கிளிநொச்சி: வடமாகாணத்தில் வறுமையொழிப்பு செயற்திட்டத்தை மத்தியவங்கி சிறப்பான முறையில் முன்னெடுத்து வருகின்றது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி அறிவியல் நகரில் இலங்கை மத்திய வங்கியின் உத்தேச வடமாகாண அலுவலக கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு நேற்றைய தினம் (12) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய நிகழ்வானது வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வெனவும் இந்நாட்டின் 5வது பிராந்திய அலுவலகமாக கிளிநொச்சியில் அமையப் பெறுகின்றது என்றும் தெரிவித்தார்.
யுத்த பாதிப்புக்களுக்கு ஈடுசெய்யும் வகையில் மத்திய வங்கியானது வடக்கு, கிழக்குப் பகுதிகளில் குறிப்பாக வடமாகாணத்தில் வறுமையொழிப்பு திட்டத்திற்கான பல்வேறு செயற்திட்டங்கள் மத்திய வங்கி சிறப்பான முறையில் முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில், இப்பிராந்திய அலுவலகமானது இங்கு அமையப்பெறுவது சிறப்பானதும் முக்கியத்துவமானதுமாகும்.
அந்தவகையில் மத்திய வங்கியினூடான இப்பகுதியின் எதிர்கால அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு நாம் முழுமையான பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் வழங்க தயாராகயிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், அந்தவகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களுக்கும் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உரையாற்றும் போது, இப் பிராந்திய அலுவலகமானது 12 மாத கால பகுதிக்குள் கட்டிமுடிக்கப்படுமெனவும் இவ்அலுவலகத்தின் செயற்திட்டங்கள் இம் மாவட்டத்தில் முக்கிய பங்கை வகிக்குமெனத் தெரிவித்த அவர், குறிப்பாக உட்கட்டுமான பணிகள் அபிவிருத்தியடையும் அதேவேளை, புதியதொரு இலக்கை உருவாக்குமென்றும் சுட்டிக்காட்டினார்.
முன்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் உள்ளிட்டோர் மங்கள வாத்தியம் சகிதம் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து புதிய கட்டிடடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
நினைவுக்கல்லை அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் பிரசன்னமாக இருக்க ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் திரைநீக்கம் செய்து வைத்தார்.
இதில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கம், கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி உள்ளிட்ட வங்கிகளின் துறைசார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

![bd02[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/bd021.jpg?w=640&h=405)
![bd04[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/bd041.jpg?w=640&h=433)

Leave a comment