‘யெமனிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்’: தங்களது பிரஜைகளுக்கு அமெரிக்கா, பிரித்தானியா அவசர வேண்டுகோள்!

us-uk-MJ

லண்டன், வாஸிங்டன்: யெமன் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அந்நாடுகளில் தொழில் மற்றும் சுற்றுலா நிமித்தம் தங்கியிருக்கும் தங்களது பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்காவும் பிரித்தானியாவும் அவசர வேண்டுகோளை தற்பொழுது விடுத்திருக்கின்றன.

சென்ற வாரம் ஏற்பட்ட மேற்குலக தூதரகங்கள் தாக்கப்படுவதற்கான எச்சரிக்கைகளை அடுத்து, யெமன் மற்றும் அதனைச் சூழவுள்ள அரபு நாடுகள், ஆபிரிக்க முஸ்லிம் நாடுகளிலும் உள்ள 21 வெளிநாட்டு தூதரகங்கள் மூடப்பட்டதுடன், அவை கடுமையான பாதுகாப்புக்குள் உட்படுத்தப்பட்டிருக்கின்றன.

அமெரிக்காவின் உலவு விமானத்தின் தாக்குதலில் இன்று செவ்வாய்க்கிழமை  காலையில் 4 அல்கய்தா முக்கிய உறுப்பினர்கள் கொல்லப்பட்டதையடுத்து, இந்த உத்தரவை இருநாடுகளும் அவசரமாக விடுத்திருக்கின்றன.

கடந்த வாரம் யெமனில் அமெரிக்காவின் தாக்குதலில் 6 அல் கய்தா சிரேஷ்ட உறுப்பினர்கள் கொல்லப்பட்டதையடுத்து, இந்த அசாதாரண சூழல் மத்திய கிழக்கு மற்றம் ஆபிரிக்க முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வருகின்றது.

ஜூலை 28ம் திகதியிலிருந்து இன்றுவரைக்கும் அமெரிக்காவின் உலவு விமானத் தாக்குதலில் மாத்திரம் 17 அல்கய்தா போராளிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

ரமழான் முடிவதற்கு முன்னர் அல்லது பெருநாள் தினமாக எதிர்பார்க்கப்படும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை அல்கய்தா இயக்கத்தினர் பாரிய தாக்குதல்களை இந்நாடுகளில் நடாத்த திட்டமிட்டிருப்பதாக வெளியான செய்திகளையடுத்தும் இந்த விசேட உத்தரவை தங்களது பிரஜைகளுக்கு இரு நாடுகளும் கூட்டாக அறிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment