ACJU பிறை பாத்தால் தொடர்பில் பின்வரும் நியமங்கள் அல்லது விதிகளைக் கடைப்பிடிக்கின்றது.
1. பிறை வெற்றுக் கண்களால் (naked eyes) மாத்திரமே பார்க்கப்பட வேண்டும்.
2. பிறை பூமியிலிருந்து பார்க்கப்பட வேண்டும்.
3. குறித்த தினத்தில் பிறையை வெற்றுக் கண்களால் காணக்கூடிய சாத்தியப்பாடு (possibility) இல்லை என முஸ்லிம் வானியலாளர் கூறுமிடத்து, அதன் பின்னர் பிறை பார்த்ததாக கூறுபவர் அல்லது கூறுபவர்களுடைய சான்றுகள் நிராகரிக்கப்பட வேண்டும்.
இதில் மூன்றாவது நியமத்தை ஆராய்ந்து பார்க்குமிடத்து அதில் பல குறைபாடுகளும் வினாக்களும் எழுகின்றன.
முஸ்லிம் வானியலாளர் உறுதிப்படுத்திய பின்னர் எத்தனை முஸ்லிம்கள் வந்து தாங்கள் பிறை கண்டதாக கூறினாலும் அவர்களுடைய சான்றுகள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படையில் உருவான விதியா? இவ்விதி அல்லது அதன் அடிப்படை இஸ்லாத்தில் எங்குள்ளது?
வெறுமனே ஒரு குறித்த அறிஞர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் என்பதை வைத்து மாத்திரம் அது சரியான விதி தான் என்று கூற முடியாது. அது இஸ்லாத்தின் அடிப்படையாகாது. அது அவருடைய தனிப்பட்ட அபிப்பிராயம் மாத்திரமே அன்றி அது ஒரு விதி அல்ல. இவ்வாறன ஒரு விதி நியாயமானதுமல்ல. ஏனெனில் வானியல் அறிஞர்கள் கூட பிழை விடக்கூடிய சாத்தியப்பாடு உண்டு. மட்டுமன்றி இவ்வாறு குறித்த ஒரு தினத்தில் பிறையை வெற்றுக்கண்களால் பார்க்க முடியாது என்று முன்கூட்டியே சொல்வது விஞ்சான ரீதியில் ஒரு எதிவுகூறல் அல்லது கருதுகோள் மாத்திரமே.
எதிர்வுகூறல்கள் ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர நிறைய சந்தர்ப்பங்களில் பொய்ப்பிக்கப்படுகின்றன. மேலும் இது ‘சாத்தியப்பாடு’ எனும் விடயத்தில் தங்கியுள்ளது. எனவே பொய்ப்பிக்கப்படத்தகுந்த எதிர்வுகூறலை முழுமையாக ஏற்றுக்கொண்டு நேரடியாக கண்ணால் கண்ட சாட்சியை அல்லது சாட்சிகளை நிராகரிக்க முடியாது. அவ்வாறாக ஒரு விதி அறிவுபூர்வமனதுமல்ல நியாயமானதுமல்ல. இவ்வாறன நியாயமற்ற விதி ஒன்றை வைத்து இஸ்லாமிய விடயங்களை தீர்மானிக்க முடியாது. அதற்கு இஸ்லாத்தில் இடமுமில்லை.
மேலும் இம்மூன்றாவது நியமத்தில் சாத்தியப்பாடு அல்லது நிகழ்தகவு என்ற விடயம் காணப்படுகின்றது. அதாவது, பிறையை குறித்த தினத்தில் வெற்றுக் கண்களால் பார்க்க முடியாது என்பது எந்தளவு சாத்தியம் என்பது கேள்விக்குரியது.
மேலும் வெற்றுக் கண்களால் பிறை பார்க்கப்பட வேண்டும் என்பது யுஊதுரு வின் நியமமாகும். சஊதியின் நியமப்படி கருவிகள் மூலம் பார்ப்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இங்கு ACJU வின் மூன்றாவது நியமத்தில் ஒரு வானியலாளர் குறித்த தினத்தில் பிறையை வெற்றுக் கண்களால் பாக்க முடியாது என வெறுமனே வாயால் மாத்திரம் கூறி விட முடியாது. கருவிகளைப் பயன்படுத்தி அவதானங்களை மேற்கொண்ட பின்னரே அதனைக் கூற முடியும்.
எனவே இங்கு கருவிகள் பயன்படுத்தப்படுகின்ற அதேவேளை, ஏன் முதலாவது நியமத்தில் வெற்றுக் கன்களை மாத்திரம் பயன்படுத்த வேண்டும்? ஏன் கருவிகளை பயன்படுத்த முடியாது? கருவிகளைப் பயன்படுத்தி பிறையை அவதானிக்கின்றபோது பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் தானே…?
ஒரு பிழையான முடிவு இதுவரை கேள்விக்குட்படுத்தப்படவில்லை என்பதற்காக அது எப்போதும் சரியான முடிவுதான் எனக் கூற முடியாது. அம்முடிவு தற்போது கேள்விக்குட்படுத்தப்படுவது பிழையான விடயமும் அல்ல.

Leave a comment