‘கடும்போக்கு பௌத்த காடையர்களினால் மேற்கொள்ளப்பட்ட கிராண்பாஸ் பள்ளி மீதான தாக்குதல் மிலேச்சத்தனமானது’: சிப்லி பாறூக்

shibly– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மிகமோசமான மிலேச்சத்தனமான இந்த காட்டுமிராண்டித்தனமான கிராண்ட்பாஸ் பள்ளிவாயல் மீதான தாக்குதலை மிக வன்மையாக கண்டிக்கின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்த நாட்டில் முஸ்லிம்கள் சிறுபான்மை இனமாக வாழ்கின்ற அதே வேளை காலத்திற்கு காலம் இந்த நாட்டினுடைய சமாதானத்திற்கும் இறைமையை பாதுகாக்கின்ற விடயத்திலும் அவ்வப்போதிருந்த அரசாங்கங்களுடன் சேர்ந்து மிகப்பெரிய தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளனர்.

தமிழீழ போராட்டத்தில் அரசுடன் இணைந்த ஒரே ஒரு காரணத்திற்காக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புலிப்பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டும் சுடப்பட்டும் பள்ளிவாயல்களில் சுடப்பட்டும் குண்டு வீசியும் கொல்லப்பட்டது மட்டுமல்லாமல் 70க்கும் மேற்பட்ட பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டும் முஸ்லிம்கள் தங்களுடைய பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு இன்னும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஈழப்போராட்டத்தின் வெற்றியின் முதற்படி கிழக்கை வெற்றி கொண்டமை இதற்கு முக்கிய காரணம் கிழக்கு முஸ்லிம்கள் தங்களுடைய உயிர்கள் காவுகொள்ளப்பட்டும் உடைமைகள் விடுதலைப்புலியினரால் அழிக்கப்பட்டபோதெல்லாம் அவர்களை எதிர்த்து நின்றதால் மாத்திரம்தான் அரசபடை கிழக்கை காலாகாலமாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டது மட்டுமல்லாமல் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை வெற்றியும் கொண்டது. இந்த வெற்றியின் பின்னணியில்தான் வடக்கை வெற்றி கொள்ள முடிந்தது. இவ்வாறானதோர் வரலாற்று சிறப்பு மிக்க சமூகத்தின் மீது மிக மோசமான வெட்கப்படத்தக்க தாக்குதல்களை மேற்கொள்வதென்பது மிக மன வேதனைக்குரிய விடயமாகும்.

இதுவரை காலம் நடந்த சம்பவங்களில் பள்ளியை சேதப்படுத்தினார்கள், பள்ளிகளிள் வெறுக்கத்தக்க மிருகங்களை வெட்டி வீசி அசிங்கப்படுத்தினார்கள், மக்பராக்களை உடைத்தார்கள், மதரசாக்களை மூடும்படி ஆர்ப்பாட்டம் செய்து முற்றுகை இட்டார்கள், முஸ்லிம்களின் வியாபாரத்தளங்களை சேதப்படுத்தினார்கள், இதன் போதெல்லாம் முஸ்லிம்கள் ஓர் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு பொறுமைகாத்தார்கள், இன்னும் பொறுமை காக்கின்றார்கள்.

இன்று முஸ்லிம் சகோதரர்களுடைய இரத்தம் அனியாயமாக ஓட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்றால் அதை எந்தவொரு முஸ்லிமும் கண்டிக்காமல் கோழைகளாக இருக்க முடியாது.

நாங்கள் பெரும்பான்மை சகோதரர்களுக்கு எதிராக போராடவும் இல்லை இந்த நாட்டைக் காட்டிக்கொடுக்கவுமில்லை. இவ்வாறிருக்க இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற இந்த அராஜக நடவடிக்கைக்கு பொறுப்புக் கூற வேண்டிய மிகப்பாரிய கடமை அரசுக்கு இருக்கின்றது. அரசுடன் இணைந்து செயற்படுகின்ற நான் உட்பட அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை முதலமைச்சர் மாகாணசபை அமைச்சர்கள் என்று அனைவரும் ஓர் தாய் சகோதரங்களாக ஒன்று சேர்ந்து அழுத்தத்தினை கொடுக்க வேண்டியது கட்டாய காலத்தின் தேவையாக இருக்கின்றது.

