கொழும்பு: அண்மையில் வெலிவேரிய பிரதேசத்தில் சுத்தமான தண்ணீர் கேட்டு போராட்டம் நடத்திய சிங்கள மக்கள் மீது சிறிலங்கா இராணுவம் காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று பேர் பலியானதுடன், பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமது பணிப்புரைக்கு அமையவே வெலிவேரிய கலகம் இடம்பெற்ற பகுதிக்கு இராணுவத்தினரை பாதுகாப்பு அமைச்சு அனுப்பி வைத்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
“வெலிவேரியாவில் இடம்பெற்ற போராட்டத்தை அவதானித்து, படையினரை அனுப்பி வைக்குமாறு தாம் கோரிக்கை விடுத்தோம்.
கிராம மக்களின் கோரிக்கை நியாயமானது என்ற போதிலும் போராட்டத்தில் குழப்பம் ஏற்படக் கூடுமென்ற அச்சம் காரணமாகவே இவ்வாறு படையினரை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.
ஆர்ப்பாட்டத்தை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது பற்றிய சரியான வழிகாட்டல்கள் எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
குழப்பங்கள் ஏற்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக பாதுகாப்பு அமைச்சைத் தொடர்பு கொண்டு படையினரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.
கிராம மக்கள் அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்தால் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருக்காது.
இராணுவப் படையினரை மக்கள் ஆத்திரமூட்டியதாகவும் ஒட்டுமொத்த சம்பவத்திற்கும் இராணுவத்தினரை குற்றம் சுமத்த முடியாது” எனவும் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பொதுபல சேனா கூறி இருப்பதில் பல மாற்றுக் கருத்துக்களும் சதித்திட்டங்களும் மறைந்திருப்பதை இருப்பதை வெலிவேரியா பிரதேச மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment