கொழும்பு: ஓர் பெருநாளைப் புறக்கணித்து, முஸ்லிம் சமூகத்தை பாதாளத்துக்குத் தள்ளிவிட்டு, இச்சமூகத்துக்கு ஓர் பத்திரிகை மாநாட்டை அல்லது வானொலிப் பேச்சை அறிவித்து விட்டால் எல்லாம் முடிந்துவிடும் என்ற அபிப்பிராயத்தில் இருந்த அ.இ.ஜ.உலமாவின் தலைவரின் திட்டம், இந்நாட்டில் இந்தளவு பாதிப்பையும், விமர்சனங்களைளயும் தோற்றுவிக்கும் என்பதை கனவிலும் ரிஸ்வி முப்தியும் அவரது நம்பிக்கைக்குரியவர்களும் நினைத்திருக்கமாட்டார்கள்.
ஹலால் பிரச்சினையையே இந்நாட்டில் இப்போது மக்கள் மறந்துவிட்டார்கள். அதனால் நாங்கள் எதைச் சொன்னாலும் இந்த சமூகம் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும் என்றே சகோதரர் ரிஸ்வி நினைத்திருப்பார்.
ஓர் முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் அறிவுபூர்வமான சமூகமாகவும், சத்தியத்தை மீறும் பட்சத்தில் யாராக இருந்தாலும், முன்வந்து கண்டிக்கும் சமூகமாகவும் இருப்பதை சகோதரர் றிஸ்வி அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அரசியல் அழுத்தத்தின் பேரில்தான் இந்நாட்டில் நீங்கள் ஹலாலை விட்டுக் கொடுத்து, ஏற்றுமதிக்கு மாத்திரம் ஹலால் ‘லோகோ’ பயன்படுத்தலாம் என்ற அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கும் அசைபோட்டதை மக்கள் அறியாதவர்களல்லர்.
இவ்வளவு தெட்டத்தெளிவான ஆதாரபூர்வமான விடயங்களை கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்தும், தங்களின் இறுமாப்பினால் சத்தியத்தைப் புறக்கணித்தீர்கள்.
ஆனால் பாவம் உங்களால் எத்தனையோ மக்கள் பெருநாள் தினத்தில் நோன்பு நோற்றிருந்தனர்.சண்டைகள் பிடித்தனர். வாக்குவாதங்களில் ஈடுபட்டிருந்தனர். இவற்றுக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?
இது சுன்னி-தௌஹீத் கொள்கை பிரச்சினையோ, தப்லீஹ்-தௌஹீத் கொள்கை பிரச்சினையோ அல்ல!
தாங்கள் உலமாக்கள் என அங்கீகாரம் வழங்கி, தங்களது அமைப்பில் அங்கத்துவம் பெற்று, ஓர் கிளையாக உங்களால் அங்கீகரிக்கப்பட்ட கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபையின் உலமாக்களால்தான் குறித்த தினம் ஷவ்வால் பிறை தென்பட்டதை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
கண்ணை மூடிக்கொண்டு தட்டிக்களித்த ஓர் பெரும் பாவத்தை உங்கள் மனச்சாட்சி ஏற்றுக்கொள்ள முடியாததால்தான் உடனடியாக ஒலி-உரையை இலங்கை மக்களுக்கு வழங்கி இருந்தீர்கள். எனினும், உங்கள் உள்மனசு தடுமாறியதையும், பொய்யை அப்பட்டமாக சொன்னதையும் அறிவுபூர்வமான இலங்கை முஸ்லிம்கள் பலர் கேட்டு, சிரித்துக் கொண்டனர்.
உங்களுக்கு கீழ் இருக்கும் விசுவாசமானவர்களை வைத்துக்கொண்டு, முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி பிளைப்பு நடத்தலாம். எனினும் பிறை விடயம் மனிதர்களால் மறைக்க முடியாது. அல்லாஹ்வின் வரையரைக்குள் வானில் மாதாந்தம் தோன்றி மறையும் ஓர் சந்திரன் அது.
அதை மனிதர்களால் மறைக்க முடியாது. இன்று இரவு இலங்கையில் தோன்றும் பிறையை உங்கள் கண்களால் பாருங்கள். எத்தனை நாள் தோன்றிய பிறை என்பதை உங்கள் மனச்சாட்சி சொல்லும்.
இதற்கிடையில் சகோதரர் றிஸ்விக்கு, தற்பொழுது கொழும்பு முஸ்லிம் அலுவலகங்களில் இருக்கும் பிரபலங்கள் வக்காலத்து வாங்கி சில ஆக்கங்களை ஊடகங்களுக்கு எழுதி வருகின்றமை வேடிக்கையானதொன்று.
உப்பு சப்பில்லாமல் இலங்கையில் கொண்டாடப்பட்ட இரு பெருநாள் தினங்களுக்குமான பொறுப்பையும், அதன் பாவத்தையும் சகோதரர் றிஸ்வி அவர்கள் ஏற்றாக வேண்டும்.
உங்களைப் போன்றவர்களால்தான் முஸ்லிம் சமூக அமைப்புக்களுக்கும், அ.இ.ஜ.உலமாவுக்கும் தொடர்ந்து இந்நாட்டில் கலங்கம் ஏற்பட்டு வருகின்றன.
இந்நாட்டு முஸ்லிம்கள் தாக்கப்படும் போது, பள்ளிவாயல்கள் உடைக்கப்படும் போது தலைமறைவாகும் சகோதரர் றிஸ்வி அவர்கள், ஓர் உலமாக்களுக்கான சபையொன்றுக்கு தவைராக இருப்பது இந்நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வண்ணம்
இஸ்மாயீல் ஏ. முனவ்வர்
கொழும்பு
![rizvi-muf1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/rizvi-muf11.jpg?w=150&h=147)
Leave a comment