கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படக் கூடாது: ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்

grandpass mosqueகொழும்பு: கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய குழுவினரை பௌத்த பிக்குமார் வழி நடத்துள்ளமை கண்காணிப்பு கெமராக்களில் பதிவாகியுள்ள படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக ஆங்கில இணையத்தளம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் அருகில் இருக்கும் முஸ்லிம்களின் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்றிரவு பிக்குகள் தலைமையில் சென்ற குழுவினர் பள்ளி வாசல் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கணக்கூடியதாக இருந்தது.

இதனையடுத்து முஸ்லிம் சிலர் சிங்களவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேற்படி பள்ளிவாசலை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என சிங்கள ராவய அமைப்பு உள்ளிட்ட பௌத்த அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படக் கூடாது: ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்

கொழும்பு, கிராண்ட்பாஸ் மோலவத்தை பள்ளிவாசலை அந்த இடத்திலிருந்து எந்த காரணம் கொண்டும் அகற்ற கூடாது என்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,

பள்ளிவாசல் தாக்குதலுக்கு எதிராக முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்டனங்களை வெளியிட வேண்டும். இதனை அவர்கள் செய்யாது போனால், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அமைச்சர்களுக்கு எதிராக நாம் போராட வேண்டிய நிலை உருவாகும்.

நேற்று மாலை மஃரிப் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த போது பெரும்பான்மை மக்களில் ஒரு குழுவினரும் பௌத்த பிக்குகள் சிலரும் இணைந்து பள்ளியைத் தாக்குவதற்காக திரண்டனர்.

மஃரிப் தொழுகை நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது பள்ளியைத் தாக்க ஆரம்பித்தவர்கள் பள்ளிவாசல் முழுவதையும் சேதப்படுத்தியுள்ளனர்.

பள்ளியை காவிக் காடையர்கள் தாக்கிக் கொண்டிருக்கும் போது பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

மட்டுமன்றி பள்ளி முழுவதுமாக தாக்கப்படும் வரை அவர்கள் எந்தவிதமான எதிர் நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இதனால் பள்ளிவாசலின் அனைத்துக் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளன. பள்ளியின் வாயிற் கதவு அகற்றப்பட்டு அருகில் இருந்து அழுக்கு ஓடைக்குள் வீசியெறியப்பட்டுள்ளது. பள்ளியை தொடர்ச்சியாக உடைத்து நாசமாக்கும் முயற்சியில் குறித்த குழுவினர் ஈடுபட்டனர்.

அங்கு கூடியிருந்த அக்குழுவினரை பொலிசார் வெளியேற்றாமல் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு சென்ற தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் உடனடியாக அவர்களை கைது செய்து பள்ளியின் இடத்தை விட்டு ப்புறப்படுத்துமாறு பொலிசாரிடம் வேண்டிக் கொண்டார்கள். இருப்பினும் பொலிசார் அவர்களை கைது செய்யவோ அல்லது அந்த இடத்தில் இருந்து வெளியேற்றவோ முயற்சிக்கவில்லை.

ஆனால் பள்ளியை உடைக்க வந்த காடையர்களை வெளியேற்றுவதை விடுத்து பள்ளியை பாதுகாப்பதற்காக அங்கு கூடிய முஸ்லிம்களை எப்படியாவது வெளியேற்றிவிட வேண்டும் என்பதில் பொலிஸார் கண்ணும் கருத்தாக இருந்தனர்.

பல தடவை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை கலைந்து செல்லுமாறு கோரி பொலிஸார் பேச்சுவார்தை நடத்தினர். இருப்பினும், பள்ளியை உடைக்க வந்தவர்கள் கலைந்து செல்லும் வரை நாம் கலைய மாட்டோம் என்றும் எங்கள் உயிரைக் கூட இதற்காக இழப்பதற்குத் தயாராக இருக்கின்றோம் என்றும் அனைத்து முஸ்லிம்களும் ஒருமித்து குரல் கொடுத்தனர்.

இந்த தாக்குதல் பின்னணியில் சிங்கள ராவய இருக்கின்றதோ எனவும் எமது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சம்பவத்தை பெரிதும் படுத்தும் வகையில் காட்டமான வார்த்தைகளை பிரயோகித்துள்ளார். இன உறவை பாதிக்கும் வகையில் காட்டமான வார்த்தைகளை பிரயோகிப்பதை அமைச்சர் சம்பிக்க உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது. tw

Published by

Leave a comment