கூட்டமைப்பின் முஸ்லிம் வேட்பாளர் வரலாற்றில் முன்னுதாரணமாவார்!

puvi rah– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்

-ஜுனைட் நளீமியின் கட்டுரைக்கான பதில் கட்டுரை:

அண்மையில் சில ஊடகங்களில்   வெளியான ஜுனைட் நளீமி எழுதிய ‘வட மாகாணத் தேர்தல்: கூட்டமைப்பின் முஸ்லிம் வேட்பாளர் காட்சிப் பொருளா? பலிக்கடாவா?’ எனும் தலைப்பிலான கட்டுரையை வாசிக்கக் கிடைத்தது. அவரது கருத்துக்கள் தொடர்பில் எனது கருத்துக்கள் சிலவற்றையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளதைப் போன்று இன்றைய அரசியலில், வட மாகாணத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம் ஒருவர் நிறுத்தப்பட்டிருப்பதானது அனைவரையும் வியப்பிலாழ்த்தியுள்ள ஒரு விடயமேயாகும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.
கட்சி அரசியலாளர்களாலும், சமூக ஆர்வலர்களாலும் விழியுயர்த்திப் பார்க்கப்படுபவராக த.தே. கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர் அஷ்ஷெய்க் ஐயூப் அஸ்மின் நளீமி இன்று பலரது பார்வையிலும் பிரகாசிக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த அவரை மன்னார் மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தியிருப்பது கட்டுரையாளரையும், அவர் போன்றவர்களையும் பல்வேறு கேள்விகளுக்கும் உள்ளாக்கியிருக்கின்ற போதிலும், இலங்கையின் அரசியல் வரலாற்றில் இவ்வாறெல்லாம் வேட்பாளர்கள் தமது பிறந்தகங்களுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருப்பதானது பழங்கதையாகும்.

முஸ்லிம் சமூகத்தின் மூத்த பெருந்தலைவரான மர்ஹும் சேர். ராஸீக் பரீட் தொடக்கம், ஆஸாத் சாலி, ஜவாஹிர் சாலி ஈறாக பலர் இவ்வாறு தத்தம் பிறந்த இடங்களுக்கு வெளியே வேட்பாளர்களாக அன்று தொட்டு இன்று வரையும் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். எனவே பிறந்த ஊர் வாதம், பிரதேச வாதம், வாக்குரிமை வாதம் போன்றவையெல்லாம் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒரு பெரிய விவகாரமேயல்ல.

கட்டுரையின் தொடக்கத்தில் யாழ்ப்பாணக் குடிகள், சாதிகள் வகையறாக்களையெல்லாம் குறிப்பிடும் கட்டுரையாளர், யாழ்ப்பாண தலித்துகளின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தில்தான் முஸ்லிம் வேட்பாளரை த.தே. கூட்டமைப்பினர் யாழில் புறந்தள்ளினர் என்ற ஒரு கற்பனைக் குற்றச்சாட்டை முன்வைத்து, தேர்தலின் பின்னர் எவ்வாறு இம்முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவார்கள்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். இது அவரது அரசியல் தெளிவின்மையைக் காட்டுவதாகவே உள்ளது.

19.11.1919ம் ஆண்டில் டி.எஸ். சேனநாயக்காவின் தலைமையில் நிறுவப்பட்ட இலங்கைத் தேசிய காங்கிரஸில் அங்கம் வகித்த தமிழ்த் தரப்புத் தலைமையான சேர் பொன். அருணாச்சலம் அவர்களின் காலம் முதல் 27.01.2002ம் ஆண்டில் வேலுப்பிள்ளை பிரபாகரனால் நிறுவப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றையத் தமிழ்த் தரப்புத் தலைமை வரை தமிழர்களின் அரசியல் கட்டமைப்புக்கு வெளியிலிருந்து உலகமே வியந்து நோக்கும் வகையில் அதன் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் ஒருவரைக் களமிறக்கி சரித்திரம் படைத்துள்ள த.தே. கூட்டமைப்புக்கு, வட மாகாண சபையில் ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதென்பது சிம்ம சொப்பனமாகவோ அல்லது கல்லில் நாருரிக்கும் வேலையாகவோ இருக்காது என்பதை கட்டுரையாளர் புரிந்து கொள்ள வேண்டும்.
மாத்திரமன்றி, மன்னார் மாவட்டத்தில் இம்முஸ்லிம் வேட்பாளரை த.தே. கூட்டமைப்பு நிறுத்தியுள்ளது, அம்மாவட்டத்திலுள்ள முஸ்லிம் வாக்குகளைக் கலைப்பதற்கான முன்னேற்பாடா? எனவும் அவர் பாமரத்தனமாகக் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஒரு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கு நாம் வாக்களிக்க வேண்டும் என்ற சிந்தனையும், தெளிவுமற்ற மக்களாக மன்னார் மாவட்ட முஸ்லிம் மக்களை இவர் மட்டகரமாக எடைபோட்டுக்கொண்டு இப்படியொரு கேள்வியைக் கேட்டிருப்பதானது, இவர் மாத்திரமே சிந்திக்கும் ஆற்றலைக் கொண்டவரோ? என்ற மறுதலையான கேள்வியை நமக்குள் எழச் செய்துள்ளது.

மேலும், முஸ்லிம் சமூகத்துடனான நல்லிணக்கத்தின் உண்மையான வெளிப்பாடாக த.தே. கூட்டமைப்பின் இச்செயற்பாடு இருக்க வேண்டுமாயின், அவர்கள் யாழ்ப்பாணத்தில்தான் இந்த முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தி முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும் என்றும் கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பதானது, த.தே. கூட்டமைப்பினதும், அவர்களுடன் இணக்கப்பாட்டு அரசியலுக்கு முன் சென்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டணியினதும் முழுமையான செயற்பாடுகளையும், பேச்சுவார்த்தைகளையும் அவர் முற்று முழுதாக அறிந்து கொள்ளாமல் மேலெழுந்தவாரியாத் தெரிந்து கொண்டதனால் ஏற்பட்ட எடக்கு வாதமேயாகும்.

அவ்வாறாகவெல்லாம் கட்டுரையின் தொடக்கத்தில் தனது கேள்விகளையும், கருத்துக்களையும் முன்வைத்த கட்டுரையாளர், பின்னர் தனது சந்தேகங்களிலிருந்து சற்று தெளிவடைந்தவராக போனஸ் உறுப்பினராக இம்முஸ்லிம் உறுப்பினர் வட மாகாண சபைக்கு உள்வாங்கப்படலாம் என்ற நிலைக்கு வந்து, அவ்வாறு ஒரு போனஸ் உறுப்பினராக வரும்போது எவ்வாறு அவரால் நமது சமூக சுய அடையாளத்துடன் சுதந்திரமாகச் செயற்பட முடியும்? என்ற வினாவையும் முன் வைத்துள்ளார்.

junaid naleemi
ஜூனைட் நளீமி

இந்த நிலைப்பாட்டிற்கு அவர் வந்ததன் மூலம், த.தே. கூட்டமைப்பானது மன்னார் மாவட்ட முஸ்லிம் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் குறுகிய நோக்கத்துடன் இம்முஸ்லிம் வேட்பாளரை தேர்தலில் நிறுத்தியுள்ளது என்ற அவரது முந்திய குற்றச்சாட்டினை அவராகவே மீளப்பெற்றுக் கொண்டுள்ளார் என்பதும் நமக்குத் தெளிவாகின்றது.
வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஐயூப் அஸ்மின் நளீமி ஒரு உறுப்பினராக வட மாகாண சபைக்குள் வரும்போது எவ்வாறு அவரால் சமூக சுய அடையாளத்துடன் சுதந்திரமாகச் செயற்பட முடியும்? என்கிற அவரது சந்தேகத்திற்கு, த.தே. கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்ட இமாம் அவர்களை உதாரணம் காட்டியுள்ளதும் நகைப்புக்கிடமான ஒன்றாகும்.

த.தே. கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக இருந்த ரஸீம் முகமட் இமாம் அவர்களுக்கும், தற்போது த.தே. கூட்டமைப்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஐயூப் அஸ்மின் நளீமி அவர்களுக்கும் இடையிலான அரசியல் கள அங்கத்துவ வித்தியாசம் பற்றிய விபரங்கள் தெரியாமையினால்தான் கட்டுரையாளர் அப்படியொரு கேள்வியை எழுப்பியுள்ளார்.

இமாம் அவர்கள் த.தே. கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்த நிலையில்தான், அக்கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்ட எம்.கே. ஈழவேந்தன் நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கும் மேலாகச் சமூகமளிக்காததன் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 14.12.2007ல் நீக்கப்பட்டது.

அவருக்குப் பதிலாகவே இமாம் அவர்கள் 08.01.2008ல் த.தே. கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இங்கே இமாம் அவர்கள், த.தே. கூட்டமைப்பின் உறுப்பினராகவும், வேட்பாளர் ஐயூப் அஸ்மின் நளீமி அவர்கள், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டணி சார்பான வேட்பாளராகவும் இருப்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இமாம், த.தே. கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்து கொண்டு ‘முஸ்லிம்’ என்கிற சமூக அடையாளத்தையும், அவரது சுய மரியாதையையும் எந்தளவு பாதுகாத்தார் என்ற கேள்வி அவரையும், அவர் சார்ந்த கட்சியையும் நோக்கி வினவப்பட வேண்டிய விடயமாகும்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டணி சார்பாக த.தே. கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் நிறுத்தப்பட்டுள்ள அஷ்ஷெய்க் ஐயூப் அஸ்மின் நளீமி அக்கூட்டமைப்பின் அங்கத்தவரல்ல. அவர் இந்த அரசியல் கூட்டணியின் சார்பில் வடபுல முஸ்லிம் சமூகத்திற்கென அமானிதமாக வழங்கப்பட்டுள்ள ஒரு பிரதிநிதியாகும். எனவே அமையப் போகும் வட மாகாண சபையின் முஸ்லிம் சமூகத்திற்கான தேவைகளையும், உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும் சமூக சுயமரியாதையுடைய ஒரு முஸ்லிம் செயற்பாட்டாளராக அவர் செயற்படுவார் என்பதை நாம் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

த.தே. கூட்டமைப்புடன் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டுள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தையும், அவ்வியக்கத்தின் தலைமையிலான ‘நீதிக்கும் சமாதானத்திற்குமான அமைப்பு’, ‘ஆய்வுக்கும் கலந்துரையாடலுக்குமான அமைப்பு’ என்ற மூன்று அமைப்புக்களையும் கட்டுரையாளரும், அவர் போன்றவர்களும் ‘முஸ்லிம்’ எனும் மதவாதக் கண்ணோட்டத்துடன் நோக்கியிருப்பதன் காரணமாகவே இவ்வாறான குழப்பங்களும், சந்தேகங்களும் எடுத்த எடுப்பில் இவர்களுக்கு ஏற்படுகின்றனவே தவிர, ‘மனிதாபிமானத்தையும், நீதியையும், சமாதானத்தையும் நிலை நிறுத்தும் செயற்பாட்டாளர்கள்’ என்ற பார்வையில் இந்த மூன்று அமைப்புக்களையும் நோக்கினால் இங்கே முஸ்லிம் மத அமைப்புக்கள் என்ற கருதத்திற்கு இடமின்றிப் போய் விடும்.

ஒரு அமைப்பை உருவாக்கிச் செயற்படுத்துவோர் சார்ந்துள்ள மதங்களைக் கொண்டு அந்த அமைப்புக்களையும் மத ரீதியான அமைப்புக்கள் என நோக்குவது குறுகிய பார்வையாகும்.

