14.08.2013
சகோ. உஸ்தாத் றஷீத் ஹஜ்ஜுல் அக்பர்,
அமீர் – இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி,
தெமட்டகொட வீதி, கொழும்பு 10.
அஸ்ஸலாமுஅலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
இக்கடிதம் உங்களை வந்தடையும் போது தாங்களும் தாங்கள் குடும்பத்தாரும் பூரண உடல் நலத்துடன் இருப்பீர்கள் என நினைக்கிறேன். அத்துடன் சமூகத்திற்கான எங்கள் எல்லோரது பணிகளையும் அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் தொடர்ந்தும் செயலாற்ற நம் அனைவருக்கும் கிருபைசெய்ய வேண்டும் என வல்ல அல்லாஹ்வை வேண்டியவனாக…
எனதன்பின் உஸ்தாத் அவர்களே!
நான் இக்கடிதத்தை மிக மனவேதனையுடன் உங்களுக்கு எழுதுகிறேன். இதன் மூலம் எந்த வகையிலும் உங்களை குறைத்து மதிப்பிடுவதாகவோ அல்லது குரோதம் கொள்வதாகவோ நீங்கள் நினைக்கக் கூடாது. ‘எனது சமூகம் பற்றிய மனநிலையில் இப்படி ஒரு கருத்தை தற்போதைய நிலையில் என்னால் எழுதாமல் முன்வைக்காமல் இருக்க முடியாது, இது எனது உள்ளத்தின் இயல்பானதொரு வெளிப்பாடாகும்’ என்ற உங்களின் கருத்துக்கொப்பவே உங்களைப் போலவே தான் நானும். ஏதாவது உண்மையைச் சொல்ல வேண்டும் என்றிருந்தால் அதனை உடனே சொல்லிவிட வேண்டும். அதற்காக எவருடைய தயவையும் எதிர்பார்த்து நிற்பவனல்ல.
விடயத்தை ஆரம்பிக்க முன்பே சில புரிதல்களை முன்வைக்க விரும்புகிறேன். அதாவது இக்கடிதம் முஃப்தி அவர்களுக்காக வலிவதல்ல. அவருடனும் நான் பல விடயங்களில் கருத்துக்களால் முரண்பட்டவன். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனவே தான் நான் ஜம்இய்யத்துல் உலமாவுக்கு வெளியிலும் பணிகள் செய்யவேண்டுமென்ற ஆவலோடு பல நிறுவனங்களுடனும் சேர்ந்து செயற்பட்டு வருகிறேன்.
அதே நேரம் ஜம்இய்யத்துல் உலமா வலுவிழந்து போவதையும் நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏனெனில் இந்நாட்டுக்கு அதுவொரு சொத்து என்பதையும் தாங்கள் அறிவீர்கள். இந்த அடிப்படையை வைத்தே இக்கடிதத்தை எழுதுகிறேன்.
இன்றும் மங்காமல் மக்கள் நாவுகளில் உலா வந்துகொண்டிருக்கும் பிறைப்பிரச்சினை உண்மையில் பெரும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மற்றுமல்லாமல் உள்ளங்களுக்கு மத்தியிலிருந்த சமூக ஒற்றுமையிலும் ஒரு கீறலை ஏற்படுத்தி விட்டதாகவே நான் கருதுகிறேன். இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பற்றி பலரும் பல கருத்துக்களை இணையதளங்களிலும், முகநூல் போன்ற சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு வந்தனர். அவைகளில் பலரின் கருத்துக்கள் மிக மோசமானதாகவும். ஒரு சாதாரண மனிதனால் கூட பிரயோகிக்கப்படக்கூடாத வார்ததைகளாலும் ஜம்இய்யாவை விமர்சித்திருந்ததை நீங்களும் படித்திருப்பீர்கள்.
அத்துடன் எல்லோருடைய விமர்சனங்களும் ஒரு தனி மனிதனை சுட்டிக்காட்டி அவரையே இலக்காகக் கொண்டு ஒரு கூட்டு சதி செய்கிறார்கள் போலும் என எண்ணத் தோன்றியது. சரி அறியாதவர்கள், பாமரர்கள் தான் இப்படியான நாகரிகமற்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என எண்ணிக்கொண்டு மனதில் அவர்களை அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என பிரார்த்தனையும் செய்துகொண்டேன்.
பிரச்சினை ஏற்பட்டு ஒரு நாள் இருநாளாகி விடியும் போது பிறைப்பிரச்சினையை மறந்து பலர் பிறைதொடர்பான கருத்துக்கள் கூறாமல் ஒரு தனிமனிதனை குறி வைத்து ‘அவரை அடியோடு வேரறுத்துப் போட்டுவிட வேண்டும்’ என்றே கருத்து சொல்ல ஆரம்பித்திருந்தனர்.
தொடரான அந்த விமர்சன அலைகளுக்குள் ‘வியாழன் பெருநாளா…? நோன்பா…?’ என்ற உங்களது ஆக்கத்தையும் படித்தேன். அதிலும் அதே தனிநபர் குறிவைக்கப்பட்டிருந்தாலும் உங்கள் மீது என்னுள் இருக்கும் ஒரு பற்று அதனையும் நியாயமானதாகவே காண்பித்தது. அத்துடன் அதிலும் நியாயமான பல கருத்துக்களும் இருக்கத்தான் செய்தன.
மீண்டும் இரண்டு நாட்களுக்குப்பின் ‘பிறை விவகாரம்: தவறுகள் நடந்துள்ளன. திருத்தம் வேண்டும்!’ என்ற உங்களது இரண்டாவது ஆக்கத்தினையும் வாசித்த போதே சில விடயங்களை சரியாக சிந்திக்க ஆரம்பித்தேன். உங்கள் மீது எனக்குள்ள பக்தி சிரத்தையை ஒரு புறம் தள்ளிவிட்டுப் பார்த்தபோது பாமரர்கள், பொதுமக்கள் போலவே நீங்களும் சமூகம் என்றில்லாது தனிமனிதன் ஒருவரை அதாவது இன்னும் சரியாகச் சொல்லப்போனால் ஜம்இய்யாவையும், றிஸ்வி முஃப்தி அவர்களையும் குறிவைத்தே உங்களது ஆக்கங்கள் அமைந்திருந்தன. அதன் ஒவ்வொரு வார்த்தைகளிலும்; அவர் மீது உங்களுக்கிருக்கின்ற கோபங்களும், குரோத எண்ணங்களுமே வெளிப்பட்டு இருந்தன.
அதன் பிறகே சென்றகால சில நிகழ்வுகளையும் நான் மீட்டிப் பார்க்கலானேன். இது முதற்தடவையல்ல இதற்கு முன்பும் அவ்வப்பொழுது நீங்கள் ஜம்இய்யாவுக்கும், அதன் தலைமைக்கும் எதிராகவும், அதன் தூய கொள்ளைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் படியும் பேசியும் கருத்துத் தெரிவித்தும் வந்திருக்கிறீர்கள் என எனக்குத் ஞாபகத்திற்கு வந்தது.
2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெரும்பாலான வெளியீடுகளில் ‘எங்கள் தேசம்’ மற்றும் அல்-ஹஸனாத் போன்ற நல்ல தரமிக்க உங்களது பத்திகைகளை ஊடகமாகப் பயன்படுத்தி தவறாக ஜம்இய்யா பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லி வந்திருக்கிறீர்கள்.
1. எங்கள் தேசம் (ஜுன் 15-30 2006) பத்திரிகையில் இலங்கையின் மூத்த உலமாக்களை கௌரவித்த நிகழ்வு தொடர்பாகவும், அந்நிகழ்வில் பாரபட்சம் காட்டப்பட்டு சில முக்கிய ஆலிம்களை திட்டமிட்டு விட்டுவிட்டதாகவும் சித்தரித்து எழுதப்பட்டிருந்தன. இவை பிழையான கருத்துக்கள் எனவும், அக்கருத்துக்கள் ஜம்இய்யாவின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் கூறி தெளிவான விளக்கமொன்றை ஜம்இய்யாவின் அப்போதைய சமூகசேவைப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.எல்.நவ்பர் (கபூரி) அவர்களால் எழுதி அனுப்பிவைக்கப்பட்ட போதும் அது சரியான முறையில் வெளியிடப்படவில்லை.
2. அதே பத்திரிகை 2006 டிசம்பர் 1-14 பதிப்பில் 6 ஆம் பக்கத்தில் ‘பன்றி இரைச்சிக் கடையில் ஜம்இய்யதுல் உலமாவின் ஹலால்’ என்றெழுதி ஜம்இய்யாவின் ஹலால் பிரிவை கேலவப்படுத்த முற்பட்டிருந்தது.
3. அதே வெளியீட்டின் ஐந்தாம் பக்கத்திலும், அதே காலப்பகுதியில் வெளியான அல்-ஹஸனாத் சஞ்சிகையிலும் மஹ்தி பவுண்டேஷன் தொடர்பாக எழுதி ஜம்இய்யத்துல் உலமா தூங்கிக்கொண்டிருக்கிறது. எந்தவொரு கரிசனையும் இது தொடர்பாகக் காட்டவில்லை என்றெல்லாம் சித்தரித்து இதற்கு ஜம்இய்யாவின் எவ்வித பங்களிப்பும் இருக்கவில்லை எனவும் பொய்யான விடயங்களை எழுதி ஜம்இய்யா மீது சேறு பூசப் பார்த்தமை.
4. சுமார் மூன்று வருடத்திற்குள் இன்னுமொரு அல்-ஹஸனாத் வெளியீட்டில் (திகதியை மறந்து விட்டேன்) தப்லீக் உலமாக்களின் பயான் உரைகளை அதாவது அவர்கள பயான் செய்யும் தொணியை விமர்சித்திருந்தீர்கள்.;. சிலர் கண்ணீர் வடிப்பது பற்றியும், இராகமாக ஓதுவது பற்றியும் சொல்லி கிண்டலாக நீங்களே (அமீர்) எழுதியிருந்தது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதனை (நான் கொஞ்சம் ஜமாதே இஸ்லாமி ஆதரவாளன் என்ற வகையில்) என்னிடம் குறிப்பிட்ட ஒரு ஆலிம் சுட்டிக்காட்டி இருந்தார். அதாவது றிஸ்வி முஃப்தி, அப்துல் ஹாலிக் மொலவி, ஹஸன் பரீத் மௌலவிகளையே அங்கு நீங்கள் மறைவாகக் கூறுகிறீர்கள் என மிகத்தெளிவாக விளங்கக் கூடியதாக இருந்தது.
