நோன்பு எப்படி நம்மை நோக்கி ஒவ்வொரு வருடமும் வந்துவிடுகிறதோ பெருநாள் எப்படி எம்மை நோக்கி ஒவ்வொரு வருடமும் வந்துவிடுகிறதோ அதே போல பிறை பிரச்சினையும் சேர்ந்து எம்மை நோக்கி வந்துவிடுகிறது. பிரைவிடயத்தில் அதிகமான வாத பிரதிவாதங்கள் இருந்த போதும் அதில் எது சரியானது அது பிழையானது என்பதை கொஞ்சம் யோசனை உள்ளவர்களும் உண்மையான உணர்வு மக்களும் புரிந்துகொண்டனர்.
இதில் ஜமிய்யதுள் உலமா சபையின் நிலைப்பாடு சரியா பிழையா என்பதை பொதுமக்கள் மனசாட்சி உறுதிப்படுத்தி இருந்தாலும் ஆய்வாளர்களுக்கு என்ற சில அடிப்படைகள் மூலம் ஜம்மிய்யதுள் உலமாவின் பிறை ஆய்வு சபையின் உறுப்பினர் சகோ ஆகில் அஹ்மத் அவர்கள் முன்வைத்த பிறை பற்றிய கட்டுரை சிலரை யோசிக்க வைத்தது என்பது உண்மையே.
இந்த அடிப்படையில் 07-08-2013 புதன்கிழமை அன்று மாலை பிறை வெற்றுக்கன்னுக்கு தென்பட வாய்ப்பு இல்லை என்று சகோ ஆகில் அவர்கள் கூறிய எமது ஆய்வுக்கு உட்படுத்திய போது அவர் வாதப்படியே பிறை தென்பட வாய்ப்பு உள்ளதாகவே வருகிறது.
சகோதரர் ஆகில் அஹ்மத் அவர்களின் வாதம் ஒன்று: “இதே நேரத்தில் சந்திரனின் பிரகாசம் (Illumination) முழுநிலவின் பிரகாசத்தின் 0.52 வீதம் மாத்திரமே. இன்னும் சூரியன் அஸ்த்தமிக்கின்றபோது சந்திரனானது சூரியனுக்கு மிக அண்மித்ததாக தொடுவானைத் தொட்டுக்கொண்டிருக்கும். அதாவது சந்திரனானது தொடுவானத்திலிருந்து 02°:25′:00″ (2.5 பாகை) உயரத்திலேயே நிலை கொண்டிருக்கும்.
இத்தினத்தில் சூரிய உதயத்திலிருந்து (காலை 5.58) சூரியனைப் பின்தொடர்ந்து வந்த சந்திரன் (காலை 6.04) கிண்ணியாவின் மேற்கு வானில் மாலை 6.38 மணிக்கு அஸ்த்தமிக்கின்றது. இப்போது சந்திரனின் பிரகாசம் 0.53 வீதம் மட்டுமே. சூரியன் அஸ்த்தமித்ததன் பின்னர் 14 நிமிடங்கள் மாத்திரமே சந்திரன் வானில் தரித்திருக்கும்.
சூரியன் அஸ்த்தமிக்கின்ற கணத்திலிருந்து சந்திரன் அஸ்த்தமிக்கின்ற இந்தப் பதிநான்கு நிமிடங்களுக்கும் பிரகாசத்தில் மிகவும் நலிவான இந்தச் சந்திரனின் விம்பமானது வெற்றுக் கண்களுக்கோ அல்லது தொலைநோக்கிகளுக்கோ பிறையாகத் தென்படும் வாய்ப்பு இல்லை. ஏனெனில் “
எமது பதில்: நீங்கள் கூறிய சந்திர சூரிய அஸ்தமன நேர அட்டவணைகளில் எமக்கு மாற்று கருத்து இல்லை ஆனால் சூரியன் மறையும் நேரத்தில் சந்திரனின் பிரகாசம் எந்த அளவு இருந்ததோ அதே அளவுதான் சூரியன் மறைந்து 10 நிமிடத்திற்கு பின்னாலும் பிறையில் இருக்கும் என்று நீங்கள் கணிப்பது பிழையாகும்.
சூரியன் மறைந்து ஏழு நிமிடத்தில் பிறையை வெற்றுகன்னால் பார்க்க முடியும் என்பது உருதிப்படுத்தபட்ட ஆய்வாகும்.எனவே சூரியன் மறைந்த உடன் பிறையின் பிரகாசம் இருந்ததைவிட 7 நிமிடத்தின் பின்பு பிறையின் பிரகாசம் வித்தியாசமாகவே இருக்கும் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டும் என்று இல்லை.
சகோ ஆகில் அஹ்மத் அவர்களின் வாதம் இரண்டு: “சந்திரனின் பின்னணித் திரையான வானத்தில் சூரியனினால் ஏற்படுத்தப்படும் ஒளிர்வு (twilight) சந்திரனின் 0.52 – 0.53 வீத பிரகாசத்தை விடவும் அதிகமாகும். பட்டப் பகலில் வெட்டவெளியில் எரியும் மின்குமிளின் வெளிச்சம் போல என இதனைச் சொல்லலாம். இந்தளவு பிரகாசமான சந்திர விம்பம் தென்படுமளவு வானம் இருளடைவதற்கு முன்னதாகவே சந்திரன் மேற்கு வானை விட்டும் விடைபெற்று விடுகின்றது.”
எமது பதில்:இந்த உங்களின் வாதம் சந்திரன்(பிறை) அதே இடத்தில உறுதியாக நிலைகொள்ளுமாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.ஆனால் உங்களுக்கும் எனக்கும் உலகத்துக்கும் தெரிந்த விடயம் யாதெனில் சந்திரன் ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கும் ஒரு பாகை தூரம் சூரியனில் இருந்து விழகி செல்கிறது. இந்த சூரியனுக்கும் சந்திரனுகுமான இந்த அடிப்படையிலான இடைவெளியை ஆய்வு செய்தால் சூரியன் மறைந்து 12 நிமிடத்தில் மூன்று பாகை தூரம் பிறை விழகி செல்கிறது.இந்த அடிப்படையில் நோக்கும்போது சூரிய பிரகாசம் சந்திர பிராகாசத்தை மங்க செய்யபோவதில்லை.
அதே நேரம் சூரியனும் பிறையும் அஸ்தமிக்கும் நேரத்தில் கருத்துவேறுபாடு கொள்ளாவிட்டாலும் சூரியன் மறைந்ததின் பின் சந்திரனின் பிண்ணனி திரை யில் உள்ள வெளிச்சம் இவ்வளவுதான் இருக்கும் என்று ஏலவே கணிக்கப்பட்ட கணிப்புகள் மாறும் தன்மைகொண்ட உறுதியாக சொல்ல முடியாத கணிப்புகளாகும்.
இந்த விடயத்தை இன்னும் உறுதியாக சொல்ல வேண்டும் என்றால் பிறை கண்டவர்கள்கூட வானம் மிகவும் பிரகாசமாக இல்லாமலே இருந்ததாக கூறுகின்றனர்.அதாவது பிறை தென்பட வாய்ப்பு இல்லாத காரணிகளான பிறையின் முண்ணனி திரையான மேக மூட்டமோ சந்திரனின் பிண்ணனி திரையான அதிகபட்ச பிரகாசமா இருக்கவில்லை என்பதுவே நேரடி சாட்சிகளின் தகவல்கள் உருதிபப்டுதுகின்றன.
எனவே சூரிய அஸ்தமனத்தின் போது சூரியனுக்கும் சந்திரனுகுமான பிரகாசம் வேறு சூரியன் மறைந்த சில நிமிடங்களில் அந்த இரண்டுக்குமான பிரகாசம் வேறு என்பதை தாங்கள் அறியாமல் இல்லை.சூரியன் மறைந்ததில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் சூரியனின் பிரகாசம் சந்திர பிண்ணனி திரையில் மங்கி கொண்டே செல்லும் அதேவேளை பிறையின் பிரகாசம் கூடிக்கொண்டே போகும் என்பது உறுதியாகும்.
எனவே பட்டப்பகலில் மின்குமிழ் வெளிச்சம்போல சூரியனின் வெளிச்சம் பிறையை மறைத்தது என்று சகோதரர் ஆகில் அஹ்மத் அவர்கள் சொன்ன உதாரணம் பிறைவிடயத்தில் முற்றிலும் தவறானது.
