வேலணை: மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து வருவது மட்டுமல்லாமல் எம்மோடு இருந்து எமக்காக அயராது பணியாற்றி வருபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே என வேலணை கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் அப்புராசா தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட செட்டிபுலம் பகுதிக்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின்னிணைப்பை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கும் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தீவகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்திகளுக்கும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்குமாக அமைச்சர் அவர்களின் தலைமை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எமது பகுதிக்கு மின்சாரத்தைப் பெற்றுத் தருமாறு நாம் அமைச்சர் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அவர் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடியதன் பயனாக இன்று இம் மின்விநியோகத்தை நாம் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.
அத்துடன் இப்பகுதிக்கு குடிநீர் வசதியை பெற்றுக் கொடுக்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்திய நிலையில் விரைவில் அதற்குரிய தீர்வு காணப்படுமென்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது வேலணை பிரதேச செயலர் திருமதி மஞ்சுளாதேவி சதீஸன் தெரிவிக்கையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிகாட்டலுக்கு அமைவாக எம்மால் எமது மக்களது தேவைகளை இனம் கண்டு பூர்த்தி செய்ய முடிகின்றது என்றும் தெரிவித்தார்.
இதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), வேலணை பிரதேச சபைத் தவிசாளர் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
நிகழ்வில் மின்னிணைப்பை உத்தியோகபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் செட்டிபுலத்திற்கான மின்விநியோகம் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் நன்மையடைவுள்ளனர்.
இதனிடையே செட்டிபுலம் வெட்டுக்குளம் புனரமைப்புப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் அவர்கள் அதுதொடர்பில் கலந்துரையாடியதுடன் புனரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு துறைசார்ந்தோருக்கு பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், செட்டிபுலம் ஐயனார் விளையாட்டுக்கழக வீரர்களுடனும் கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள் அவர்களது கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தினார்.
இதன்போது பிராந்திய ஆணையாளர் துரைராசா, பிரதேச மின் பொறியியலாளர் ஞானகனேசன், வடக்கின் வசந்தம் மின் பொறியியலாளர் கோசல, வேலணை மின் அத்தியட்சகர் செபாஸ்தியாம்பிள்ளை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
![ele4[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/ele41.jpg?w=150&h=99)
![ele4[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/ele41.jpg?w=640&h=425)
![ele5[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/ele51.jpg?w=640&h=441)
Leave a comment