இதுவல்லாமல் இன்னும் பல அல்-ஹஸனாத் வெளியீடுகளில் உங்கள் கருத்துக்கள் ‘அடிப்பது முயலுக்கு படுவது பத்தைக்கு’ என்பதற்கு ஏற்ப எமது உலமாக்களைத் சீண்டிப் பார்ப்பது போல அமைந்திருந்தன. ஒரு ஜமாத்தின் அமீர் என்ற வகையில் தமது ஒவ்வொரு வார்த்தையையும் மிகக் கவனமாகவே வெளியிட வேண்டும் என்பது நான் சொல்லி நீங்கள் அறியவேண்டிய ஒன்றல்ல. சரி வரலாறு நெடுகிலும் இவ்வாறான பிழைகள் நடைபெற்று வந்தாலும்;….. காலப்போக்கில் ஜமாஅத் அமைப்புகளுக்கு அப்பால் நாம் ஒன்றுபடும் காலமிது என சுமார் 4 வருடங்களுக்கு முன் புத்தளத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பின்வருமாறு கூறி இருந்தீர்கள் அதாவது:
‘இது ஜமாஅத்துக்களுடைய காலமல்ல. இவைகளுக்கும் அப்பால் உம்மத் என்ற ஒரு குடையின் கீழ் ஒன்றுசேர வேண்டிய காலமிது. சிலலேவை நாம் எல்லோரும் ஜமாத் என்ற வட்டத்தைவிட்டும் வெளியேறி உம்மத் என்ற பாரிய களத்தினுள் பிரவேசிக்க வேண்டிய காலமிது’
என்ற உங்களின் வார்த்தைகளை நீங்கள் மறந்து விட்டீர்களோ என்னமோ தெரியவில்லை. உங்கள் மீது பக்தி சிரத்தை கொண்ட நான் இன்னும் மறக்கவில்லை. (மேலும் மேலும் உங்கள் மீதுள்ள அன்பையும் மறியாதையையும் எனக்கு அல்லாஹ் அதிகரிக்கச் செய்ய வேண்டுமென அல்லாஹிவிடம் வேண்டியவனாக… குறித்த உங்களது கட்டுரை தொடர்பாக பேசுகிறேன்)
உங்கள் கட்டுரையின் உண்மை வெளிப்பாடு:
• உங்களது இரு கட்டுரைகளிலும் முஃப்தி றிஸ்வி அவர்களையே நீங்கள் குறிவைத்துத் தாக்கியது அவர் மீது உங்களுக்கு ஏதோ தனிப்பட்ட குரோதம் இருப்பதாகவே தோன்றுகிறது. இந்த எண்ணத்திற்கான காரணங்கள்:
(1) பிறை பற்றிய முடிவை றிஸ்வி முஃப்தி அவர்கள் தனது வீட்டில் மனைவி மக்களை வைத்து ஆலோசனை செய்து விட்டு வரவில்லை.
(2) இந்த கூட்டு முடிவுக்கு கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு, மு.ச.ப.அ திணைக்களம் போன்ற இன்னும் பல பொறுப்பு வாய்ந்த அமைப்புக்களுக்கும் சரிசமப்பங்கும், உரிமையும் இருக்கின்றன என்பதை நீங்கள் அறியவில்லையா?
(3) நீங்கள் நேர்மையான ஒரு தலைவராக அல்லது விமர்சகராக இருந்திருந்தால் எல்லோரையும் இணைத்தல்லவா விமர்சித்திருக்க வேண்டும் ?
(4) இவ்வாறு எல்லோரும் சேர்ந்தெடுத்த முடிவை முஃப்தி மாத்திரம் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி எடுத்திருக்கிறார் என்று மக்களை எண்ண வைக்கவா இவ்வாறு அவரையே குத்திக் காட்டி இருந்தீர்கள்?
முதல் கட்டுரையின் வாசகங்கள் தொடர்பாக…
கட்டுரை:
சுமார் 10 வருடங்களுக்கு முன் இதுபோன்றதொரு சர்ச்சையில்… ‘ஜம்இய்யதுல் உலமாவின் தீர்ப்பே இறுதியானது அவர்களின் தீர்மானத்திற்கேற்ப செயற்படுங்கள்’ என்ற வாசகத்தை ஒரு திக்ர் போல அன்றைய இரவு முழுவதும் உச்சரித்துக் கொண்டிருந்தேன் கேள்வி கேட்பவர்களுக்குப் பதில் கூறுவதற்காக…
இம்முறை அதனை நான் செய்யவில்லை. காரணம் கள நிலைவரங்கள் திருப்திகரமான தகவல்களைத் தருவதாக இல்லை. குட்டை நன்றாகக் குழம்பியே இருந்தது. பலருடைய மனநிலையை அவதானிக்கும் போது ஜம்இய்யதுல் உலமாவுக்கு சார்பாக சிந்திக்கும் போக்கில் அவர்கள் இல்லை என்பது புரிந்தது.
தெளிவு:
உஸ்தாத் அவர்களே! 10 வருடங்களுக்கு முன் ஜம்இய்யாவின் மீது இருந்த பற்று இப்பொழுது ஏன் இல்லாமல் போனது? பெரும்பான்மை மக்களினதும், உலமாக்களினதும் அன்பையும் ஆதரவையும் வென்ற இப்போதைய தலைவர் றிஸ்வி முஃப்தி என்பதற்காகவா?
அல்லது நீங்கள் சொல்லியிருக்கும் காரணத்தைப் போலவே மக்கள் ஆதரவு வழங்கவில்லை. எனவே நானும் மக்களுடைய கொள்கைக்கே மாறி விட்டேன் என்பதா? எனக்கு எப்பொழுதும் மக்கள் ஆதரவும், அன்பும் தான் முக்கியம் உண்மை நேர்மை, நியாயம் முக்கியமல்ல என்று சொல்வது போலவே அதன் உள்கருத்துக்கள் விளங்கின.