நாங்கள் எங்களுடைய அரசியல் இலாபங்களுக்காக அறிக்கை விடாமல் உண்மையாக இந்த முஸ்லிம் சமுகத்தின் பிரச்சினையை தீர்ப்பதற்காக தூய மனதுடன் ஒன்று சேர்ந்து இதற்கு அப்பாலும் நாங்கள் இவ்வாறு அடிமைகள் போல் இழுபட்டு செல்வதா என்பதை ஓரு கணம் சிந்திக்கவேண்டிய கடைமைப்பாடு இருக்கின்றது.

குற்றம் புரிகின்றவர்களை கைது செய்யாமல் விட்டு விடுவதுதான் இதற்கு மேலும் மேலும் இவ்வாறான பிரச்சினைகள் பின்னர் மீண்டும் ஏற்பட வலுச்சேர்க்கிறது. இலங்கையில் உள்ள எல்லா மதத்தினரும் ஒன்று என்பதால் இது பற்றி பாதுகாப்பு பிரிவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குண்டான வசதிகளை அரசாங்கம் செய்ய வேண்டும். அது தவறும் பட்சத்தில் ஒட்டு மொத்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் குரல் ஒன்று பட்டு ஒலிக்க வேண்டும்.

இது இவ்வாறிருக்க எங்களுடைய சமுகம் அல்லாஹ்வின் உதவியினை பெறுவதற்காக அவனை நெருங்க வேண்டும். நோன்பு முஸ்லிம்,வெள்ளிக்கிழமை முஸ்லிம் என்றெல்லாம் இருக்காமல் ஓர் முழு முஸ்லிமாக மாறவேண்டிய கட்டாய தேவையை இவ்வாறன சோதனைகள் மூலம் அல்லாஹ் திருத்த முயற்சிக்கின்றான்.

shibly
Engr. சிப்லி பாறூக் (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்)

எங்களுக்கு இப்போது ஏற்பட்டிருப்பது சோதனை அன்றி தண்டனை இல்லை. அவனுடைய தண்டனையை எம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. அதில் இருந்து நம்மை பாதுகாக்க இறைவனே போதுமானவன். கிழக்கில் LTTE யினரால் நூற்றுக்கணக்கான  அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். சிறிய கிராமம் கிராமமாக முஸ்லிம்கள் வெட்டப்பட்டும் சுடப்பட்டும் வயிற்றில் இருந்த சிசுவை வயிற்றைக் கீறிக்கிழித்து வெளியில் எடுத்து அதனுடைய வாய்பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்கள்.

அப்போதும் கூட அல்லாஹ் அவர்களுக்கு மேலும் பல சந்தர்ப்பங்களைக் கொடுத்தான். ஆனால் அவர்கள் தொடர்ந்தும் அந்த அழிவு நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அல்லாஹ் உதவிகளை வழங்கி அவன்பால் இந்த மக்களை நெருங்க வைத்தான். தொடர்ந்தும் பொறுமையுடன் துஆ செய்தால் இறைவனிடம் கதறி அழுது இதற்கு ஓர் முடிவைக்கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வினுடைய பதிலை எதிர்ப்பார்த்து18 வருடங்கள் பொறுமையாக காத்திருந்தோம். இறுதியில் எவ்வாறு வைக்கோலை சப்பித்துப்பிய யானைப்படையை போல் ஆக்கினானோ அதேபோல் இந்த பாவகாரியத்திற்கெல்லாம் காரணமாக இருந்தவர்களை அழித்தொழித்து முள்ளிவாய்க்காளில் இந்த கஷ்டங்களுக்கெல்லாம் ஓர் முற்றுப்புள்ளி வைத்தான்.

இந்த ஒவ்வோர் சம்பவத்திற்கு பின்னும் பல மர்மமான சதி வலைகள் பின்னப்பட்டிருப்பதை எங்களால் உணர முடிகிறது. எங்களது உணர்வுகளை தூண்டுகின்ற விடயம்தான் எங்களது மார்க்கத்தில் கைவைப்பது. எங்கள் உணர்வுகளை தூண்டி மீண்டும் ஓர் இனக்கலவரத்தை உண்டுபண்ணி முஸ்லிம்களின் உயிர்களை காவுகொள்வதற்கும், முஸ்லிம்களின் இரத்தத்தை ஓட்டுவதற்கும், முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிப்பதற்கும் சில அடிப்படைவாத பௌத்த சக்திகள் முற்படுகின்றன. இவர்களுக்கு பிரபாகரனின் முடிவு ஓர் பாடமாக இருக்கவேண்டுமென நான் எச்சரிக்கின்றேன்.

முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக பயங்கரவாத காலத்தில் இறைவன் அரசை பயன்படுத்தினான். அது இப்போது உதவாமல் போனால் அதை விட ஓர் பெரிய சக்தியால் எங்களுக்கு உதவுவான். எங்களது மிகப்பெரிய ஆயுதம் பொறுமையும் துஆவும். ஒற்றுமைப்படுவோம்; இரு கரம் ஏந்துவோம்;முடியுமானவர்கள் நோன்பு நோற்று இறைவனிடம் மன்றாடுவோம். உண்மையான விசுவாசிகளை இறைவன் ஒருபோதும் கைவிடமாட்டான்.

பசிக்காக வயிற்றில் கல்லைக் கட்டிக்கொண்டு நபி (ஸல்) அவர்கள் அகழி வெட்டினார்கள் அதன்போது ரோம், பாரசீகத்தினுடைய வெற்றி பற்றி முன்னறிவிப்பு செய்தார்கள். {ஹதைபியாவில் முக்கிய சஹாபாக்கள் உமர் (ரழி) அவர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் ரஸூலுல்லாஹ் என்ற வசனத்தை தன் கையால் அழித்து அத்தனையும் விட்டுக்கொடுத்தும், சகிப்புத்தன்மையுடன் பொறுமை காத்தார்கள். ஆனால் அந்த ஒப்பந்தம் தான் மக்கா வெற்றியையே கொடுத்தது.

நாங்கள் முஸ்லிம்கள் பௌதிக ரீதியாக யோசித்து சாதிக்க முடியாததை ஆன்மீகத்தால் சாதிக்க தெரிந்தவர்கள். பொறுமை  காப்பது எங்களுடைய சகோதரர்களின் இரத்தம் ஓட்டப்பட்டுவிடாமல் மார்க்க அரசியல் தலைமைத்துவங்கள், அரசியல் தலைமைத்துவங்கள் எல்லாம் ஒன்றிணைந்த ஓர் கட்டுக்கோப்பான சமுகமாக இருந்து சாத்வீக ரீதியில் போராடுவோம்.

அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன். இலங்கையை பொருத்தமட்டில் முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக ஏதேனும் இனப் பிரச்சினை உருவாகுமாக இருந்தால் எங்களுடைய சமுகம் பொருளாதார ரீதியிலும் சமுக ரீதியிலும் கல்வி ரீதியாகவும் மிகப்பாரிய பின்னடைவை எதிர்நோக்கவேண்டி ஏற்படும். டுவுவுநு பிரச்சினை காலத்தில் தமிழர்களின் கல்வி நடவடிக்கைக்கு பதிப்பு ஏற்படவில்லை. வடமாகாணம் கல்விக்குரிய ஓர் கோட்டையாக இருந்ததால் அதில் வீழ்ச்சியடையவில்லை. பொருளாதார ரீதியாக தமிழர்கள் இலங்கைக்கு வெளியில் மிகப்பாரிய உறுதியான பொருளாதாரத்தை கொண்டிருந்தார்கள். இதன் காரணத்தினால் அவர்கள் இருந்த இரண்டு வகையிலும் யாராலும்  வீழ்த்த முடியவில்லை. ஆனால் முஸ்லிம்களை பொருத்தமட்டில் இப்போது தான் கல்வியில் மறுமலர்ச்சி கண்டு வருகின்றது.

ஆகவே கல்வியைப் போன்றே பொருளாதாரம் உட்பட அனைத்து விடயங்களிலும் முன்னேறிச்செல்லவேண்டிய தேவைப்பாடு எமக்கு உள்ளது.

இந்த அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு பொறுமையைக் கொண்டு அல்லாஹ்விடம் உதவிதேடுவோமாக.

Published by

Leave a comment