கொழும்பு: இலங்கையின் முஸ்லிம்கள் மீதான பேரினவாத்தின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறதே தவிர, குறைந்தபாடில்லை. நேற்று மாலை கிராண்பாஸ் பள்ளிவாயலின் மீது மேற்கொள்ளப்பட்ட பேரினவாதத்தின் தாக்குதல் கொழும்பையே அதிரவைத்தது.
ஏற்கனவே பெருநாள் சர்ச்சையில் குழம்பிப்போய் பெருநாளை ஒருவாராக கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய தாக்குதல் சம்பவம் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
சம்பவம் நடைபெற்றதிலிருந்து இதுவரைக்கும் எந்த உலமாவும், அரை,குறை முஸ்லிம் மந்திரிகளும் வாய் திறக்கவில்லை.
அவர்களின் ஊடகங்கள் பெருநாள் களைப்பில் உறங்குகின்றன. இதற்கிடையில் அஸ்வர் ஹாஜி, ‘இத்தாக்குதல் வெளிநாட்டு சதி’ என கூறியிருப்பது மக்களை ஆத்திரமூட்டி இருக்கின்றது.
ஜனாதிபதி கொடுக்கும் உணவுக்கும் சலுகைக்கும் விசுவாசமாகவிருக்கம் அஸ்வர் ஹாஜியின் இத்தகைய கூற்று, பேரினவாதிகளுக்கு பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக இருக்கின்றது.
இதற்கிடையில், முஸ்லிம் தலைமைத்துவம் என்கிற நிறுவனம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகின்றது என்பதை மக்கள் எதிர்பார்க்கத் தேவையில்லை.
ஏனெனில் ஹலாலை விட்டுக்கொடுத்த பின்னர்தான் பேரினவாதத்தின் கை மென்மேலும் இந்நாட்டில் ஓங்கிச் செல்கின்றமை கவனிக்கத்தக்கது.
இதற்கிடையில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ஜனாதிபதி அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயத்தில் உறுதியளித்ததாக நேற்று இதே ஊடகத்தில் செய்தி படிக்கக் கிடைத்தது. இச்செய்தியைப் படித்துக்கொண்டிருக்கும்போது, குறித்த சம்பவத்தில் காயப்பட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன்.
இன்றைய தினகரன் வார மஞ்சரியில் குறித்த கிரான்பாஸ் பள்ளிவாயல் சம்பந்தமாக பின்வரும் தலைப்பில் ஓர் செய்தியைக் கண்டதும் வாயடைத்துப்போனேன்!
தொடர்ந்தும் மார்க்கக் கடமைகளை புரிய அனுமதி;
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு:
மத விவகார அமைச்சின் அனுமதிக் கடிதம் நிர்வாகத்திடம் கையளிப்பு:
கொழும்பில் ஓர் இவ்வாறான பேரினவாதத் தாக்குதல் இடம்பெறப்போகின்றது என்பது சில மணிநேரங்களுக்கு முன்கூட்டியே அப்பகுதி மக்களுக்குத் தெரிந்திருந்தது. பொலிஸாருக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. நிச்சயமாக இச்சம்பவம் மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கும் என்றே நான் கருதுகிறேன்.
எனினும் அரசியல் உயர்மட்ட உறுப்பினர்கள் எவரும் இதுவரைக்கும் இச்சம்பவம் குறித்து வாய்திறக்காமல் இருப்பது பல சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
ஷவ்வால் பிறைக்கு வக்காலத்து வாங்கி தேசிய வானொலியை வாடகைக்கு அமர்த்திய தலைவரும், அவருக்காக பெருநாள் திடல்களில் குரல் கொடுத்த உலமாவும் எங்கே என்றே தேட வேண்டி இருக்கின்றது.
இதைவிட, அலவி, பொளசி, காதர், ஹக்கீம் இலங்கையில் இருக்கின்றார்களா என்பதைத் தேடிப்பார்க்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் விடியும்பொழுது அவர்களின் வாயில் இருந்து ஏதாவது உதிர்கிறதா என்று பார்ப்போம்.
இந்த ஆக்கத்தைப் படிக்கும்போது இன்னுமொரு பள்ளிவாயல் இலங்கையில் எங்கேயாவது தாக்கப்படலாம். இதுதான் இன்றைய இலங்கை முஸ்லிம்களின் நிலை!…அச்சமும்கூட!!
எனவே இஸ்லாத்தைக்கூறு போடுவதற்கு மாத்திரம் ஊடகங்களையும், தனது அதிகாரங்களையும், ஆதாரங்களையும் தேடிப் பெற்றுக்கொள்ளும் இத்தகையவர்கள், இன்றைக்காவது முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்குமாறு பனிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
பேரினவாதத்தால் நாளை இப்பூமியில் ஜனாஸாக்கள் விழுமாயின் ஈமானை தன் நெஞ்சில் சுமந்த எந்தவொரு முஸ்லிமும் தாங்கிக்கொள்ள மாட்டான்.
ஷவ்வாலில் தோன்றிய ஓர் புரட்சிபோல் உங்களை நோக்கி முழு இலங்கை முஸ்லிம்களும் எழவேண்டிய துர்ப்பாக்கிய நிலையை அல்லாஹ் பாதுகாப்பானாக.

Leave a comment