கட்டுரை:
இலங்கை முஸ்லிம் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டபூர்வமாக எவரிடமுமில்லை. யாரும் யாருக்கும் அந்த அதிகாரத்தை வழங்கவுமில்லை, யாரும் எவரிடமிருந்தும் அந்த அதிகாரத்தைப் பெறவுமில்லை.
தெளிவு:
எனதன்பின் அமீர் அவர்களே! இந்த வார்த்தைகளில் எவ்வளவு பெரிய அபாயகரமான அர்த்தம் இருக்கிறது என்பதை நீங்கள் அறியவில்லையா? மக்களை தலைமைக்குக் கட்டுபப்ட வேண்டாம் என்றல்லவா சொல்ல வருகிறீர்கள். ஒருவர் ஒரு அமீருக்குக் கட்டுப்படல் என்பது எவ்வளவு முக்கியமானது. தொடர்ந்தும் உங்கள் வாசகங்களின் கருத்து யாரும் யாருக்கும் கட்டுப்படத் தேவையில்லை என்றல்லவா எண்ண நினைக்கிறது. நீங்களே உங்கள் ஜமாஅத்தில் தலைமைக்குக் கட்டுப்படவில்லை என்பதற்காக எத்தனை தாஈகளை வெளியேற்றி இருக்கிறீர்கள்? இந்த வாத்தைகள் மக்களை ஜம்இய்யாவின் தலைமைக்கு மாறு செய்ய வைக்கவே எழுதப்பட்டிருக்கிறது என்பதை நாம் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டோம்.
கட்டுரை:
பக்தி சிரத்தை: இந்தக் கட்டுப்பாடு தலைவர் மீது கொண்ட அதீத நம்பிக்கையால் வருவதாகும். தலைவர் எதைச்சொன்னாலும்இ ஏன்? எதற்கு? என்று கேட்காமல் கட்டுப்படும் நிலையை இது குறிக்கிறது. விவகாரங்களை தெளிவாக விளங்கினாலும் சரிஇ விளங்காவிட்டாலும் சரி தலைவர் மீதுள்ள பக்தி சிரத்தை இந்தக்கட்டுப்பாட்டைத் தோற்றுவிக்கும்.
தெளிவு:
கண்ணிமிக்க அமீர் அவர்களே! இந்த வார்த்தைகளின் மூலம் குறித்த ஒரு ஜமாஅத்தை குறை கூறவே முற்பட்டிருக்கிறீர்கள். கட்டுப்பாடு என்பதும், அமீருக்குக் கீழ்படிதல் என்பதும் அந்த ஜமாஅத்தில் மாத்திரமே முறையாகவும், சரியாகவும் இருக்கிறது. இதனைக் குறை கூறாமல் ஜமாஅத்தே இஸ்லாமி நாஸிம்களையும், தாஈகளையும், ருகுன்களையும் இவ்வாறு கட்டுப்பட்டு நடக்க நாம் முயற்சிப்போம். பொறாமைக் கண்கொண்டு பார்ப்பதைத் தவிர்ப்போம்.
கட்டுரை:
….கேட்போருக்கு உணர்த்திய உண்மை யாதெனில், ‘சமூகம் நூறு வீதம் குற்றவாளிகள். பொறுப்பாளர்கள் நூறு வீதம் தூய்மையானவர்கள். எனவே சமூகம் தவ்பா செய்ய வேண்டும்.’ சமூகத்தலைவர்களின் மனப்பாங்கு இத்திசையில் தொடர்ந்தும் செல்லுமானால் ஒற்றுமைக் கோஷம் வாய்க்கும் வார்த்தைக்கும் இனிமையாக இருக்கலாம். சமூகம் எப்போதும் பிரச்சினைகளில் சிக்கிய வண்ணமே இருக்கும்.
தெளிவு:
முஃப்தி அவர்களின் வார்த்தைகள் மக்கள் மனங்களை உண்மையில் புண்படுத்தின. நிச்சயம் அவர் அதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. நிச்சயமாகவே அவர் இந்ந விடயத்தில் தவறு செய்து விட்டார்.
ஆனால் இவரை விட மோசமாகவல்லவா நீங்கள் நடந்துள்ளீர்கள். (ஏதோ ஒரு வகையில்) ஒரு சமூகத் தலைவரின் குற்றங்கள் எங்கு சொல்லிக்காட்டப்பட வேண்டும். அவரிடமா? அல்லது முழு உலகமும் அறியுவண்ணமா? நீங்கள் பாவித்திருக்கும் வார்த்தைகள், வசனங்களை நீங்கள் உங்களுக்கே சொல்லிப் பாருங்கள்! பொறுத்தமாக இருக்கிறதா என்று?!!
இரண்டாவது கட்டுரையின் நோக்கமும் நீங்கள் கூறியது போலவே குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதாகவே அமைந்திருந்தது. ஏனெனில் முதல் கட்டுரையில் தலைமையை ஏற்றுக்கொள்வதாகவும், ஏதோ தவறு நடைபெற்றிருக்கிறது திருத்திக்கொள்ளட்டும் என சித்தரிக்கப்பட்டிருந்தன. பின்னால் இணையதளங்கள், சமூக ஊடகங்கள் போன்ற குட்டையைப் பார்த்த போது நன்றாகவே கலங்கி இருந்தன. பின்னர் ஆகா! எனது வார்த்தைகள் காரம் போதாததாக ஆகிவிட்டதே. இது தான் சந்தர்ப்பம் என தமது சுய ரூபத்தைக் காட்டி இருந்தது உண்மையில் எமக்கு மனவேதனையாக இருக்கிறது.