‘நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்’ என்பது, முஸ்லிம் மக்களுக்காக மாத்திரம் உருவாக்கப்பட்ட சமூக அரசியல் இயக்கம் அல்ல என்பதை முதலில் கட்டுரையாளர் புரிந்து கொள்ள வேண்டும். எனினும் அவ்வியக்கத்தை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளும், சமூக ஆர்வலர்களும்தான் இந்நாட்டில் முன்வந்து ஆரம்பித்துச் செயற்படுத்தி வருகின்றனர். அதற்காக இவ்வியக்கத்தை முஸ்லிம் சமூகத்துக்கு மாத்திரம் உரித்துடையதாக கட்டுரையாளர் கருதிக்கொண்டு சித்தரிப்பது அவரது பிழையான பார்வையாகும்.

இவ்வியக்கம் முஸ்லிம் சமூகத்தின் தேவைகள், பிரச்சினைகள் பற்றி கவனம் செலுத்தியிருப்பது போலவே இந்து, பௌத்த, கிறிஸ்தவ சமூகத்தினர் தொடர்பிலும் கடந்த காலங்களில் கவனம் செலுத்தி வந்திருப்பதைக் கட்டுரையாளர் அறிந்திருக்கவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

அதுபோலவே, ‘நீதிக்கும் சமாதானத்திற்குமான அமைப்பு’ மற்றும் ‘ஆய்வுக்கும் கலந்துரையாடலுக்குமான அமைப்பு’ என்பனவும் முஸ்லிம் புத்திஜீவிகளால் தொடங்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வரும் அமைப்புக்களாக இருக்கும் நிலையில், அவற்றையும் ‘முஸ்லிம்’ சமூகத்திற்கு மாத்திரம் உரித்தான மதவாத அமைப்புக்களாக கட்டுரையாளர் ‘முத்திரை’ குத்தி முஸ்லிம் சமூகம் சார்பாக த.தே. கூட்டமைப்புடன் புரிந்துணர்வு கொண்டிருப்பதாகச் சித்தரித்துக் காட்ட முனைந்திருப்பதும் முற்றிலும் பிழையான முன்மாதிரியாகும்.

நாட்டில் எத்தனையோ அமைப்புக்கள் இயங்குகின்றன. அவை ஒவ்வொன்றின் நோக்கமும், செயற்பாடுகளும் வௌ;வேறாகக் காணப்படுகின்றன. இந்த வகையில்தான் நாட்டு மக்களுக்கிடையில் நல்லாட்சி நிர்வாகத்தையும், நீதியையும், சமாதானத்தையும், இணக்கப்பாட்டு அரசியலை ஏற்படுத்துவதற்காகவும், இவை தொடர்பில் எந்தத் தரப்பினரோடும் கலந்துரையாடி கருத்துக்களைப் பெற்று ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கைகளைத் தொடர்வதற்காகவும் இந்த அமைப்புக்கள் மூன்றும் கூட்டாகச் செயற்பட்டும் வருகின்றன.

இவ்வாறான மக்கள் நலன் சார்ந்த மனிதாபிமானச் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் அமைப்புக்களுக்கு இஸ்லாமிய இயக்கப் பின்புலம் உள்ளதெனக் கூறி இந்நாட்டில் அடிப்படைவாதம், அரபு வசந்தம் போன்றவற்றைத் தேடி வரும் அரச பாதுகாப்புத் தரப்பினரின் புலனாய்வுகளுக்கு இவ்வமைப்புக்களும் உள்ளாகுமென அச்சப்படுகின்ற கட்டுரையாளரின் கற்பனை வாதத்தை சமூகம் விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. அதனை அவரின் தனிப்பட்ட மனோபாவமாகவே கொள்ள முடியும்.

இந்த முக்கூட்டு அமைப்புக்களின் பலவாறான சமூக செயற்பாடுகளில் ஒரு அம்சமே வட மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பை அடியொற்றிய த.தே. கூட்டமைப்புடனான அண்மைக்கால பேச்சுவார்த்தைகளும், புரிந்துணர்வுமாகும் என்பதை கட்டுரையாளர் முதலில் மனதில் கொள்ள வேண்டும். அவ்வாறு கருதிக் கொண்டால் இந்த அரசியல் கூட்டமைப்பானது, த.தே. கூட்டமைப்புடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள ‘வட மாகாண தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டு அரசியல் புரிந்துணர்வு’ என்பது எவ்வித கலக்கத்தையும் அவருக்கு ஏற்படுத்தாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புலிகளின் அரசியல் பிரிவாக அரச தரப்பு ஆதரவாளர்கள் இன்றளவும் கருதுவது போலவே, அரசாங்கத்தையும் பொது பல சேனாவைப் போஷிக்கும் ஆட்சியாளர்களாக முஸ்லிம் – தமிழ்ச் சமூகம் கருதுகின்றது.

புலிகளின் கடந்த காலச் செயற்பாடுகளை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிழலிலும் நின்றுவிடக் கூடாது என்பதை வலியுறுத்தும் கட்டுரையாளரும், அவர் போன்ற பிற்போக்குச் சிந்தனையுள்ளவர்களும், பொது பல சேனாவின் செயற்பாடுகளைப் போஷித்து பாதுகாத்து வரும் அரச தரப்புக் கூட்டிலேயே இன்னமும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும், அவர்களது ஆதரவாளர்களும் முண்டியடித்து இடம்பிடித்துக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம் என்பதை கட்டுரையாளர் தெளிவுபடுத்துவாரா?

அரச தரப்பு வேட்பாளராகச் சந்தர்ப்பம் கிடைக்காதபோது ஆர்ப்பாட்டம் செய்து அடம்பிடித்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் கட்சிக்கு ஊடாக எனினும் ஆளுந்தரப்பு பட்டியலிலேயே இடம்பிடித்து முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெற முயற்சிப்போரையும் இன்று நாம் கண்ணாரக் காணக்கூடியதாக உள்ளது.
இந்நிலையில் த.தே. கூட்டமைப்பில் ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளரை இந்த அரசியல் கூட்டணியினர்

நிறுத்தியிருப்பதுதானா இத்தனை கேள்விகளையும், சந்தேகங்களையும் இந்த அரச சார்புக் கட்டுரையாளருக்கு ஏற்படுத்தி அவரைக் கிலி கொள்ளச் செய்ய வேண்டும்?

இணைந்த வட கிழக்கு அலகு, தமிழீழம், நாடு கடந்த தமிழீழம் என்பதெல்லாம் த.தே. கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். என்றாலும், தற்போது த.தே. கூட்டமைப்புடன் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டணியானது செய்து கொண்டிருப்பது ‘வட மாகாண சபையில் முஸ்லிம் சமூகத்தின் தேவைகளையும், அபிலாஷைகளையும் உறுதிப்படுத்திக் கொள்கின்ற இணக்கப்பாட்டு அரசியலுக்கான புரிந்துணர்வே’ என்பதில் கட்டுரையாளர் தெளிவடைய வேண்டும்.

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது, உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சட்டத்திற்கு முரணானது என்பது வட மாகாண முதலமைச்சராக த.தே. கூட்டமைப்பினால் நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் திரு. விக்னேஸ்வரன் அவர்களுக்கும் நன்கு தெரிந்த விடயமாகும்.