பிறை பார்த்த சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்தல்
பிறையை மறுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே கேள்வி கேட்டு இருக்கிறார்கள் என்பதை அவர்களை கேட்ட கேள்விகள் மூலம் விளங்க முடிகிறது.
கிண்ணியாவில் குறித்த தினத்தில் தொலைக்காட்டி கருவிகள் மூலம் கூட பிறை தென்பாடாது என்ற கருத்தில் இருக்கும் ஜமிய்யதுள் உலமா பிறை குழு நோக்கத்தில் என்ன முறையான கேள்விகளை சாட்சிகளிடம் கேட்டிருக்கும் என்பதை தெளிவு படுத்தாமலே அறிய முடியும்.
பிறை பார்த்ததாக சாட்சி சொல்கின்றவர்களை எதில் குறுக்கு விசாரணை செய்ய வேண்டுமோ அதில் மாத்திரமே குறுக்கு விசாரணை செய்ய வேண்டும். நபி ஸல் அவர்கள் காலத்தில் காட்டரபி ஒருவர் பிறை கணடதாக சாட்சி சொன்னபோது நபி ஸல் அவர்கள் ஒரே ஒரு குறுக்கு விசாரணையே செய்கிறார்கள்.
“ நீ அல்லாஹ்வையும் ரசூலையும் ஏற்றுகொல்கிறாயா? என்ற கேள்வியை மட்டுமே நபி ஸல் அவர்கள் கேட்கின்றார்கள் ஆம் என்று அந்த காட்டரபி கூறியதும் பிடித்த நோன்பை விட்டுவிட்டு பெருநாளை அறிவிக்கின்றார்கள்.
இதில் நமக்கு அதிகாமான படிப்பினைகள் உள்ளன.குறுக்கு விசாரணை என்பது தேவையே இல்லை என்று நாம் கருதவில்லை ஆனால் நபி ஸல் அவர்கள் காட்டி தந்த வழிமுறையில் குறுக்கு விசாரணை இருக்க வேண்டும் என்பதுவே எமது கேள்வி.
பிறை பார்த்ததாக சாட்சி சொல்பவரை எவ்வளவு நேரம் பிறை பார்த்தீர்கள் என்று கேட்க முடியாது காரணம் பிறை என்பது எவ்வளவு நேரம் தென்பட வாய்ப்பு இருந்தாலும் அவர் கண்ட சில நேரத்தில் மேக மூட்டம் காரணமாக அந்த நபருக்கு தென்பாடாமல் போகவும் வாய்ப்பு உள்ளது.எனவே இந்த அடிப்படையில் பிறை மறையும் நேரம் வரை அவர் பார்த்திருக்க வேண்டும் என்று சொல்வது பிழையே.
ஆய்வா ஆதங்கமா?
பிறை தங்குவதற்கான நேரம் கருத்துவேருபாட்டுக்கு உரியது.அதிலும் சகோ ஆகில் சொன்ன 14 நிமிடத்தில் அதிகமான அறிஞர்கள் முரண்படுகின்றனர்.
8(மணி) வயதை அடைந்த பிறைகூட சூரியன் மறைந்து 16 நிமிடங்கள் தங்கி இருக்கவே வாய்ப்பு உள்ளதாக அறிவியல் கூறுகிறது.
ஆனால் இலங்கையில் கிண்ணியாவில் பிறை கண்ட போது அந்த பிறையின் வயது கிட்டத்தட்ட 16 மணித்தியாளங்கள் ஆகும்.16 மணித்தியால பிறை 30 நிமிடத்துக்கும் அதிகமான நேரம் தரித்து நிற்பதற்கான வாய்ப்பை விஞ்சானிகள் கூறுகின்றனர்.
இருந்தாலும் பிறை மறையும் நேரம் சூரிய அஸ்தமனத்தில் இருந்து 14 நிமிடங்கள் என்பதை உறுதியாக கூறி சகோ ஆக்கில் சொல்வதுபோல் கணித்தாலும் பிறை தென்பட வாய்ப்பு உள்ளது என்பதை மேலே நாம் கூறிய ஆய்வின் அடிப்படையில் கூற முடியும்.
எதில் கருத்துவேறு பாடு இல்லையோ அதை மறுத்துவிட்டு கருத்துவேறுபாடு உள்ள விஞ்சானம் உறுதிப்படுத்தியது என்று ஆதாரம் இல்லாத ஒரு ஆய்வை சகோ ஆகில் அவர்கள் முன்வைத்துள்ளார்.
உங்கள் ஆக்கம் ஆய்வின் வெளிப்பாடு அல்ல மாறாக ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடு என்பதை மட்டும் உணர முடிகிறது.
பிரைவிடையத்தில் முக்கிய தரப்பான ஜமிய்யதுள் உலமாவின் எந்த தவறுகளையும் சுட்டிக்காட்டாது பிறை பார்த்த தரப்பை மட்டும் விமர்சித்துவிட்டு செல்லும் ஒரு ஆதங்க வெளிப்பாடே உங்கள் கட்டுரை என்பதை உணர முடிகிறது.
அல்லாஹ் நாம் அனைவருக்கும் இந்த ரமலானையும் பெருநாளையும் பொருந்திகொள்வானாக.
ஜம்இய்யத்துல் உலமா பிறைக் குழுவின் விளக்கம்..!
(Dr. ஆகில் அஹ்மத்)
பிறை ஆய்வாளா மன்றம் ஸ்ரீ லங்கா,
பிறைக்குழு உறுப்பினர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா)
மற்றுமொருமுறை ஷவ்வால் தலைப்பிறை இலங்கை முஸ்லிம் சமூகத்தை பிளவு படுத்தியிருக்கின்றது. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உங்களது தலைமைக்கும் கட்டுப்படுங்கள் எனும் இறை கட்டளை மீறப்பட்டதனால் இந்நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
தலைப்பிறையைக் கண்டதாக கிண்ணியாவைச் சேர்ந்த சகோதரர்கள் பலர் சாட்சி சொன்னதாக நாட்டின் சில பிரதேசங்களில் பள்ளிவாயல்களில் அறிவித்தல் விடுக்கப்பட்டு பெருநாள் பிரகடனப்படுத்தப்பட்டது. கிண்ணியாவில் பிறை பார்த்தவர்கள் தொடங்கி பள்ளிவாயல்களின் அறிவிப்புக்கிணங்க பெருநாள் அனுஷ்ட்டிக்கப்பட்து வரையான நிகழ்வுகளின் “உம்மத்” எனும் கருத்து நிலை பேணப்பட்டிருக்கின்றதா எனும் வாதப்பிரதிவாதங்கள் ஒரு புறமும், கிடைக்கப்பெற்ற சாட்சியத்தை பிறைக் கமிட்டி நிராகரித்தமை பற்றிய விமர்சனங்களும் வாய்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எல்லையில்லாமல் பிரவாகித்து ஓடுகின்றன.
இந்த நிலையில் கிண்ணியாவில் தலைப்பிறை காண்பதற்கான வானியல் நிலைமைகளைச் சற்று நோக்குவோம்.
கிண்ணியா நெட்டாங்கு: 81:11:22.0, அகலாங்கு: 08:29:56.0, நேரவலயம்: 5.50 இல் அமைந்திருக்கும் இடமாகும். கடல் மட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு பிரதேசமாக இதனைக் கருதும்போது 07.08.2013ம் திகதி புதன் கிழமை சூரிய அஸ்த்தமனம் மாலை 06.24 மணிக்காகும். கிண்ணியாவுக்கான அமாவாசை இத்தினம் அதிகாலை 2.12 மணிக்காகும். எனவே சூரியன் அஸ்த்தமிக்கின்றபோது அமாவாசைக்குப் பின்னான சந்திர வயது 16 மணித்தியாலங்களும் 13 நிமிடங்களுமாகும். இதே நேரத்தில் சந்திரனின் பிரகாசம் (Illumination) முழுநிலவின் பிரகாசத்தின் 0.52 வீதம் மாத்திரமே. இன்னும் சூரியன் அஸ்த்தமிக்கின்றபோது சந்திரனானது சூரியனுக்கு மிக அண்மித்ததாக தொடுவானைத் தொட்டுக்கொண்டிருக்கும். அதாவது சந்திரனானது தொடுவானத்திலிருந்து 02°:25′:00″ (2.5 பாகை) உயரத்திலேயே நிலை கொண்டிருக்கும்.