இரண்டாம்; கட்டுரையின் வாசகங்கள் தொடர்பாக…
கட்டுரை:
இதற்கு முன் எழுதிய ‘வியாழன் நோன்பா..? பெருநாளா..?’ என்ற ஆக்கம் சமூகத்தில் பெரும்பாலானவர்களால் வரவேற்கப்பட்டாலும் அது நான் எழுதிய நோக்கத்தை நிறைவேற்றப் போதியதாக இல்லை என்பதே மீண்டும் இவ்வாக்கத்தை எழுதத் தூண்டியது.
தெளிவு:
உலமா சபைத் தலைவர் பற்றி சமூகம் என்ன நினைக்கிறது ? என்று ‘பல்ஸ்’ பார்க்கவே முதல் கட்டுரை. என் போன்ற உங்கள் மீது பக்தி சிரத்தை உடைய உங்கள் ஜமாத்தார்கள் சிலர் முகநூல் முழுவதும் முஃப்திக்கு எதிராக எழுதிவிட்டால் முழு சமூகமும் எதிர்க்கிறது என்றா அர்த்தம் அமீர் அவர்களே! அத்துடன் முன்னைய ஆக்கம் உங்கள் நோக்கத்தை நிறைவேற்ற வில்லையாம். அந்த நோக்கம் என்ன?
அந்த நோக்கம் இதன் பின் பிறைப்பிரச்சினை வரக்கூடாது என்பதா? அல்லது முஃப்தி அவர்கள் அவருடைய குற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதா? அல்லது நாம் எல்லோரும் ஒற்றுமைப் படுவோம் என்பதா? உண்மையில் இவை ஒன்றும் தாம் எதிர் பார்த்த நோக்கமல்ல.
அந்த நோக்கம் அவர் தமது பதவியைவிட்டு விரண்டோட வேண்டும் என்பது தான் என்பதை மிகத்தெளிவாக உங்கள் இரண்டாவது கட்டுரையில் குறிப்பிடடிருந்தீர்கள். (இது பற்றி இன்னும் தெளிவாக பின்னால் சொல்கிறேன்)
கட்டுரை:
விஞ்ஞானத்துக்கு மாற்றமாக உலகில் ஒன்றுமே நடப்பதில்லையா? அல்லாஹ்வின் வல்லமை (குத்ரத்) என்று எடுத்ததற்கெல்லாம் பேசுபவர்கள் இந்த நிகழ்வில் அல்லாஹ்வின் குத்ரத் செயற்பட்டிருக்கலாம் என்பதை உணர மறந்துவிட்டார்களா?
தெளிவு:
இதனையும் ஒரு ஜமாத் சார்த்த சகோதரர்களை கேலியாக அல்லது நம் பாசையில் நக்கலாக சுட்டிக் காட்டும் வாசகமாகும். அன்பான அமீர் அவர்களே! எவ்வாறு முஃப்தி அவர்களை நீங்கள் கைவிரல் காட்டி தலைவர் ஒழுங்கில்லை பிழை செய்கிறார் என்று குற்றச்சாட்டுக்களை வைக்கிறீர்களோ. நீங்களும் ஒரு தரமான ஜமாதின் தலைவர் அல்லது அமீர் என்பதை மறந்த நிலையிலா இவ்வாறான வார்த்தைகளை எழுதினீர்கள்? எனக் கேட்கத் தோன்றுகிறது.
கட்டுரை:
இங்கு கண்ட பிறையை நிராகரித்திருப்பது ஒரு பாவமில்லையா? பெருநாள் கொண்டாட வேண்டிய தினத்தில் எண்ணற்றவர்களை நோன்பு நோற்க வைத்து ஹராமைச் செய்வதற்கு முடிவெடுத்தவர்கள் ஒரு சமூகத்துக்கு எப்படி வழிகாட்டிகளாக இருக்க முடியும்.
தெளிவு:
கண்ட பிறையை நிராகரிப்பது ஒரு பாவம் என மொட்டையாகக் கூறி தலைவரை (பிறைக் குழுவை அல்ல) பாவியாக சித்தரிக்க முற்பட்டிருக்கிறீர்கள். இதுவிடயத்தில் ஷரீஆ பற்றிய தெளிவான விளக்கம் மேலும் உங்களுக்குத் தேவை என நினைக்கிறேன். இஜ்திஹாத் பற்றியும் உஸுலுல் ஃபிக்ஹ் பற்றியும் இன்னும் இன்னும் அறிவுகளை நாம் வளத்துக் கொள்ள முயற்சிப்போம்.
கட்டுரை:
சமூகத்தைக் குழப்புவதற்கென்றே எடுத்த சாணக்கியமில்லாத தீர்மானம்.
தெளிவு:
அன்பின் அமீர் அவர்களே! இந்த வாசகத்திற்கு மேலதிக வியாக்கியாணம் தேவையில்லை. தலைவர் தனதுரையில் பாவித்த வார்த்தைகளுக்கும் இப்படிப்பட்ட உங்களுடைய வார்த்தைகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? என சிந்தியுங்கள்! அப்படியானால் நீதியாக அவர் மட்டுமல்ல நீங்களும் அமீர் பதவிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.????? இதுபோன்ற வார்த்தைகளிலிருந்து அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்!!!
கட்டுரை:
… மார்க்கத்திலும் உலகத்திலும் சரியான வழிநடாத்தல்களுக்குட்படுத்துகின்ற சிறந்த தலைவர்கள் தான் இன்றைய அடிப்படைத் தேவையும் தீர்க்க வேண்டிய முதல் பிரச்சினையுமாகும். இந்தப் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு எட்டப்பட வேண்டும்.