இந்த நாட்டில் உயர் நீதிமன்ற நீதியரசர் பதவி வரை அமர்ந்திருந்து சட்டத்தையும், ஒழுங்கையும் நிலை நாட்டிய ஒருவரின் தலைமையில் அமையப் போகும் வட மாகாண சபையில் அம்மாகாணத்திற்குள் வாழ்ந்து வருகின்ற, மேலும் உள்வாங்கப்பட வேண்டிய முஸ்லிம் சமூகத்தின் நலன்களை மையமாகக் கொண்டே தற்போது த.தே. கூட்டமைப்புடனான புரிந்துணர்வு காணப்பட்டுள்ளதே தவிர, த.தே. கூட்டமைப்பின் ஏனைய அரசியல் கொள்கைகளிலும் உடன்பாடு காணப்பட்டு அவற்றையும் ஏற்றுக் கொண்டல்ல என்பதை கட்டுரையாளரும், ஏனையோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

‘ஆட்டை அறுப்பதற்கு முன்னால் அதிலுள்ள உறுப்பொன்றை அறுப்பதற்கு அவதிப்படுவது போல’ எங்கோ எட்டாத் தொலைவிலுள்ள விடயங்களையெல்லாம் இங்கே காலம் வரையறுக்கப்பட்டு கைக்கெட்டிய தூரத்திலுள்ள விடயங்களுக்குள் உட்செலுத்தி தமிழ் – முஸ்லிம் மக்களைக் குழப்பி ‘குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க’ முயல்வது கற்றோருக்கு அழகல்ல.

அவ்வாறான கால கட்டங்களும், நிலைமைகளும் உருவாகும்போது அவை குறித்தும் ஆய்வு செய்வதற்கும், கலந்துரையாடுவதற்கும். தகுதியான கூட்டணியாகவே நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான இக்கூட்டணி தனது செயற்பாடுகளை தேசிய மட்டத்திலும், சர்வதேசத்தின் பார்வையிலும் இன்று அடையாளப்படுத்தி நிற்கிறது.

கட்டுரையாளர் இந்த வட மாகாண சபைத் தேர்தலை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அரசியல் இருப்புக்கான ஒரு களப் பரீட்சையாகக் கருதியிருப்பதும் வன்மையாக மறுக்கப்பட வேண்டிய கருத்தாகும். மேலும், இவ்வாறானதொரு கட்டுரையை வரைந்ததன் மூலம் கட்டுரையாளர்தான் அவர் சார்ந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் றிஷாட் பதியுத்தீன், பிரதித் தலைவர்களான பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீரலி போன்றவர்களின் கிருபாகடாட்சப் பார்வைகளைப் பெற்று தற்போது அவர் வகிக்கின்ற கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து மேலும் முன்னேறிச் சென்று கிழக்கு மாகாண சபை மட்டத்தில் தனது அதிகார இருப்பை நிறுவிக் கொள்வதற்கு முயற்சி எடுத்துள்ளார் என நான் கருதுகின்றேன்.
ஏனெனில், வட மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாகத் திடீர்க் கவனம் செலுத்தியிருக்கும் இக்கட்டுரையாளர், த.தே. கூட்டமைப்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவது சம்பந்தாக மாத்திரமே அவரது கருத்துப் பகிர்வுகளை முன்வைத்துள்ளார்.

அதேபோன்று முஸ்லிம் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக விடுதலைப் புலிகளை விடவும் மோசமான அடாவடித்தனங்களில் இன்று பட்டப்பகலிலும், பகிரங்கமாகவும் செயற்பட்டு வருகின்ற பொது பல சேனாக்களுக்கு பாதுகாப்பும், போஷிப்பும் வழங்கி வருகின்ற இந்த அரசாங்கத்தின் தரப்பில் இன்னமும் முஸ்லிம் அரசியல் வாதிகள் இணைந்திருப்பது பற்றியும், இத்தனை முஸ்லிம்கள் வேட்பாளர்களாகப் போட்டியிடுவது பற்றியும் அவரது கட்டுரையில் எதுவுமே சொல்லாமல் விட்டிருப்பதானது இக்கட்டுரை எழுதப்பட்டதன் உள் நோக்கத்தை நன்கு புலப்படுத்துவதாக உள்ளது.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமானது தனிப்பட்ட ஒர் சராசரி அரசியல் கட்சியல்ல. அதுவொரு சமூக அரசியல் இயக்கமாகும்.

எனவே எந்தவொரு தேர்தலும் அதன் இருப்புக்கு சவாலாக ஒரு போதும் இருக்க முடியாது.
சமூகத்தளமே அவ்வியக்கத்தின் நிரந்தர இருப்பிடமாகும். சமூகத்தைக் கைவிட்டு விட்டு பிரதேச சபை தொடக்கம் நாடாளுமன்றம் – அமைச்சரவை வரையான ஒய்யார ஆசனங்களில் போய்க் உட்கார்ந்திருப்பதை அவ்வியக்கத்தின் அரசியல் இருப்பாகக் கொள்ள முடியாhது. எனவே, வட மாகாணத் தேர்தல் எந்த வகையிலும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினதும், அதனுடன் இணைந்துள்ள மனிதாபிமானச் செயற்பாடுகளுக்கான அமைப்புக்களினதும் இருப்பை ஒருபோதும் கேள்விக்குறியாக்கி விட மாட்டாது.

குறித்த கட்டுரையில் த.தே. கூட்டமைப்புடனான புரிந்துணர்வு தொடர்பான ஒப்பந்தம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தையும் கட்டுரையாளர் வெளிப்படுத்தியுள்ளார். ‘நல்லாட்சி’ என்பதன் அடிப்படையே வெளிப்படைத்தன்மையாக இருக்கும்போது, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான இக்கூட்டணியானது அதன் ஒப்பந்தங்களையும், செயற்பாடுகளையும் இருட்டடிப்புச் செய்ய ஒருபோதும் எத்தனிக்காது. எல்லாம் உரிய நேரத்தில் பகிரங்கப்படுத்தப்படும்.

எனினும், ஒப்பந்தம் பற்றி கருத்து வெளியிட்டுக் கட்டுரை எழுதியுள்ள கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபையின் ஆளுந்தரப்பு (அ.இ.ம. காங்கிரஸ்) உறுப்பினரான ஜுனைட் நளீமி, அவரது கட்சியின் தலைவரான அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் 09.08.2004ல் ‘.ல.மு. காங்கிரஸை விட்டு விலகி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் சென்று இணைந்து கொண்டபோது செய்து கொண்ட ஒப்பந்தத்தை வெளிப்படுத்தினாரா?

கடந்த கால் நூற்றாண்டு காலமாக முஸ்லிம் சமூகத்தை விற்றுப் பிழைப்பு நடாத்தி தத்தம் வயிறுகளை மாத்திரம் வளர்த்துக் கொண்டு வாக்காளர்களின் மனங்களைக் கவரத் தவறி, இன்று வேட்பாளர்களுக்கே பஞ்சம் பிடித்தலையும் மாமூல் முஸ்லிம் அரசியல் கட்சிகளைப் போன்று ‘நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்’ எனும் சமூக அரசியல் இயக்கத்தையும் கட்டுரையாளர் கருதியிருப்பது கவலைக்குரியது. அவரது புலமைக்கு ஒவ்வாதது!

எது எவ்வாறாயினும், அவரது கட்டுரையின் இறுதியிதியிலாவது, ‘ஆனால் முஸ்லிம் தனிக்கட்சி அரசியலினால் தமக்கான ஒரு பிரதிநிதியை யாழ். மாவட்ட முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ள முடியாது என்பதனை நன்குணர்ந்து அமையப்போகும் வட மாகாண சபையில் தமிழ்ப் பெரும்பான்மை அவையில் யாழ். முஸ்லிம்களது தேவைப்பாடுகளை ஓரளவுக்காவது பெற்றுக் கொள்ள முடியும் என்ற அரசியல் வியூகம் சாணக்கியமானதே’ என இப்புரிந்துணர்வுச் செயற்பாட்டின் உள்ளார்ந்த இரகசியத்தை கட்டுரையாளர் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது.

-புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் – காத்தான்குடி-
09.08.2013

Published by

Leave a comment