காத்தான்குடி: காத்தான்குடியின் பாரம்பரிய நோன்பு கலாச்சாரங்களில் ஒன்று ‘பாவா’க்களின் வருகைகளாகும். ‘ஸஹருக்கு எழும்புங்கோ கரைத்த சோற்றை திண்ணுங்கோ’ என இத்தகைய பாவாக்கள் ஒவ்வொரு ரமழான் காலங்களின் முப்பது நாட்களும் ஸஹர் நேரத்தில் உறங்கிக்கிடக்கும் மக்களை அதிகாலை வரை எழுப்பி நோன்பு பிடிப்பதற்கு அக்காலத்தில் இருந்து வந்தனர்.
இவர்கள் நோன்பு இறுதிப்பத்தில் பைகளுடனும், தஹராக்களுடனும் காத்தான்குடியின் ஒவ்வொரு வீடுகளுக்கும் வந்து பித்ராக்களைப் பெற்றுக்கொண்டு செல்வர்.
இவர்கள் எத்தனை பேர் இரவில் மக்களை எழுப்பினார்களோ தெரியாது. எனினும் தங்கள் வாசப்படியில் வந்து பித்ரா கேட்கும் ஒவ்வொரு பாவாக்களையும் எமது தாய்மார்கள் பித்ரா அரிசி, பித்ரா காசி கொடுத்து மகிழ்ச்சியுடன் அனுப்பி வைப்பார்கள்.
ஜெய்லானி, கல்முனை, பேருவளை என தர்ஹாக்களில் தொழிலின்றி குடியிருக்கும் இத்தகையவர்களை பாவாக்கள் என அழைப்பது இலங்கையில் இருந்துவரும் நடைமுறை.
ஸகாத் பெற அறுகதையுடைய 6 கூட்டத்தார்களுள் ‘பக்கீர்’ எனப்படும் பரம ஏழையும் உள்ளடங்குகின்றனர். எனினும் இந்த பக்கீர் என்ற பதத்தை அறியாத மக்கள் இவர்கள்தான் குர்ஆனில் கூறப்பட்ட பக்கீர்கள் என நினைத்து பித்ரா-ஸகாத்துக்களையும், காசுகளையும் கொடுத்துவருகின்றனர்.
சாதாரணமாக கதவைத் தட்டுவதற்கும் ஓர் தஹராவுடன் ஓர் பாட்டுடன் கதவைத் தட்டுவதற்கும் இடையில் பாவாக்கள் சிறப்படைகின்றனர். தஹராக்களுடன், இஸ்லாமிய கீதங்களைப் பாடி ‘யாமுஹியத்தீன்’ என வாசப்படியில் இலாவகமாக நுழையும் பாவாக்கள் கில்லாடிகள். இவர்களின் உருவத்திலும் பேச்சிலும் லயித்த பல தாய்மார்கள் அச்சத்துடன் தங்களிடம் இருப்பதை அள்ளி அள்ளி வழங்குவதும் வேடிக்கையாக இருந்து வருகின்றன.
இவ்வாறு நுழையும் கில்லாடிகள் எதிர்பார்த்ததை விட குறைந்தளவில் மக்கள் கொடுத்தால் அல்லது பித்ரா கொடுத்து முடிந்துவிட்டது எனக் கூறினால் தாய்மார்களுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதையும் , தான் வானை நோக்கி சபிப்பதாகவும் கூறிச் செல்வதும் இவர்களின் ஏமாற்றுவித்தைகளில் ஒன்று.
ரமழான் வந்தாலே கிழக்கைச் சேர்ந்த பலர் காத்தான்குடிக்குள் ஊடுறுவி, இரவுபகலாக எங்கேயாவது தங்கி, பித்ராக்களைப் பெபெற்றுக்கொள்வது அன்று முதல் இன்றுவரை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
காத்தான்குடிக்கு வந்திருந்த பக்கீர் பாவாக்கள் தற்பொழுது தங்களது இறுதிக்கட்டப் பணிகளை முடித்துக்கொண்டு வெளியேறேக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
இதனைத் தொடர்ந்து பெருநாள் உணவுகள், பெருநாள் காசு என்பவற்றைப் பெற்றுக்கொள்ளும் ஆவலில் பல ஊர்களைச் சேர்ந்த பல்லினத்தவர்களும் பெருநாள் தினத்தன்று வழமை போன்று காத்தான்குடிக்கு வரவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
படங்களில் ஓர் சாதாரண (நல்ல) பாவா தனது பித்ராக்களைக்களைப் பெற்றுக்கொள்ளும் போது…




Leave a comment