இத்தினத்தில் சூரிய உதயத்திலிருந்து (காலை 5.58) சூரியனைப் பின்தொடர்ந்து வந்த சந்திரன் (காலை 6.04) கிண்ணியாவின் மேற்கு வானில் மாலை 6.38 மணிக்கு அஸ்த்தமிக்கின்றது. இப்போது சந்திரனின் பிரகாசம் 0.53 வீதம் மட்டுமே. சூரியன் அஸ்த்தமித்ததன் பின்னர் 14 நிமிடங்கள் மாத்திரமே சந்திரன் வானில் தரித்திருக்கும்.
சூரியன் அஸ்த்தமிக்கின்ற கணத்திலிருந்து சந்திரன் அஸ்த்தமிக்கின்ற இந்தப் பதிநான்கு நிமிடங்களுக்கும் பிரகாசத்தில் மிகவும் நலிவான இந்தச் சந்திரனின் விம்பமானது வெற்றுக் கண்களுக்கோ அல்லது தொலைநோக்கிகளுக்கோ பிறையாகத் தென்படும் வாய்ப்பு இல்லை. ஏனெனில்
சந்திரனின் பின்னணித் திரையான வானத்தில் சூரியனினால் ஏற்படுத்தப்படும் ஒளிர்வு (twilight) சந்திரனின் 0.52 – 0.53 வீத பிரகாசத்தை விடவும் அதிகமாகும். பட்டப் பகலில் வெட்டவெளியில் எரியும் மின்குமிளின் வெளிச்சம் போல என இதனைச் சொல்லலாம். இந்தளவு பிரகாசமான சந்திர விம்பம் தென்படுமளவு வானம் இருளடைவதற்கு முன்னதாகவே சந்திரன் மேற்கு வானை விட்டும் விடைபெற்று விடுகின்றது.
இனி கிண்ணியாவில் தலைப்பிறையைக் கண்டதாகச் சொன்னவர்களின் சாட்சியங்களை அலசுவோம். பிறை கண்டவர்கள் என்று பின்வரும் இருவரின் பெயர்கள் எமக்குச் சொல்லப்பட்டன. மௌலவி றியாஸ் (0775290014), ஜனாப் எம். ஜுஹார்டீன் (0752641313). மௌலவி றியாஸ் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள நாம் பல முறை முயன்றபோதும் சிலபோதுகளில் அவரது தொலைபேசி இயக்கம் நிறுத்தப்பட்டிருந்தது, சிலபோது அழைப்பு மறுமுனையில் நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் இரண்டாமவரான ஜுஹார்டீன் அவர்கள் நமது அழைப்புக்குப் பதிலளித்தார்.
ஜனாப் எம். ஜுஹார்டீன் அவர்கள் நமக்கு பின்வருமாறு சாட்சியமளித்தார். “நான் மஃரிப் தொழுகையை முடித்ததன் பின்னர் 6.35 மணிக்கு தலைப்பிறையைக் கண்டேன். அது ஆறு நிமிடங்கள் வானில் இருந்தது.”
இவரது சாட்சியத்தில் பின்வரும் பலயீனங்கள் இருக்கின்ற.
01. கிண்ணியாவில் 07ம் திகதி சூரிய அஸ்த்தமனம் 6.24 மணிக்காகும். இவரது சாட்சியத்தின் படி நோன்பு திறப்பதற்கும் மஃரிப் தொழுவதற்கும் இவர் எடுத்துக்கொண்ட நேரம் 11 நிமிடங்கள் மாத்திரமே. இதில் நடைமுறைச் சாத்தியமற்ற வழுக்கள் தெரிகின்றன. 6.24 மணிக்கு அதான் ஒலித்தால் வழமை போல 6.34 மணிக்கு இகாமத் சொல்லித் தொழுதால் தொழுகை முடிவடைவதற்கு 10 நிமிடங்களாவது எடுக்கும். அவ்வாறாயின் தொழுகை முடிவடையும்போது நேரம் 6.44 ஆக இருக்கும். இருந்தாலும் இந்த நபர் 6.35க்கு தொழுகையை முடித்துக்கொண்டதன் பின்னர் பிறையைக் கண்டதாகச் சொல்கின்றார். தொழுகை முடிவடைவதற்கு முன்னரே 6.38க்கு சந்திரன் அஸ்த்தமித்துவிட்டது என்பது இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
02. அவ்வாறே அவர் சொல்வது போலவே 6.35 மணிக்கு அவர் பிறையைக் கண்டிருந்தால் அது சாத்தியமானதே. என்றாலும், பிறை வானிலே 6 நிமிடங்கள் இருந்தாகவும் அவர் சொல்கின்றார். அவ்வாறாயின் அவர் இறுதியாக பிறையைக் காணும்போது நேரம் 6.41. ஆனால் 6.38 மணிக்கே சந்திரன் அஸ்த்தமித்துவிடுகின்றது. இந்த நேர வித்தியாசம் 3 நிமிடங்கள் மிகச் சொற்பமெனப் புறக்கணித்தாலும், சூரிய அஸ்த்தமனத்தின்போது 2.5 பாகை உயரத்தில் இருந்த சந்திரன் 6.35 ஆகும் போது தொடுவானிலிருந்து 1 பாகை உயரத்தில் இருக்கும். தொடுவானுக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஒளிப் பலயீனமான பிறையை தொலைநோக்கியினூடாகவும் காண முடியாது. ஏனெனில் புவிப்பரப்பின் மேலாகப் பரவியிருக்கும் வளிமண்டல நீராவி மற்றும் தூசு மண்டலமானது இந்தச் சந்திரனை பார்வைப் புலத்தைவிட்டும் மறைத்துவிடும்.
நாம் தொடர்பு கொண்ட இன்னும் பலர் தாம் பிறை கண்டதாக சூரிய அஸ்த்தமனத்தின் முன்னால் உள்ள நேரத்தையும் (06.15), சந்திர அஸ்தத்தமனத்தின் பின்னாலுள்ள நேரத்தையும் (06.55) தெரிவித்தனர். இவை அலசலுக்கு இடமின்றி நிராகரிக்கப்படுவனவாகும்.
பிறை ஆய்வில் தனக்குத்தானே முரண்பட்ட Dr ஆகில் அஹ்மத்
அஹ்மத் ஜம்ஷாத்(அல் அஸ்ஹரி)
சகோதரர் ஆகில் அஹ்மத் அவர்கள் எழுதிய கட்டுரையை மையபப்டுத்தி நான் எழுதிய பிறை ஆய்வு கட்டுரையை ஏலவே பல இணையதளங்கள் வெளியிட்டிருந்தன.
இந்த அடிப்படையில் ஆகில் அஹ்மத் அவர்கள் தனக்கு மறுப்பு கொடுத்தவர்களுக்காக தனியான மறுப்பு விளக்கம் ஒன்றை ஒரு இணையளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.அதில் ஆகில் அஹ்மத் அவர்கள் கொடுத்திருக்கும் பிறை பற்றிய விளக்கம் தனது முதலாவது கட்டுரைக்கு நேரடியாக முரண்படுகிறது.இவருடைய முரண்பட்ட கருத்தை பதிய முன்பு சில அவதானங்களை அவரின் ஆய்வில் குவிக்க வேண்டியுள்ளது.
சவூதி அறிஞருடனான தொடர்பு பிறையை தீர்மானிக்குமா?
தான் கூறும் கூற்று சரியானதுதான் என்று அவர் வைக்கும் வாதத்துக்கு உறுதுணையாக சவூதி அறிஞர் ஒரிருவருடன் தனக்கு தொடர்பு இருப்பது என்பதை ஒரு அளவுகோளாக முன்வைத்துள்ளார்.
சவூதி அறிஞருடன் தொடர்பு வைத்துள்ள அவர் சவுதியின் பிறை தொடர்பான ஆய்வு மைய்யத்தின் உறுப்பினர்களுடன் தொடர்பை வைத்திருந்தால் அவர் இந்த பிழையான முடிவுக்கு வந்திருக்க மாட்டார். சவூதி உட்பட அரபு நாடுகளின் பிறை ஆய்வு மைய்யத்தின் முடிவு இவர் கூறும் ஆய்வுக்கு முற்றிலும் மாறுபட்டே வந்துள்ளதை அவர்கள் வெளியிட்டிருக்கும் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
அரபு நாடுகளின் பிறை மற்றும் விண்வெளி ஆய்வு மைய்யத்தின் முடிவு என்ன?