அந்தவகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அமைப்புக்கு தலைமை வழங்க அறிவிலும் நிதானத்திலும் சமூக உறவிலும் பரந்த மனப்பான்மையிலும் அரவணைப்பிலும் சிறப்பாக முன்னின்று உழைப்பதற்கு தகுதியான ஒருவராக நான் கண்ணியமிக்க யூசுஃப் முஃப்தி அவர்களைக் காண்கின்றேன். அவர் அப்பதவிக்கு அமர்த்தப்பட வேண்டும் என முன்மொழிகின்றேன்இ இப்படி ஒரு மாற்றம் தேவை என்பதற்கு இன்னும் பல நியாயங்கள் இருக்கின்றன, அவற்றை நான் இங்கு குறிப்பிடவில்லை. பிறை விவகாரத்துடன் தொடர்பான நியாயங்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.
தெளிவு:
எனதன்பின் உஸ்தாத் அவர்களே! பிறைப் பிரச்சினைக்குத் தீர்வு தலைவரை மாற்றுவதா? உங்கள் முயற்சிக்கு நன்றி ஆனால் முடிவுக்கு அனுதாபம் என சொல்லத் தோன்றுகிறது. அதுமட்டுமில்லாமல் மிகுந்த பக்தியுடனும் சமூகப் பற்றுடனும் தமது நோக்கத்தை நிவர்த்தி செய்துகொள்ள மிக அழகாக காய் நகர்த்தி இருக்கிறீர்கள். அறிவாம், நிதானமாம், சமூக உணர்வாம், பரந்த மனப்பான்மையாம், அரவணைப்பாம், முன்னின்று உழைப்பவராம், தகுதியானவராம் என ஏழு சிறப்புத் தன்மைகளை சொல்லி (உங்கள் கருத்துப்படி) ஒரு குத்ரத் பேசும், பக்தி சிரத்தைக்குற்பட்ட, கண்மூடித்தகமாக பின்பற்றப்படுகின்ற ஒரு தப்லீக் முஃதியை ஏன் முன்மொழிந்தீர்கள்?
அடிப்பதையெல்லாம் அடித்துவிட்டு அதனை மறைக்கவா இந்தப் பெயர் ஞாபகத்திற்கு வந்தது? ஏன் தற்போதைய உப தலைவர்களில் ஒருவராக இருக்கின்ற அஷ்-ஷைக் ஏ.சீ.அகார் முஹம்மத் பொறுத்தமில்லையா? அப்படியொரு உண்மையைச் சொன்னால் தமது ஜமாஅத்துதின் ஆதிக்கத்தின் கீழ் ஜம்இய்யாவைக் கொண்டு வருதாக மக்கள் நினைப்பார்கள் என்பதற்காகவா இத்திட்டம்? அல்லது நம்மோடு தோழோடு தோல் நின்று தமது ஜமாத் கொள்கையையும் பாராது தமது இயக்க மேடைகளில் சமமாக நின்று தஃவாப் பணி செய்கிறவர் என்பதற்காகவா அவர் பெயா? அல்லது யாரோ எழுதியிருந்தது போல தருணம் பார்த்து ஜம்இய்யாவைக் கைப்பற்றுவதா இதன் நோக்கம்? ஒரே குழப்பமாக இருக்கிறது.!!!!
தலைவரை மாற்றுவோம்! இதுவே எனது சரியான தீர்வு!
‘பிறை விவகாரம்: தவறுகள் நடந்துள்ளன. திருத்தம் வேண்டும் ‘ என்பது தான் ஆக்கத்தின் தலைப்பு. ஆனால் முடிவு தலைவரை மாற்ற வேண்டும். தலைவர் அவர்களின் அன்றைய நாள் உரையின் கருத்துக்கும், வார்த்தைக்கும் மக்கள் எவ்வளவு மனம் நொந்திருப்பார்கள் என்றே பந்திக்குப் பந்தி எழுதியிருந்தீர்கள். (உண்மை தான்) அப்படியானால் இந்நாட்டில் இலட்சக்கனக்கான மக்கள் இப்படியான உங்கள் கருத்துக்களின் மூலம் மனம் நொந்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்க மறந்து விட்டீர்களா? அன்பின் அமீர் அவர்களே!
தலைவரை மாற்றும் அதிகாரம் யாருக்குரியது?
அடுத்து உங்கள் கருத்துக்கு நான் கோவப்படவில்லை வெட்கப்படுகிறேன். மடடுமின்றி ஆச்சரியமும் அடைகிறேன். ஊரோடு சேர்ந்து நீங்களும் சிறுபிள்ளைத் தனமாக இணையதளங்களில் தலைவரை மாற்ற வேண்டும். என்னைப் பொருத்த மட்டில் இது ஒரு முடிவு, சமூகத்துக்கு இது ஓர் ஆலோசனை, இயக்கங்களுக்கு இது ஒரு பணிவான வேண்டுகோள். என்றெல்லாம் எழுதி மக்களை ஆவேசப்படுத்தி இருப்பது ஒரு அமீருக்கு இருக்க வேண்டிய பண்பல்ல. மட்டுமல்லாமல் சமூக ஒற்றுமையை சீர்குலைக்க இதுவே காரணமாகும்.
சட்டப்படி நீங்கள் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பெயருக்கு அழுக்கு ஏற்படுத்தி இருக்கிறீர்கள் என்றே சொல்லாம். மட்டுமின்றி தப்புவதற்காக ‘இது ஜமாஅதே இஸ்லாமியின் கருத்தல்ல, ஜமாஅதே இஸ்லாமியின் மஜ்லிஸுஸ் ஷூறா கலந்தாலோசித்து எடுத்த முடிவுமல்ல’ என்றும் கூறியிருக்கிறீர்கள்.
