மட்டக்களப்பு: சிலைஉடைப்பை கண்டித்தும் குற்றவாளிகள் கைதுசெய்யடாததற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு பேரணியொன்று மட்டக்களப்பு குருக்கள்மடம் மாங்காடு பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
மாங்காடு மாணிகம்பிள்ளையார் ஆலயத்திலிருந்து புசை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணி மூன்று கிலோ மீற்றர் தூரத்திலுள்ள குருக்கள்மடம் ஐயனார் ஆலயம் வரை இடம்பெற்றது.
கோவில்கள் உடைக்கப்பட்டமை, கோவில் உடைமைகள் கொள்ளையிடப்பட்டமை ஆகியன தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை,எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பவற்றை கண்டித்தே குறித்த கவனயீர்ப்புப் பேரணி இடம்பெற்றது.
‘யாரிடம் நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா.அரியநேந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம், இரா. துரைரட்ணம், பிரசன்னா இந்திரகுமார்,அம்பாறை மாவட்ட த.தே.கூ மாகாண சபை உறுப்பினர் கலையரசன்,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர்கள்,உறுப்பினர்கள்,கோயில் தர்மகர்த்தாக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
குறித்த இப்பேரணியில் ‘ஆலய விக்கிரகங்களை சூரையாடியவர்களுக்கு இதுவரை தீர்வுதான் என்ன?’ ‘ஆலயங்களை கொள்ளையடித்த கயவர்களை உடன் கைது செய்’ ‘சைவத்தையும’ தமிழ் மொழியையும் வாழ விடு’ ‘எமது கோயில் சொத்துக்களை பாதுகாப்போம்’ என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் மக்கள் காணப்பட்டனர்.
பேரணி ஆரம்பித்து முடியும் வரைக்கும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியன்த மற்றும் பொலிஸார் ஸ்தலத்தில் காணப்பட்டனர்.
பேரணி முடிவுற்ற பின்னர் குருக்கள்மடம் ஐயனார் கோயிலில் புசை இடம்பெற்று பின்னர் முக்கிய சில உரைகளும் இடம்பெற்றன.
குருக்கள் மடம் மற்றும் மாங்காடு உட்பட பல பிரதேசங்களிலுள்ள இந்துக் கோவில்கள் இனந்தெரியாதோரினால் கடந்த மே முதலாம் திகதி உடைக்கப்பட்டதுடன் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
![DSC08267[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc082671.jpg?w=150&h=112)
![DSC08320[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc083201.jpg?w=780&h=585)
![DSC08294[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc082941.jpg?w=780&h=585)
![DSC08267[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/dsc082671.jpg?w=780&h=585)
Leave a comment