ஆக்கில் அஹ்மத் அவர்கள் தனது கட்டுரையில் பிறை தொடர்பாக வைக்கும் ஆய்வு அரபு நாடுகளின் வானியல் ஒன்றிய மைய்யத்தின் ஆய்வுக்கு முரனப்டுகிறது என்பதை அரபு நாடுகளின் வானியல் ஆய்வு மைய்யத்தின் உறுப்பினர்கள் உருதிபடுதுகின்றனர்.
சென்ற ரமலான் மாதத்தின் முதல் பிறை தொடர்பான ஆய்வில் சவூதி எகிப்து கட்டார் ஐக்கிய அரபு இராச்சியம் குவைத் பஹ்ரைன் போன்ற நாடுகளில் எட்டப்பட்ட முடிவையும் ஆய்வையும் அவதானிக்கும்போது ஆகில் அஹ்மத் அவர்கள் கூறும் ஆய்வு அப்பட்டமான பிழை என்பதை அறிய முடிகிறது.
சவுதியில் சென்ற ஷாபான் மாதம் பிறை 29 , 08-07-2013 திங்கட்கிழமை மாலை ரமலானுக்கான பிறையை அவதானிக்கும் முகமாக அரபு நாடுகளின் வானியல் விண்வெளி ஆய்வு மையத்தின் அறிஞர்கள் கூறிய அறிக்கைகள் பின்வருமாறு.
“ஷாபான் மாதம் பிறை 29 ஐ பூர்த்தியான 08-07-2013 அன்று திங்கட்கிழமை ரமலான் மாதத்துக்கான பிறை பிறக்கின்றது.பிறை திங்கட்கிழமை பிறந்தாலும் அப்போது அப்பிறையின் வயது 9 மனித்தியாளங்கலாகும்.
பிறை வெற்றுக்கண்ணுக்கு தென்பட பிறையின் வயது குறைந்தது 15 மணித்தியாலங்களாவது இருக்க வேண்டும்.தொலைநோக்கியால் பார்க்க வேண்டும் என்றால் பிறையின் வயது குறைந்தது 12 மணித்தியாளங்கள் இருக்க வேண்டும் எனவே 15 மணித்தியாலத்தை கொண்ட பிறை மறுதினமான செவ்வாய்கிழமை என்பதால் அத்தினத்தில் பிறையை காண முடியும்.”
இவ்வாறு அரபு நாடுகளின் பிறை விண்வெளி ஆய்வு மைய்யத்தின் முடிவு அமைந்திருந்தது.
இந்த அறிக்கையையும் சகோ ஆகில் அவர்களின் கூற்றையும் நோக்கும்போது பல முரண்பாடுகள் வெளிப்படுகின்றன.
அறிவியலுக்கே முரண்படும் ஆகில் அஹ்மத் அவர்கள்
முரண்பாடு ஒன்று: தனது ஆய்வு வானவியல் ஆய்வாளர்கள் ஆய்வின் அடிப்படையில்தான் அமைந்தது எனவே கிண்ணியாவில் பிறைபார்த்த தினம் பெருநாள் இல்லை என்று அறிவித்த அறிவிப்பு சரியே என்று கூறுகிறார். குறித்த தினத்தில் தென்பட்ட பிறையின் தங்கும் நேரத்தையும் சூரியன் அஸ்தமன நேரத்தையும் வைத்து பார்க்கும்போது எந்த வானவியல் ஆய்வு மையமும் இவர் கூறுவதுபோல் குறித்த தினத்தில் பிறை தென்பட வாய்ப்பே இல்லை என்று கூறவில்லை.
குறித்த தினத்தில் வானியல் ஆய்வு மைய்யத்தின் சில தரவுகளை வைத்திவிட்டு அந்த தரவின் மூலம் இவராக ஒரு முடிவை எடுக்க முயற்சி செய்கிறார் என்பதை தெளிவாக அறிய முடிந்தது.
வானியல் ஆய்வாளர்கள் எவருமே சூரியன் மறைந்ததில் இருந்து 14 நிமிடங்கள் தங்கக்கூடிய 16 மணித்தியால பிறையை வெற்றுக்கண்களாலேயே பார்க்க முடியும் என்று கூறி இருக்க தொலைக்காட்டியாலும் அந்த பிறையை பார்க்க முடியாது என்று இவராக கூறுகிறார்.
இந்த ஆய்வின் அடிப்படையில் நோக்கும்போது இலங்கையில் 07-08-2013 புதன் கிழமை பின்னேரம் கிண்ணியாவில் கண்ட பிறை உறுதியாகிறது.
கிண்ணியாவில் கண்ட பிறையின் வயதும் பிறை தங்கிய நேரமும் சர்வதேச ஆய்வு மைய்யங்களின் ஆய்வுக்கு ஒத்தே வருகிறது என்பதும் உறுதியாகிறது.
முரண்பாடு இரண்டு: ஒருவரின் ஆய்வுக்கு மறு ஆய்வு கொடுக்கும்போது ஒருவர் முரண்படுவது என்பது இயல்பானதும் சுட்டிக்காட்டும்போது உண்மையை ஏற்றுகொள்ள வழிவகுப்பதுமானதுமாகும்.ஆனால் சகோ ஆகில் அஹ்மத் அவர்கள் தான் சொன்ன கூற்றுக்கே தானே முரண்பட்டு தனக்கு தானே முரண்பட்ட உண்மையை அதிகாமனவர்கள் கவனித்திருக்க மாட்டீர்கள்.
சகோதரர் ஆகில் அவர்களின் முதல் கட்டுரையில் அவர் கூறியதை கவனியுங்கள்.
“இத்தினத்தில் சூரிய உதயத்திலிருந்து (காலை 5.58) சூரியனைப் பின்தொடர்ந்து வந்த சந்திரன் (காலை 6.04) கிண்ணியாவின் மேற்கு வானில் மாலை 6.38 மணிக்கு அஸ்த்தமிக்கின்றது. இப்போது சந்திரனின் பிரகாசம் 0.53 வீதம் மட்டுமே. சூரியன் அஸ்த்தமித்ததன் பின்னர் 14 நிமிடங்கள் மாத்திரமே சந்திரன் வானில் தரித்திருக்கும்.
சூரியன் அஸ்த்தமிக்கின்ற கணத்திலிருந்து சந்திரன் அஸ்த்தமிக்கின்ற இந்தப் பதிநான்கு நிமிடங்களுக்கும் பிரகாசத்தில் மிகவும் நலிவான இந்தச் சந்திரனின் விம்பமானது வெற்றுக் கண்களுக்கோ அல்லது தொலைநோக்கிகளுக்கோ பிறையாகத் தென்படும் வாய்ப்பு இல்லை. “
இவ்வாறு முதல் கட்டுரையில் கூறிவிட்டு அவரது இரண்டாவது கட்டுரையில் தனக்கு தானே முரண்படுவதை பாருங்கள்.