ஜம்இய்யாவுக்கு ஒரு யாப்பு இருக்கிறது. அதன் அங்கத்தவர்கள் இஸ்லாமிய இயக்கங்கள் அல்ல. தரமான தகுதியான உலமாக்கள் மாத்திரமே. முஃப்தி சரியான தகுதியான தலைவர் என்பதற்கு அவர் மூன்றாம் முறையும் ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்டது தப்பான கண்கொண்டு பார்க்கும் உங்களுக்கு போன்றோருக்குத் தெரியாது.
ஒரு நீதியான அமீராக நீங்கள் இருந்திருந்தால் றிஸ்வி முஃப்தியை மட்டுமல்ல, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு தலைவரையும் மாற்றச் சொல்லியிருக்க வேணண்டும். அதனுடன் சேர்த்து மு.ச.ப.அ திணைக்கள பணிப்பாளரை மாற்றச் சொல்லியிருக்க வேண்டும். இவைகளையெல்லாம் மறந்து ஒரு தனி நபரை மட்டும் இலக்காகக் கொண்டு எழுதப்பட்ட உங்கள் ஆக்கங்கள் உங்களது தனிப்பட்ட ஒரு தேவைக்காக வேண்டியே எழுதப்பட்டவைகள் என மிகத் தெளிவாக விளங்குகிறது.
இறுதியாக…
எனதன்பின் உஸ்தாத் அவர்களே! இதன் பிறகாவது ஜம்இய்யத்துல் உலமா, றிஸ்வி முஃப்தி. தப்லீக் ஜமாத் அதன் உலமாக்கள் போன்றோர் பற்றி பட்டும் படாமலும் கருத்துக்கள் சொல்லாமல் இருக்க முயற்சிப்பீர்கள் என நினைக்கிறேன். உங்கள் ஆக்கங்கள், உரைகளை இப்பொழுது தப்லீக் உலமாக்கள் நிறையவே படிக்கிறார்கள், கேட்கிறார்கள். முன்பில்லாதவாறு மதிக்கிறார்கள். தப்லீக் அறபு மத்ரஸாக்களில் உங்கள் ஆக்கங்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றன. இவ்வாறானதொரு ஆரோக்கியமான சூழ்நிலைக்குக் காரணம் என்ன என்பதை ஜமாஅத்தே இஸ்லாமி மட்டுமல்ல ஏணைய இஸ்லாமிய அமைப்புக்களும் மறந்து விட்டன.
முஃப்தியின் சாதனைகள்!!
முஃப்தி; சமூகத்திற்காக என்ன செய்தார்? என்ற ஒரேயொரு கேள்விக்கு இவரின் ஒரேயொரு பணியே போதுமானது. இன்று இந்நாட்டில் இஸ்லாமிய ஜமாஅத்துக்கள் சுதந்திரமாக புரிந்துணர்வோடு தமது பணிகளைச் செய்கிறார்கள் என்றால் அதற்கு முஃதியின் 100மூ பங்களிப்பு இருக்கிறது என்பதை சகல ஜமாத் அமீர்களும் புரிந்துகொள்ள வேண்டும். முன்பொரு காலத்தில் ஜமாஅத்துக்கள் மத்தியில் நாளாந்தம் அடிதடிகளும், குத்து வெட்டுக்களும் நாட்டில் நாளா புறங்களிலும் நடைபெற்று வந்ததை நீங்கள் மறந்து விட்டீர்களா?
ஏன் அண்மையில் ஜமாஅத்தின் குடும்ப, ஜ்திமா கண்டியில் நடைபெற்ற போது குழறுபடிகள் நடைபெற்றன. பின் அடுத்த வாரம் நிகழ்ந்த கண்டி லைன் பள்ளிவாசலில் றிஸ்வி முஃப்தி அவர்களின் குத்பாப் பிரங்கத்தைக் கேட்டீர்களா? ஏன் பிறை விவகாரத்தில் கூட சில தப்லீக் ஜமாஅத் சகோதரர்கள் நேரடியாக செயற்பட்டார்கள் என்பதற்காக எந்தவொரு பாரபட்சமுமின்றி நேர்மையாகப் பேசியதையும் நீங்கள் செவிமடுக்காமலில்லை. இப்படிப்பட்ட உண்மைகளை குழி தோண்டிப் புதைக்க நினைப்பது நல்ல காரியமா?
மட்டுமல்லாமல் பல கருத்துக்கள், சிந்தனைகளுடைய உலமாக்களை ஒரே மேசையில் அமர வைத்த சாதனையும் அவர்களையே சாரும். இன்று நாம் உங்களுக்கும் உங்கள் போன்றோருக்கும் (உள்ளத்தால்) சரிசம கௌரவத்தையும் மரியாதையையும் தருகின்றோம். இந்சூழல் உருவாகக் காரணம் யார்?
எமது (தப்லீக்) பார்வையில் ஜுப்பா அணிந்தால் தான் ஆலிம். தாடி நீளமாக வைத்திருந்தால் தான் பக்குவமுள்ளவர் என்ற ஒரு மரபும், கசாசாரமும் இருந்தே வந்திருக்கின்றன. ஆனால் இது ஒரு பிழையான கணிப்பீடு. வெளித்தோற்றங்களை வைத்து மதிப்பீடு செய்யாமல் அவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என தமது ஆலிம்களுக்கு வழிகாட்டியவரும் இவர் தாம்.
எந்தவொரு ஈகோவும், தாழ்வு மனப்பாங்கும் இல்லாமலும் நாட்டிலுள்ள 200 க்கும் மேற்பட்ட மத்ரஸாக்களின் தப்லீக் உலமாக்களை வரவழைத்து ஜாமிஆ நளீமிய்யாவில் தங்க வைத்து ஜமாஅத்தே இஸ்லாமியின் கண்ணியமிக்க ஆலிம்கள் தாஈகளின் மூலம் அவர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை உண்டுபண்ணிய சிறப்பும் இவரையே சாரும். இத்தனைக்கும் இவர் ஒரு தப்லீக் ஜமாஅத்தின் ஷுரா அங்கத்தவர். நீங்களும் இவரின் ஒரு பக்கத்தைத் தான் பார்த்துள்ளீர்கள். இப்பக்கத்தை வேண்டுமென்றே விடப்பட்டதா என எண்ணத் தோன்றகிறது.
யூசுஃப் முஃப்தி போலவே அஷ்-ஷைக் அகார் முஹம்மத் அவர்களும்:
யூசுஃப் முஃப்தி போலவே அஷ்-ஷைக் அகார் அவர்களும் முன்மாதிரி மிக்கவர். இவர்களிடமிருந்து நான் நிறையவே வாழ்க்கையினதும், தஃவாவினதும் தத்துவங்களை படித்திருக்கிறேன். தப்லீக் உலமாக்கள் மட்டுமல்ல தப்லீக் சாதாரண தாஈகளும் இவரை மதிப்பதைப் பார்க்கும் போது எனக்கே பொறாமையாகவும், மகிழ்ச்சியாவும் இருக்கிறது. தஃவாவில் ‘ஹிக்மத்’ என்றால் என்ன என்பதை இவரிடமே அனுபவத்தில் கற்றிருக்கிறேன். தமது அறிவை எல்லோரிடத்திலும் பகிர்ந்து கொள்ளும் ஒரு களத்தை இவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
இதே நிலையை நான் விரும்பும் நீங்களும் அடைய வேண்டும். விகிதாசார அடிப்படையில் ஜமாஅத்தே இஸ்லாமி சகோதரர்கள் ஒரு சிறிய தொகையினர் தான். தப்லீக் ஜமாத்தினர் அதிகமாகவே இருக்கின்றனர். ஏன் உங்கள் போன்ற சிறந்த சிந்தனையாளர்களை இவர்கள் பயன்படுத்தக் கூடாது? உங்கள் கருத்துக்களும், பேச்சுக்களும் ஏன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையை நீங்கள் மாற்றுங்கள். யூசுஃப் முப்தியினதும், றிஸ்வி முஃப்தியினதும் பேச்சை எல்லோராலும் கேட்க முடிகிறதென்றால்.. ஏன் உங்கள் பேச்சை குறிப்பிட்ட தொகையினர் மாத்திரம் கேட்க வேண்டும்.
முஃப்தியை ‘மஃஸும்’ என்ற பட்டியலில் சேர்க்கக் கூடாது:
இதனையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். றிஸ்வி முஃப்தி என்பவர் குற்றமேயற்றவர் என்றும், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றும் யாராலும் சொல்ல முடியாது. மனிதன் என்ற ரீதியில் ஆயிரம் தவறுகள் இவரிடம் இருக்கலாம். அதனை நாம் முறையாக அனுகுவோம். முறையாகச் சொல்லுவோம். திருந்த வேண்டும் என்ற எண்ணத்தோடும் சொல்லுவோம். இதுவே நாகரிகமான முறை என்பதையும் இங்கு பணிவாக ஞாபகப்படுத்துகிறேன்.
பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்!
பொருத்தமான, இந்நாட்டில் சுமார் 75 க்கும் மேற்பட்ட தலைசிறந்த தகுதியான தவ்ஹீத்இ தப்லீக்இ ஜமாஅத்தே இஸ்லாமி, தரீக்காக்கள் அமைப்புகளினது உலமாக்களான சமூகத் தலைவர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தலைவரை தகுதி இல்லாதவர், திராணியற்றவர் எனச்சொல்லி தலைவரையும் குறிப்பிட்ட 75 உலமாக்களையும் கேவலப்படுத்தியதற்கு அமீர் அவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.
என்னை மன்னிக்கவும்:
இவைகள் எமது மனதில் உதித்தவைகள். கன்டிப்பாக இவைகளை சொல்லியாக வேண்டும். ஆனாலும் எனக்கு அவ்வளவாக தழிழ் மொழி ஆற்றலில்லை. இக்கடிதம் மூலம் உங்களது அல்லது உங்களைச் சார்தவர்களது மனம் புண்படும் படி வாத்தைப் பிரயோகங்கள் ஏற்பட்டிருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னிக்கவும். நிச்சயம் நீங்கள் தஃவாப் பணியில் மிக அனுபவமுள்ளவர் என்ற வகையில் இவைகளை விமர்சனக் கண்கொண்டு பார்க்க மாட்டீர்கள் எனவும் நம்புகிறேன்.
கண்ணியமிக்க உஸ்தாத் அவர்களே! இனிவரும் காலங்களிலாவது சிந்திப்போம்! தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை தூக்கி எரிந்துவிட்டு எது நல்லதோ, நீதி நியாயம் நிறைந்ததோ அதன் பக்கம் எப்பொழுதும் சார்திருப்போம்! என்பதே எனது இறுதியான அழைப்பும் வேண்டுகோளுமாகும். இத்துடன் உங்கள் துஅவை நாடியவனாக விடைபெறுகிறேன்.
வஸ்ஸலாம்
இவ்வண்ணம்
அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அல்-ஹலீமி
முஸ்லிம் சமூக ஆய்வாளர்

Leave a comment