– பழுளுல்லாஹ் பர்ஹான்
சாய்ந்தமருது: சாய்ந்தமருது இளைஞர் அமையம் ஏற்பாடு செய்திருந்த ‘டியுக் எடின் பார்க்’ சர்வதேச விருதுப் பிரகடனமும் இப்தார் நிகழ்வும் நேற்று (04.08.2013) பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சகவாழ்வு பிரதி அமைச்சருமான ஏ.எல்.எம்.றிசான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி எம்.ஐ.ஆதம்பாவா றசாதியினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் முன்னிலையில் ‘இளைஞராகிய நான் டியுக் எடின் பார்க் சர்வதேச விருது திட்டத்தில் இணைந்து கொண்டு கல்வி, ஆளுமை, தலைமைத்துவம், சமூகசேவை போன்ற துறைகளில் பங்காற்றுவேன் எனவும் எனது நாட்டிற்கும் எனது மதத்திற்கும் விசுவாசத்துடன் செயற்படுவேன் எனவும் எமது முதல்வர் மீது வாக்குறுதி அளிக்கின்றேன்’ என இளைஞர்கள் ‘டியுக் எடின் பார்க்’ சர்வதேச விருதுப் பிரகடனத்தை செய்து கொண்டனர்.
இதன்போது சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த 22 இளைஞர் கழகங்களைச் சேர்ந்த 250 உறுப்பினர்களுக்கு ‘டியுக் எடின் பார்க்’ சர்வதேச விருதுத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் முதல்வரினால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ், தேசிய இளைஞர் சேவைகள் மண்றத்தின் சாய்ந்தமருது நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப், வென்டர் எக்சன் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.ஜெ.எம்.ஜெசீல், சஹ்வா இஸ்லாமிய கலாபீடத்தின் தலைவர் அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.ஹாஸீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.