“அமாவாசைக்குப் பின்னர் புவியிலுள்ளவர்களுக்கு சந்திர விம்பம் (பிறை) தோற்றுவதற்கு சூரிய-சந்திர-புவி இடைக்கோணம் 7 பாகையாவது இருக்க வேண்டும். இது தொலை நோக்கிக்குரிய பெறுமானமாகும். வெற்றுக் கண்களுக்கு இப்பெறுமானம் 9.2 பாகையாக இருக்க வேண்டும். கடந்த 07.08.2013 ம் திகதி கிண்ணியாவுக்கு சூரிய அஸ்த்தமனத்தின் போது இப்பெறுமானம் 08°:12′:55″ ஆகும். அதே வேளை சந்திர அஸ்த்தமனத்தின் போது இது 08°:18′:14″ ஆக இருந்தது. இப்பெறுமானம் தொலை நோக்கிகளுக்கு சந்திர விம்பம் தோற்றம் தரப் போதுமானதாகும்”
முதல் கட்டுரையில் கிண்ணியாவில் 07-08-2013 புதன் கிழமை தொலைநோக்கியால் கூட பிறையை காண முடியாது என்று கூறிய இவர் இரண்டாவது கட்டுரையில் 07-08-2013 புதன் கிழமை கிண்ணியாவில் தென்பட்ட பிறையை தொலைநோக்கியால் மட்டுமே காண முடியும் என்று தனக்கு தானே முரண்படுகிறார். முரண்பாடு மூன்று: பிறை தென்படுவதற்கு சூரியன் மறைந்ததில் இருந்து 15 நிமிடமாவது தாமதிக்க வேண்டும் என்று இவர் கூறுகிறார்.ஆனால் அரபு வானவியல் ஆய்வாளர்கள் சூரியன் மறைந்ததில் இருந்து 7 அல்லது 10 நிமிடங்கள் தாமித்தாலே பிறை தென்பட வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர். அரபு நாடுகளில் பிறை இலங்கையைவிட குறைந்த நேரத்திலேயே தங்கியுள்ளது.அவ்வாறு இருந்தும் பிறை தென்பட்டு அத்தினம் பெருநாள் என்றும் அறிவித்துவிட்டனர். எகிப்து,சவூதி அரேபியா,கட்டார் போன்ற நாடுகளைவிட இலங்கையில் அதிக நேரம் பிறை தென்பட்டுள்ளது. எகிப்தில் பிறை பற்றிய விபரம் சூரியன் மறையும் நேரம்: 6:44 பிறை மறையும் நேரம் :6:49 பிறை தங்கிய நேரம்: 5 நிமிடங்கள் …………………….. சவூதி அரேபியாவில் பிறை பற்றிய விபரம் சூரியன் மறையும் நேரம்: 6:56 பிறை மறையும் நேரம் : 7:07 பிறை தங்கிய நேரம்: 11 நிமிடங்கள் …………………………….. இலங்கையில் பிறை பற்றிய விபரம் சூரியன் மறையும் நேரம்: 6:24 பிறை மறையும் நேரம் : 6:38 பிறை தங்கிய நேரம்: 14 நிமிடங்கள் மிகக்குறைந்த நேரத்தில் பிறை தங்கிய நாடுகளில் பிறை கண்டுள்ள நிலையில் அதைவிட அதிகமான நேரம் தங்கிய இலங்கையில் காணவே முடியாதாம் என்று சகோதரர் ஆகில் அஹ்மத் அவர்களும் ஜமிய்யதுள் உலமாவும் கூறியுள்ளது மிகப்பிழையான ஆய்வு என்பதை தெளிவாக உணர முடிகிறது.
முரண்பாடு நான்கு:சூரியனுக்கும் பிறைக்குமான இடைவெளி எவ்வளவு இருக்க வேண்டும் என்பதில் பல கருத்துக்கள் நிலவினாலும் நீங்கள் சொல்வதுபோல் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பார்வைக்கோணம்
10°:47′:05″ என்ற அடிப்படையில் இருக்க வேண்டும் என்று கூறுவது உறுதியான அறிவியல் ஆய்வா?.
சர்வதேச விண்வெளி ஆய்வாளர்கள் இந்த அளவுகோலை மைய்யப்படுத்தி செய்த ஆய்வுகள் பலபோது பொய்பிக்கப்பட்டதையும் அவை தவறான ஆய்வாக அமைந்துள்ளது என்பதையும் அறியமுடிகிறது.
நீங்கள் சொல்லும் நடைமுறை ரீதியான அளவீடுகள் பல சந்தர்பத்தில் கோட்பாட்டு ரீதியான அளவீடுகளை பொய்ப்பித்துவிடுகின்றன.
1992 ஆம் ஆண்டு மேட்கதைய நாடுகளான அமெரிக்க ஐரோப்பிய வானியல் ஆய்வு மைய்யங்கள் உட்பட கிழக்கத்தேய நாடுகளான ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வானியல் ஆய்வு மைய்யங்கள் அனைத்துமே ஏகோபித்து 1992 ரமலான் பிறை29 யில் பெருநாள் பிறையை வெற்றுக்கண்களால் காணவே முடியாது என்று அறிவித்தனர்.ஆனால் அந்த தினத்தில் அறிவியளின் ஏகோபித்த முடிவுக்கு மாற்றமாக உலகத்தில் அணைத்து பகுதியிலும் பிறை வெற்றுக்கண்களால் காணப்பட்டு பெருநாள் கொண்டாடடப்பட்ட பேருண்மையை உலகம் அதிர்ச்சியாக கண்டது.
இதே தினத்தில் பிறையை காண முடியாது என்று இவர்கள் சொன்ன காரணத்தில் ஒன்றுதான் சூரியனுக்கும் சந்திரனுக்குமான(பிறை) இடைவெளி பார்வைக்கோணமான 7° என்ற பெருமானதைத்விட மிகவும் குறைந்தே கானபப்ட்டது என்பதுவாகும்.நிலை இவ்வாறு இருக்க உலகத்தில் உள்ள அணைத்து வானவியல் ஆய்வுகளையும் பொய்பித்து அதே தினத்தில் உலகத்தில் பெரும்பாலான இடங்களில் வெற்றுகண்ணால் பிறை காணப்பட்டது.
இந்த அடிப்படையில் இலங்கையில் கிண்ணியாவில் சென்ற புதன்கிழமை பிறைபார்தது அறிவியலுக்கும் இஸ்லாமிய சாட்சிகள் அடிப்படையிலும் முரண்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
வெறும் அறிவியலின் உறுதிப்படுத்தப்படாத கோட்பாடுகளையும் கணிப்புகளையும் முன்னிறுத்தி இஸ்லாமிய சாட்சிகளை பொய்ப்பிப்பது எந்த வகையிலும் ஏற்றுகொள்ள முடியாது.
அறிவியலில் பொய்பிக்கப்படாத கோட்பாடுகளும் உள்ளன என்பதை நாம் மறுக்கவில்லை.அவை நீங்கள் சொல்லும் அளவுப்பெருமானங்களை கொண்டு அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சகோதரர் ஆகில் அஹ்மத் அவர்களின் கட்டுரையில் இன்னும் பல பிழைகளும் முரண்பாடுகளும் இருந்தபோதும் அவற்றை அடுத்ததடுத்த கட்டுரைகளில் தெளிவுபடுத்துகிறேன் இன்ஷா அல்லாஹ்.
அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி)
பிறை விவகாரம் – ஜம்மியத்துல் உலமா பிறைக் குழுவின் 2 ஆவது விளக்கம்
(Dr. Aqil Ahmad)
கிண்ணியாவின் ஷவ்வால் தலைப்பிறைத் தகவல் நிராகரிக்கப்பட்டமை தொடர்பான எனது கட்டுரைக்கு வாசகர்களால் எழுதப்பட்ட பின்னூட்டல்கள் அனைத்தையும் வாசித்தேன். http://www.jaffnamuslim.com இவ்விணையத்தளத்தில் இதுகாறும் பிரசுரமான கட்டுரைகளுள் மிக அதிகப்படியான பின்னூட்டல்களைப் பெற்ற கட்டுரை இதுவாகத்தான் இருக்கவேண்டும் என நினைக்கின்றேன். பலவாறும் பின்னூட்டல்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றை எழுதிய அத்தனைபேருக்கும் எனது நன்றிகள்.
இந்த விடயம் இன்னும் விரிவான விளக்கத்தை வேண்டி நிற்கின்றது என்பதே இந்தப் பின்னூட்டல்களின் பின்னான எனது புரிதலாகும். அதனை வழங்குவது இவ்விணையத்தைத் தரிசிக்கும் ஆயிரக் கணக்கானோருக்கு பயன் மிக்கதாக இருக்கும் என்பதனால் இதனை எழுதுகின்றேன். இந்த நற்கருமத்திற்கு வழிகோலியமைக்காக இணையத்தில் பின்னூட்டல் தந்த அத்தனைபேருக்கும், உண்ணாட்டிலும் வெளிநாடுகளிலுமிருந்து மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி மூலமும் விபரம் கேட்டவர்களுக்கும் அல்லாஹ் அருள்பாலிக்கட்டும்.
விளக்கமளிப்பதனை இலகுபடுத்துவதற்காக இந்தப் பின்னூட்டல்களை பின்வருமாறு வகைப்படுத்திக் கொள்கின்றேன்.
1. வானியலின் படி தலைப்பிறை தென்படாது என்று சொல்லப்பட்ட நாளில் தலைப்பிறை பார்க்கச் சொன்னது ஏன்?
2. ஜம்இய்யதுல் உலமாவுக்கு இந்த தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கியது யார்?
3. மருத்துவரான எனக்கும் வானியலுக்கும் ஆன தொடர்பு என்ன?
4. வானியலின் நம்பகத் தன்மை எத்தகையது?
5. வானியலின் விபரங்களை ஷரீஆ விடயத்தில் பிரயோகிக்க முடியுமா?
போன்ற பதிலளிக்கப்பட வேண்டிய நியாயமான விடயங்களோடு, நாம் அறிந்தது மாத்திரமே சரி எனும் ஒருதலைப்பட்ஷமான தன்பக்க நியாயத்திற்கான வாதாட்டங்களும், எள்ளிநகையாடும் விமர்சனங்களும், உண்மை யாதெனக் கண்டறிவதற்கும் அறியாத ஒன்றை அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளும் ஆவல் இல்லாத நிதானமிழந்த குதர்க்கங்களும் பின்னூட்டல்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தன. “வெள்ளத்தனையதே மலர் நீட்டம்” எனும் தொல்மொழி தழுவி எறிபவரும் பயன்பெறுமாப்போல் பழம் தர முயற்சிக்கின்றேன். இன்ஷா அல்லாஹ். எனது இந்த முயற்சியை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் பிரார்த்தித்து தொடர்கின்றேன்.
முதலாவது.
வானியலின் படி தலைப்பிறை தென்படாது என்று சொல்லப்பட்ட நாளில் தலைப்பிறை பார்க்கச் சொன்னது ஏன்?
வானியலின் படி தலைப்பிறை தென்பாடுவது சாத்தியமில்லை அல்லது அற்கான வாய்ப்பு இல்லை எனச் சொல்லும் போது அதற்கான காரணங்கள் பலவாக இருக்கின்றன.
வானிலே பிறை என்றொரு பொருள் இல்லை. அது புவியிலுள்ளவர்களுக்குத் தோற்றுகின்ற சந்திரன் எனும் பொருளின் விம்பமாகும். சந்திரன் சுய ஒளி அற்றது. சூரிய ஒளியை பிரதிபலிப்பதன் மூலமே சந்திரனின் விம்பம் புவிக்குத் தெரிகின்றது. இவ்வாறு சந்திரன் தோற்றம் தருவதானது சூரிய – சந்திர – புவி இடைக் கோணம், சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் தொடுவானிலிருந்து சந்திரனின் இஸ்தானம், சந்திர அஸ்த்தமன நேரம், வளிமண்டலவியல் மற்றும் புவியில் காரணிகள், பார்ப்பவரின் பார்வைத்திறன் மற்றும் அவரது தீர்மானிக்கும் அனுபவம் என்பன செலவாக்குச் செலுத்துகின்ற பல்காரணிப் பெறுதியாகும்.
அமாவாசைக்குப் பின்னர் புவியிலுள்ளவர்களுக்கு சந்திர விம்பம் (பிறை) தோற்றுவதற்கு சூரிய-சந்திர-புவி இடைக்கோணம் 7 பாகையாவது இருக்க வேண்டும். இது தொலை நோக்கிக்குரிய பெறுமானமாகும். வெற்றுக் கண்களுக்கு இப்பெறுமானம் 9.2 பாகையாக இருக்க வேண்டும். கடந்த 07.08.2013 ம் திகதி கிண்ணியாவுக்கு சூரிய அஸ்த்தமனத்தின் போது இப்பெறுமானம் 08°:12′:55″ ஆகும். அதே வேளை சந்திர அஸ்த்தமனத்தின் போது இது 08°:18′:14″ ஆக இருந்தது. இப்பெறுமானம் தொலை நோக்கிகளுக்கு சந்திர விம்பம் தோற்றம் தரப் போதுமானதாகும். எனினும் பிறைத் தோற்றம் இன்னும் பலவான காரணிகளில் தங்கியிருக்கின்றது என்பதனை ஏலவே சொல்லியிருக்கின்றேன்.
எந்தவொரு காலத்திலும் வெற்றுக் கண்களுக்குத் தெரியக்கூடிய சந்திரனின் பிரகாசத்தின் இழிவுப் பெறுமானமுடைய சந்திர விம்பமானதுபுவியிலுள்ளவர்களின் கண்களுக்கு பிறையாகத் தெரியவேண்டுமானால் சூரிய அஸ்த்தமனத்தின் போதும் அதன் பின்னரும் சூரியனினால் ஓளிரச்செய்யப்படும் வானின் பிரகாசம் சந்திர விம்பத்தின் பிரகாசத்தைவிடக் குறைவாக இருக்கவேண்டும். இவ்விழிவுப் பிரகாசமுடைய சந்திர விம்பம் தோற்றுமளவுக்கு வானின் பிரகாசம் குறைவடைவதற்கு சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் குறைந்தபட்ஷம் 15 நிமிடங்களாவது தேவைப்படும். ஆனால் கிண்ணியாவின் மேற்கு வானில் சந்திரன் 14 நிமிடங்களே தரித்திருந்தது.
மேலும் இழிவுப் பிரகாசம் கொண்ட சந்திர விம்பம் தோற்றுவதற்கு மேற்சொன்ன பெறுமானத்தில் சூரிய-சந்திர-புவி இடைக்கோணம் அமைகின்றபோது தொடுவனிலிருந்து சந்திரனின் இஸ்த்தானம் 10°:47′:05″ பார்வைக் கோணமாக ஆவது இருக்க வேண்டும். அதாவது சூரியன் தொடுவானில் மறைகின்றபோது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் போதியளவு கோண இடைவெளி இருக்கவேண்டும். ஆனால் குறித்த தினத்தில் கிண்ணியாவில் இப்பெறுமானம் 03°:14′:56″ ஆக மட்டுமே இருந்தது.
இவை மாத்திரமன்றி மிகத் தெளிவான வானிலை (ஒளி ஊடுபுகவிடுதல்), சாதகமான அளவு வளிமண்டல ஈரப்பதன் (ஒளி முறிவு), புறக்கணிக்கத் தக்க வளிமண்டல மாசுக்கள் (ஒளித்தடை) போன்ற சாதகமான நிலைமைகளின்போது மேற்சொன்ன பெறுமானங்கள் அனைத்தும் சாதகமாக அமையுமாக இருந்தால் மிகவும் ஒளிப்பலம் குன்றிய சந்திர விம்பமானது பிறையாகத் தோற்றம் தரும். ஆனால் குறித்த தினத்தில் இவை தேவையான பெறுமானங்களை எட்டவில்லை என்பதனால் அத்தினத்தில் தலைப்பிறை தென்படுவது சாத்தியமில்லை. இது வழமையான இயற்கையின் சாதாரண நிலைமைகளின் போதாகும்.
இருந்தபோதும், நாம் தலைப்பிறையைத் தேடும்படி மக்களைக் கேட்டுக்கொண்டோம். இதற்குப் பின்வரும் நியாயங்கள் உள்ளன.
இத்தினத்தில் சூரிய அஸ்த்மனத்தின் பின்னர் இலங்கையின் மேற்கு வானில் சுமார் 15 நிமிடங்கள் வரை சந்திரன் பயணிக்கின்றது. மேலும் தொலைநோக்கிகளுக்குத் தோற்றக்கூடிய சூரிய-சந்திர-புவி இடைக்கோணப் பெறுமானம் எட்டப்பட்டிருக்கின்றது. அசாதாரணமாக சந்திர விம்பம் தோற்றுகின்ற திரையான வானம் இருளடையுமாக இருந்தால், அதாவது சந்திரன் நிலைகொண்டிருக்கும் இடம் தவிர்ந்த வானின் ஏனைய பகுதிகள் அனைத்தும் மேகங்களால் சூழப்பட்டு இருளடையுமாக இருந்தால் ஒருவேளை சந்திர விம்பம் பிறையாகத் தோற்றம் தர இடமுண்டு. இது மிகவும் அசாதாரணமானதும் நிகழ்தகவு குறைவானதுமான ஒரு நிலைமையாகும். இருந்தபோதும் அசாத்தியமான இந்நிலைமைக்கும் சந்தர்ப்பம் வழங்குவதற்காகவே குறித்த தினத்தில் தலைப்பிறையைப் தேடும்படி மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இதற்கிணங்க மக்கள் பிறையைத் தேடியதில் எவ்வித தவறும் இல்லை. எது எவ்வாறு இருப்பினும் சூரியன் அஸ்த்தமிப்பதற்கு முன்னரும், சந்திரன் அஸ்த்தமித்ததன் பின்னரும் தலைப்பிறை தென்பட முடியாது என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய வெளிப்படை உண்மையாகும். இதற்கு இஸ்லாமிய மூலாதாரங்களிலோ விஞ்ஞானத்திலோ ஆதாரங்களைத் தேடவேண்டியதில்லை.
இரண்டாவது.
ஜம்இய்யதுல் உலமாவுக்கு இந்த தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கியது யார்?
இவ்வினாவுக்கு பதிலளிப்பதற்கு ஜம்இய்யதுல் உலமாவின் பொறுப்புநிலை பதவிகளில் உள்ளவர்களே பொருத்தமானவர்களாவர். இருந்தாலும் எனது கட்டுரைக்கான பின்னூட்டலின் வினா தொனித்ததனால் எனது பதிலை இங்கே பதிகின்றேன்.
இலங்கை முஸ்லிம்களின் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இலங்கை அரசினால் அங்கீகரிக்கப்பட்டு இலங்கைப் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டுள்ளது (Act No. 51 of 2000). 1924 ம் ஆண்டு முதல் இவ்வமைப்பு எட்டுத் தசாப்தங்களுக்கும் மேலாக இந்நாட்டில் மார்க்க சம்பந்தமான தீர்மானம் எடுக்கும் அமைப்பாக இயங்கி வருகின்றது. அன்று முதல் இன்றுவரை இலங்கை முஸ்லிம் சமூகம் மானசீக ரீதீயாக இவ்வமைப்பின் தீர்மானங்களை அங்கீகரித்து சிரமேற்கொண்டு நடந்திருக்கின்றார்கள்.
ஒரு காணியில் 10வருடங்களாக ஒருவர் வாடகை செலுத்தாமலும், ஒப்பந்தம் இல்லாமலும் ஒருவர் குடியிரப்பாராக இருந்தால் அக்காணி அவருக்கே சொந்தமாகி விடும் என்றிருக்கும் போது 89 வருடமாக இந்நாட்டு முஸ்லிம்களின் மார்க்க விடயங்கிளில் அரசினதும் முஸ்லிம் சமூகத்தினதும் அங்கீகாரத்துடன் தலைமை தாங்கி வழிநடாத்தியதை விட இவ்வமைப்புக்குள்ள அதிகாரம் தொடர்பாக மேலதிகமாக எதுவும் தேவையில்லை என நினைக்கின்றேன்.
ஆனாலும், ஷவ்வால் தலைப்பிறை தொடர்பான தீர்மானம் ஜம்இய்யதுல் உலமாவினால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவல்ல. மாறாக, ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரியபள்ளிவாயல் மற்றும் முஸ்லிம் விவகாரத் திணைக்களம் ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட கூட்டுத் தீர்மானமே இதுவாகும். எனவே ஜம்இய்யதுல் உலமாவை நோக்கி மாத்திரம் விரல் நீட்டுவது அவரவரது அறியாமையேயாகும்.
மூன்றாவது
மருத்துவரான எனக்கும் வானியலுக்கும் ஆன தொடர்பு என்ன?
இவ்வினாவுக்கு நான் விடை எழுதும்போது அது என்னைப் பற்றிய பெருமிதத்தை ஊரறியச் செய்வதுபோல அமைந்துவிடாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக.
முதலில் ஒருவர் குறித்த ஒரு தொழிலை மாத்திரமே செய்யவேண்டும் என்றோ அல்லது ஒரு துறையில் மாத்திரமே பாண்டித்தியம் பெற்றிருக்கவேண்டும் எனும் கட்டுப்பாடோ விதியோ எங்கேயும் இல்லை என்பதனை குறித்துச் சொல்கின்றேன்.
எனது மருத்துவப் படிப்புக்கு சமாந்திரமாகவே பிறை தொடர்பான வானியல் தேடலும் ஆரம்பித்துவிடுகின்றது என்று சொல்லலாம். 1993 இல் ஆரம்பமான இத்தேடலில் பல படிகளைக் கடந்து வந்திருக்கின்றேன். அன்று அக்கரைப்பற்றில் எழுந்த சர்வதேசப்பிறை எனும் கருத்தியல் இந்த தேடலுக்கு வழிசமைத்தது. பிறை ஆய்வாளர் மன்றம் எனும் ஒரு அமைப்பைத் தோற்றுவித்து நாம் கற்றுக் கொள்கின்ற அதே வேளை கற்றவற்றை நமது மக்களும் அறியச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டோம். பிராந்தியத்தில் சம்மாந்துறை, நிந்தவுர், பாலமுனை, அக்கரைப்பற்று போன்ற ஊர்களில் பள்ளிவாயல்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற பல மாநாடுகளில் உரைகளையும் விவரணங்களையும் வழங்கினேன்.
2005இல் பிறை நிலா எனும் 30 பக்கப் புத்தகத்தையும், 2006இல் பிறைநிலா2006 எனும் 90 பக்க புத்தகத்தையும் எழுதினேன். தொடர்ந்து பிராந்திய வானொலி பிறைஎப்எம், தேசிய வானொலி, தேசிய தொலைக்காட்சியிலும் குறித்த விடயம் தொடர்பாக பேட்டிகளை வழங்கினேன். தினகரன், எழுவான் போன்ற போன்ற தேசிய நாளிதழ்களிலும் எனது கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன.
இவை அனைத்தையும் கணக்கிலெடுத்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அதன் பிறைக்குழு அங்கத்தவர் எனும் உறுப்புரிமையை எனக்குத் தந்தது. அன்றுமுதல் இவ்வமைப்போடு இணைந்து எனது பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. புத்தளம், பேருவலை, கொழும்பு போன்ற இடங்களில் பொதுமக்களுக்கும், ஷரீஆ துறை உலமாக்களுக்கும் தலைப்பிறை தொடர்வான விளக்கமளிக்கும் மாநாடுகளிலும், ஜம்இய்யதுல் உலமாவின் பிறைத் தீர்மான மாநாட்டிலும் உரையாற்றும் சந்தர்ப்த்தை அல்லாஹுத் தஆலா தந்தான்.
நான் ICOP இணையத் தளத்தை காப்பியடித்து மொழிபெயர்த்துத் தருவதாகவும் பலர் எழுதியிருக்கின்றார்கள். உண்மை அதுவல்ல. இவ்விணையத்தளத்தின் இஸ்தாபகரும் வானியலாளருமான முஹம்மத் அவ்தா எனக்கு ஆசான். அவரிடம் நான் பல விடயங்களைக் கற்றிருக்கின்றேன். அவரது அமைப்பில் நான் ஒரு உறுப்பினராகவும் இருகின்றேன். ஆதலால் அவ்விணையத்தில் தரப்படும் தரவுகளும் எனது விடயங்களும் ஒத்திருப்பதில் தப்பில்லை என நினைக்கின்றேன். அதுதான் உண்மை.
அவர் மட்டுமல்ல http://www.moonsighting.com இணைத்தின் இஸ்தாபகரும் வானியலாளருமான கலாநிதி காலித் ஷௌக்கத் அவர்களுக்கும் நான் மாணவன் அவர்களிடம் இருந்தும் நான் பல விடயங்களைக் கற்றிருக்கின்றேன். கடந்த ஹி1431ம் ஆண்டில் நான் கண்ணியத்திற்குரிய முஸ்லிம் வானியலாளர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட விடயங்களைப் பிரயோகத்தில் கொண்டுவருவதற்காக குறித்த ஆண்டின் ஷவ்வால் தலைப்பிறை கொழும்பில் எவ்வாறு தோற்றம் தரும் என்பதனை ஒரு வரைபாக ஆக்கி வாழ்த்து அட்டை வடிவில் கலாநிதி ஷௌக்கத் அவர்களுக்கு அனுப்பியிருக்கின்றேன். எனது வேலையை அங்கீகரித்த அன்னார் சிலாகித்து பதிலளித்தது மட்டுமல்லாமல் அவரது இணைத்தின் குறித்த மாதத்திற்கான பக்கத்தில் அதனைப் பிரசுரித்துமிருக்கின்றார். அந்த இணைப்பைத் தருகின்றேன் http://www.moonsighting.com/1431shw.html தரிசித்துப் பாருங்கள். அந்தப்படத்தில் ஆகில் அஹ்மத் – ஸ்ரீ லங்கா என அரபியில் பொறிக்கப்பட்டிருப்பதனை கவனிக்கத் தவறவேண்டாம்.
