையின் தலைவர் ஜயந்த தர்மதாச தெரிவித்திருக்கின்றார்.
இதனால் கிரிக்கட் இரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டிருந்த டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் முதன் முதலாக இடம்பெறும் இப்போட்டியின் எதிர்பார்ப்புக்கள் குறைந்திருப்பதுடன், வழமை போலவே ஓர் டெஸ்ட் போட்டியாக விளையாடப்படும் என இப்போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக இடம்பெற வேண்டுமாயின் இருநாட்டு கிரிக்கட் சபைகளின் சம்மதத்தை ஐ.சி.சி. கோரி இருந்தது.
குறித்த போட்டி பற்றி பாகிஸ்தான் கிரிக்கட் சபைக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும், இரு அணிகளினதும் வீரர்களின் சம்மதமே தமக்கு மகிழ்ச்சியளிக்கும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் பேச்சார் நதீம் சர்வார் தெரிவித்திருக்கிறார்.
பகலிரவாக இடம்பெறும் டெஸ்ட் போட்டிக்கு இளஞ்சிவப்பு நிற (Pink) புதிய பந்து அறிமுகப்படுத்தப்பட இருந்தது.
எனினும் இன்னும் காலம் இருப்பதால் இலங்கை கிரிக்கட் சபையின் சாதகமான முடிவை தாங்கள் மேலும் எதிர்பார்த்திருப்பதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.
இரண்டு இருபது20 போட்டிகள், 5 ஓருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஓர் பெரும் தொடரில் பங்குபற்ற இலங்கை கிரிக்கட் அணி, எதிர்வரும் டிசம்பரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு (U.A.E.) செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![Pakistan-vs-srilanka-2nd-T20-match-410x250[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/10/pakistan-vs-srilanka-2nd-t20-match-410x25011.jpg?w=150&h=91)
Leave a comment