இத்தனைக்கும் நான் என்னை ஒரு வானியல் ஆராய்ச்சியாளராகக் கருதுவதில்லை. நான் இப்போதும் வானியல் ஆராய்ச்சியாளாகளின் மாணவன்தான். அவர்களிடமிருந்து அவ்வப்போது எனக்குத் தேவையானதைக் கற்றுக் கொள்கின்றேன். ஒரு ஆசானிடம் கற்கின்றோம் என்பதற்காக அவரைக் காப்பிஅடிக்கின்றோம் என கருதுவது பொருத்தமானதல்ல. நமக்கு முன்னுள்ளவர்களிடம் இருந்துதான் நாம் கற்றுக் கொள்ள வெண்டும். அதனைத்தான் அல்லாஹ் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்ததாகக் கூறுகின்றான். எழுதுகோலும் எழுத்துக்களும் ஒரு சந்ததியிலிருந்து மற்றொரு சந்ததிக்கு அறிவு கடத்தப்படுவற்கான கருவிகளாகும் என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நான்காவது
வானியலின் நம்பகத் தன்மை எத்தகையது?
இதற்கு மிக அருமையான ஒரு ஆதாரம் இருக்கின்றது. ஹஜ்ஜதுல் விதாவிலே றஸூல் (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹ் புகாரியிலே வருகின்ற அறிவிப்பிலே “றஸூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் “நேரம் சுழன்றுவிட்டது. வானம் புமியைப் படைத்த நாளில் இருந்தது போன்று வந்துவிட்டது.” பின்னர் மக்களைப் பார்த்துக் கேட்டார்கள் “இது எந்த நாள்?” அன்னார் நாட்களின் பெயர்களை மாற்றப்போவதாக எண்ணிய மக்கள் மௌனமாக இருந்தார்கள். அன்னார் மீண்டும் மீண்டும் கேட்டபோது “நீங்கள் கருதுகின்ற அதே நாள்தான் இந்த நாள்” என்று மக்கள் பதிலிறுத்தார்கள். “ஒ மக்களே! இந்த நாளை, இந்த மாதத்தை, இந்த நகரத்தைப் புனிதமாகக் கருதுவது போன்று ஒவ்வொரு முஸ்லிமுடைய உயிரையும், உடைமைகளையும், மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள்……..” என்று சொன்னார்கள்.
மேற்சொன்ன ஹதீஸில் சொல்லப்படுகின்ற நாள் ஹிஜ்ரி 10 துல்ஹஜ் 9ம் நாள் வெள்ளிக்கிழமை. வெள்ளிக் கிழமை 9ம் நாளாக இருக்கவேண்டுமாக இருந்தால் மக்காவில் அதற்கு முந்திய புதன் கிழமைக்கு முந்திய புதன் கிழமை மாலை சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் தலைப்பிறை காணப்பட்டிருக்க வேண்டும். அப்போது வியாழக்கிழமை துல்ஹஜ் முதல் நாளாக அமைந்திருக்கும்.
இந்த விடயத்தை தற்போதைய வானியலின் கணிப்பீட்டின்படி பின்நோக்கி மீட்டிப் பார்ப்போமாக இருந்தால், குறித்த புதன்கிழமை மாலை சஊதி அரேபியாவிலே தலைப்பிறை தோற்றம் தரும் என்பது எதிர்வு கூறப்படுகின்றது. 1424 வருடங்களுக்கு முந்திய உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வை தற்கால வானியலால் அச்சொட்டாகக் கணித்துச் சொல்ல முடியுமாக இருக்கின்றது. அந்த ஹஜ்ஜதுல் விதா எனும் உரைகல் தற்கால வானியலின் தராதரத்திற்குச் சான்று வழங்குகின்றது. அவ்வாறாயின் தற்கால வானியலின்னால் தற்காலத்துக்குரிய விடயங்களை எதிர்வு கூறமுடியும் என்பதில் ஐயம் இல்லை. ஏற்றுக் கொள்வதும் அல்லாததும் அவரவரைப் பொறுத்தது.
ஐந்தாவது
வானியலின் விபரங்களை ஷரீஆ விடயத்தில் பிரயோகிக்க முடியுமா?
மனிதர்களையும் ஜின்களையும் தன்னை வணங்குவதற்காகவன்றிப் படைக்கவில்லை என்று அல்லாஹ் அல்குர்ஆனிலே கூறுகின்றான். தன்னை வணங்குவதற்காக மனிதனைப் படைத்த அல்லாஹ் அவனது இறுதி வேதத்தின் ஆரம்ப வெளிப்பாட்டில் நமது மாமூலான வணக்க வழிபாடுகள் எவற்றைப் பற்றியும் பேசவில்லை. மாறாக அவனது கண்ணியத்தைக் கொண்டு அவன் மனிதனுக்குக் கற்றுக்கொடுத்த இரண்டு வகையான அறிவுகளையும் கற்றுக் கொள்ளுமாறு கட்டளை இடுகின்றான்.
முதலாவது அறிவு – எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தது. அந்தக் கற்பித்தலை அல்லாஹ் நபி ஆதம் (அலை) அவர்களிலிருந்தே ஆரம்பிக்கின்றான். இது புவியிலே வாழப்போகின்ற மனிதனுக்கு அவனைச் சூழவுள்ள பௌதீகப் பொருட்கள் பற்றிய அறிவு. இந்த அறிவை மனிதன் அவனது புவியின் மீதான கிரகப்பிரவேசம் முதல் இன்றுவரை தனது ஆய்வுகளின் மூலம் வளர்த்து சந்ததி சந்ததியாக கடத்தி வந்திருக்கின்றான். அறிவின் சந்ததிப் பாய்ச்சலுக்கு ஊடகமாக இருப்பது எழுத்துக்களும் அவற்றை எழுதிய எழுதுகோல்களுமாகும்.
இரண்டாவது அறிவு – மனிதன் தனது சுய ஆற்றலால் அனுபவத்தால் பெற்றுக்கொள்ள முடியாத அறிவு. அதுதான் வஹி. இந்த அறிவை றப்புல் ஆலமீன் ஒருவனால்தான் வழங்க முடியும். இதனைத்தான் நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் றஸூல்மார்கள் சுமந்துவந்தனர்.
இவ்விரு அறிவுகளையும் ஒருங்கே சேர்த்துப் படிக்கும்படியே அல்லாஹ் ஸூறா அலக்கிலே ஏவுகின்றான். இது அவனை வணங்குவதற்கு இன்றியமையாத அடிப்படையான விடயமாகும். இறைவனை உரிய முறையில் உணர்ந்து வணங்கி வழிப்படுவதற்கும், அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்தனுப்பிய “கலீபா” எனும் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றுவதற்கும் இவ்விரு அறிவுகளும் இன்றியமையாதனவாகும்.
இவ்விரு அறிவுகளையும் ஒருங்கே கற்றுக்கொண்டபோது மத்திய காலத்தில் முஸ்லிம்கள் உலகில் ஒளி வீசினார்கள். இரு அறிவுகளையும் பிரித்து அல்லாஹ்வின் முதலாவது கட்டளைக்கே மாறு செய்ய ஆரம்பித்தபோது இந்தச் சமூகத்தில் அவலங்களும், ஓலங்களும் அதிகரித்துவிட்டது. சமூகம் கேவலப்பட்ட கையறுநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
எனவே, அல்லாஹுத் தஆலாவின் முதலாவது ஏவல்படி அறிவியலும் வஹியும் ஒன்றுசேர்க்கப்படவேண்டும். அப்போது மாத்திரமே இந்தச் சமூகம் தலைநிமிர்ந்த சமூகமாக தனது பணியைத் தொடர முடியும். இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ் எனது இந்த முயற்சியில் உள்ள குறைகளை மன்னித்து நிறைகளுக்கு நற்கூலி அளிப்பானாக.
-SLTJ
![crescent-moon[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/crescent-moon1.jpg?w=150&h=112)
Leave a comment